ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷரீஃப் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை திங்கள்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்தது.
இந்தியத் தூதரக வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த பயங்கரவாதிகள், தூதரகத்தைத் தகர்க்கும் முயற்சியில், கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர். இதையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவின் இந்திய-திபெத்திய எல்லைப் படையினரும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அங்கு பதுங்கியிருந்த மேலும் சில பயங்கரவாதிகள், இந்தியத் தூதரகத்தின் மீது 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தாக்குதல் நடத்தினர். சுமார் 25 மணிநேரம் அங்கு நடைபெற்ற சண்டையில், திங்கள்கிழமை இரவு அங்கு பதுங்கியிருந்த மற்ற பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். எனினும், எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அமர் சின்ஹா கூறுகையில், “பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், இந்தியர்கள் உள்பட அனைவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றார்.
0