Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுமந்தரனின் பதிலில் பிழையில்லை; கேள்விகளில்தான் பிழை; சம்பந்தன்

சுமந்தரனின் பதிலில் பிழையில்லை; கேள்விகளில்தான் பிழை; சம்பந்தன்

3 minutes read

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின்மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லின, பல்கலாசார, பன்மைத்துவ சமூகமொன்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்முகமாக கணிசமானளவு கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளின் ஆர்.பிரேமதாச, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் பெருமளவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் பதிவான விடயங்களாகும்.

எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இப்பேட்டியின் நோக்கம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்றுவரும் நடைமுறையை குழப்புவதாகும். அத்தகைய தீய முயற்சிகளினால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.

1949 ஆம் ஆண்டு தொடங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தமிழ் அரசியல் போராட்டம் போன்ற சமத்துவத்திற்கும் நீதிக்குமான ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாற்றின்போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழர் போராட்டம் தொடங்கியபோது அது ஜனநாயக ரீதியானதாகவும் சமாதான வழியிலானதாகவும் வன்முறையற்றதாகவுமே இருந்தது.

ஜனநாயக வழியிலானதும் சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் 70 களின் பிற்பகுதியிலும் 80களின் தொடக்கத்திலும் தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்பட்டிருப்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது. அகிம்சை வழியில் பற்றுறுதி கொண்டிருந்த தமிழ் தலைவர் செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.

2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது. நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

நீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் ஏற்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தின் அடிப்படையில் தேசியப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கும் அதன் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றமும் செழிப்பும் ஏற்பட முடியும்.

அத்தகைய தீய முயற்சிகளினால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாமெனவும் பெரும் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வொன்றைக் காணும் முயற்சியின்மீது கவனத்தைச் செலுத்துமாறு சிங்களவர், தமிழர் மற்றும் ஏனைய அனைத்து இனத்தவர்கள் ஆகிய அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது தேசியப் பிரச்சினைக்கான தீர்வுடன் நேரடியாகத் தொடர்புபடாத விடயங்கள்மீது முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக இத்தகையதொரு நிலைப்பாட்டின் பின்னால் ஒன்றுபட்டு நிற்பதிலேயே நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமானதொரு தீர்வினை அடைவதற்கான எமது வலிமை தங்கியுள்ளது என்பதை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் பல வழிகளிலும் பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்கு முன்னரும் தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு ஆளாகியிருந்தனர். ஒரு பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். தமக்கு நிகழ்ந்தவற்றைத் தமிழ் மக்கள் தவிர்க்கமுடியாதவாறு வேதனையோடு நினைவுகூர்வர். எனினும் முக்கிய பிரச்சினை தொடர்பிலான அவர்களது சிந்தனையோட்டத்தை இது சிதறடித்துவிடக் கூடாது.

தேசியப் பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்த சமாதானத்தையும் நிம்மதியையும் முழு நாட்டிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் வழங்கும். இக்குறிக்கோளை அடைவதற்காக ஒற்றுமையாகப் பாடுபடுவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More