சிரியா, இராக் நாடுகளிலிருந்து வரும் அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையாக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கம் நிறைந்த நாடாளுன்றக் கீழவையில் இந்த மசோதா நிறைவேறியது.
அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கு முன்னதாக அவர்களைக் குறித்தும், அவர்களது பின்னணி குறித்தும் மிகத் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 289 வாக்குகளும், எதிராக 137 வாக்குகளும் பதிவாகின.
ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களில் சிலரும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, அதிபர் ஒபாமாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டுமென்றால், நாடாளுமன்ற மேலவையிலும் அது வெற்றி பெற வேண்டும்.
அங்கும் அது நிறைவேற்றப்பட்டால், ஒபாமா தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மசோதாவை தள்ளுபடி செய்வார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற கீழவைத் தலைவர் பால் ரயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் அமெரிக்க அரசின் தலையாய கடமையாகும்.
நாட்டுக்குள் வரும் நபர்கள், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் என்பதை உளவு அமைப்புகளால் உறுதி செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவே கூடாது என்றார் அவர்.
“வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக சிரியா போன்ற போர்ப் பகுதிகளிலிருந்து வரும் மக்களை அமெரிக்காவுக்குள் அழைத்து வருவதில் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே’ என எஃப்.பி.ஐ. உளவுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமீ நாடாளுமன்றக் குழுவிடம் கூறியிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர்ப்பு: அகதிகளை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க பொதுமக்கள் சுதந்திரச் சங்கம் (ஏ.சி.எல்.யூ) அமைப்பு கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது.
எந்த பயங்கரவாதத்தை நாம் வெறுக்கிறோமோ, அதே பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தப்பி வருபவர்களைத் திருப்பியனுப்பும் வகையில் அந்த மசோதா அமைந்துள்ளது என்றார் அவர்.
0