செவ்வாய்கிழமை தாக்கிய பார்னி புயலுக்கான எச்சரிக்கையுடன், ‘புயலில் செல்பி எடுக்க வேண்டாம்’ எனவும் பிரிட்டனின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நேற்று சுமார் 85 மைல் வேகத்தில் பார்னி புயல் தாக்கியது. இதனால், வேல்ஸ், கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவே, இந்த பார்னி புயலின் வேகம் குறைந்து நிலைமை சீரானது.
இந்த பார்னிப் புயலால் கடலில் மிகப்பெரிய அலைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டதால், மக்கள் பெரிய அலைகளுடன் செல்பி எடுக்கும் ஆசையில் ஆபத்தான பகுதிகளில் புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
பல்வேறு ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவரும் மக்களை பாதுகாக்கும் முயற்சியாக புயல் எச்சரிக்கையுடன் சேர்த்து செல்பி புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது