December 10, 2023 5:26 pm

“கட்சி அரசியலைப் புறந்தள்ளிவிட்டு தமிழின இருப்புக்காகச் சேருவோம்!”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“எமது தொடர்ச்சியான போராட்டங்களே எமக்கான நீதியையும் நியாயத்தையும் எமது வாழ்வுரிமையையும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கட்சி அரசியலைப் புறந்தள்ளி எத்தகைய முரண்பாடுகளையும் ஒதுக்கிவைத்து, எமது இனத்தின் இருப்புக்காக அனைவரும் தொடர்ந்து இணைந்து செயற்பட அறைகூவல் விடுக்கின்றோம்.”

– இவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“முல்லைத்தீவு மாவட்டட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்நாட்டு சட்டங்களுக்கமைய நீதி கிடைக்காது என்பதை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டுவதற்கும் இலங்கையில் மீண்டும் ஒரு இன அழிப்பு நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்றுக் காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் எமது குறுகிய கால அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

நேற்றைய போராட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் குருந்தூர்மலை சைவத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று வழக்காடிய உறவுகளும் கலந்துகொண்டனர் என்பதுடன் அவர்கள் நீதிபதிக்கு எத்தகைய அழுத்தங்கள் இருந்தன என்பதையும் தெளிவாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச சமூகத்தின் செவிகளுக்குச் சென்றிருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இருக்கின்ற குறுகிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய இனத்திற்கு இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீதி கிடைக்காது என்பதை நாம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் தமிழர் தரப்புக்கு இருக்கின்றது. தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய இருக்கின்றோம்.

எமது தொடர்ச்சியான போராட்டங்களே எமக்கான நீதியையும் நியாயத்தையும் எமது வாழ்வுரிமையையும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கட்சி அரசியலைப் புறந்தள்ளி எத்தகைய முரண்பாடுகளையும் ஒதுக்கிவைத்து, எமது இனத்தின் இருப்புக்காக அனைவரும் தொடர்ந்து இணைந்து செயற்பட அறைகூவல் விடுக்கின்றோம்.

மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்ட சகலருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்