June 2, 2023 2:03 pm

நீதித்துறை, தேர்தல் ஆணைக்குழு மீது அரசு அழுத்தம்! – சஜித் சீற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ஜனாதிபதி தலைமையிலான அரசு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் நீதித்துறை மீதும் தேர்தல் ஆணைக்குழு மீதும் அழுத்தம் பிரயோகிக்கின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை அழித்து, மக்களின் வாழ்வைச் சீரழித்து மக்களை அழிவின் விளிம்புக்குச் இட்டுச் சென்ற முன்னாள் அரசுக்கும், தற்போதைய அரசுக்கும் தேர்தல் என்ற வார்த்தையைக் கேட்டாலே அச்சம் எழுந்துள்ளது. அவர்களால் மக்களிடம் செல்ல முடியாததாலையே அந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே யானை – காக்கை – மொட்டு தரப்புக்கள் மூன்றும் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டு வருகின்றன.

2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும் தற்போது தேர்தலுக்குப் பணம் இல்லை என்று கூறுகின்றனர்.

உயர் நீதிமன்றம் மக்கள் தரப்பில் பெரும் உத்தரவு பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்க வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக இந்த அரசு தவறான வாதத்தை உருவாக்கி அதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சிறப்புரிமைக் குழுவுக்குக் அழைத்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் பக்கச்சார்பற்ற நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி செயற்படுத்தப்பட்டு வருகின்றது. சிறப்புரிமைக் குழுவின் பணிகள் முடியும் வரை இந்தச் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று அவர்களுக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரப்படுகின்றது.

எனவே, வாக்குரிமைக்காக வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் சர்வாதிகார அரசைத் தோற்கடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்