யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் தமது தந்தையை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கொலையானவரின் இரு மகன்களும், அவர்களது நண்பன் ஒருவருமான மூவர் கைது செய்யப்பட்டனர்.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று காலை கழுத்தில் பாரிய வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த இரண்டு வருடங்களாகக் குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றை அமைத்து அங்கு தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் இன்று அவரது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கொலையாவனவரின் இரு மகன்கள் மற்றும் கொலைக்கு உதவிய குற்றத்தில் மகன்களின் நண்பன் ஒருவரும் கைது செய்யப்பட்டு , கொடிகாமம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு மகன்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் இருவரும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் என்றும், பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வருகின்றனர் என்றும், தந்தை மிக மோசமாக நடந்து கொண்டமையால் அவரைக் கொலை செய்வதற்கு முடிவு செய்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள் இரண்டு அருகில் உள்ள குளம் ஒன்றினுள் வீசப்பட்டு இருந்த நிலையில், சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மீட்கப்பட்டது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.