மியான்மிரில் கூடுதல் ஜனநாயகத்துடன் கூடிய புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தற்போதைய அரசு வாக்குறுதி அளித்துள்ளது.
அந்த நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கீ-யின் தலைமையிலான தேசிய ஜனநாய லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வருவதைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் யே டூட் அளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ போட்டியிட்ட காஹ்மூ தொகுயில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் கூறுகையில், “”காஹ்மூ தொகுதியில் எதிர்க் கட்சி வேட்பாளர் ஆங் சான் சூ கீ 54,676 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்” என்று தெரிவித்தது. எனினும், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஆங் சான் சூ கீ வெற்றி பெற்றார் என்ற விவரத்தை தேர்தல ஆணையம் வெளியிடவில்லை.
மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூ கீ தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது. புதன்கிழமை வரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, அந்தக் கட்சி 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆளும் ஐக்கிய ஒற்றுமை மற்றும் முன்னேற்றக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் தங்கள் தொகுதிகளை தேசிய ஜனநாயக லீக் வேட்பாளர்களிடம் இழந்துள்ளனர்.
மியான்மரில் வெளிநாட்டவரை மணந்தவர்கள் அதிபர் பதவியை ஏற்பதற்குத் தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ராணுவ ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக, பிரிட்டன் குடியுரிமை பெற்ற மைக்கேல் ஆரிûஸ மணந்த ஆங் சான் சூ கீ-யால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், ஆளும் கட்சித் தலைவர் என்ற முறையில், அரசின் முடிவுகளைத் தாமே எடுக்கவிருப்பதாகவும், அதிபருக்கும் மேலான பொறுப்பை வகிக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.