மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்படவுள்ளது. நிர்மாணப்பணியானது 2028ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இத்திட்டம் நிறைவடைந்ததும், மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லாமல் அவசர விபத்துகள் மற்றும் ஏனைய நிபுணத்துவ சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். இதனுடன் இணைந்ததாக, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கடந்த இரு வருடங்களில் சுகாதாரத்துறையில் 600 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ள மன்னார் பிரதேசம் வளர்ச்சியடைவதுடன், அப்பகுதி மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவையை உறுதிப்படுத்த இத்திட்டம் கைகொடுக்கும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை அடைவதில், நாட்டின் 21.7 மில்லியன் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான, சுகதேகியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டம் எமது தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்ற பிரதேசமாகும். தற்போதைய நிலையைப் போலவே எதிர்காலத்திலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இப்பகுதிக்கு வருகை தருவார்கள். போக்குவரத்து வசதிகள் மேம்படுவதன் மூலம் மன்னார் பிரதேசம் பொருளாதார ரீதியில் உயர்வடையும். இத்தகையதொரு சூழலில், இப்பகுதிக்கும் மற்றும் இப்பகுதிக்கு வருகை தரும் மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு மன்னார் வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியமாகும்.
அதற்கமைய, 2028ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்த அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும். மேலதிகமாக, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை மருத்துவர்களுக்காக 243 மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் உத்தியோகபூர்வ இல்லங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதன் பணிகளும் ஒன்றரை வருடங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய சிறுவர்கள் பிரிவுக்கான பணிகளையும் இந்த ஆண்டிற்குள் ஆரம்பிக்க முடியுமென எதிர்பார்க்கிறோம்.
மேலும், உங்களது தொடர்ச்சியான கோரிக்கையாக இருந்த CT இயந்திரம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் வைத்தியசாலைக்கு வழங்கப்படும். அதன் பெறுமதி சுமார் 250 மில்லியன் ரூபாவாகும். இந்தக் கட்டட வசதிகள் மேம்படுத்தப்படும். அதேவேளை, உங்களுக்குத் தேவையான ஊழியர்களையும் நாங்கள் வழங்குவோம். வரலாற்றில் முதல் முறையாக உங்களுக்கு பயிற்சி பெறும் வைத்தியர்கள் கிடைத்துள்ளனர்.
மேலும் சில பயிற்சி பெறும் வைத்தியர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இங்கு நியமிக்கப்படவுள்ளனர். அதேபோல், தற்போது இங்குள்ள வைத்திய நிபுணர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி நாங்கள் புதிதாக 2,600 தாதியர்களை உள்வாங்கவுள்ளோம். அதில் ஒரு பகுதியினரும் இங்கு நியமிக்கப்படுவர். மேலும், சுகாதாரப் பணியாளர்களாக நியமிப்பதற்கான நபர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சிக் காலம் நிறைவடைந்ததும் அவர்களில் சிலரை இங்கு நியமிக்க முடியும்.
அத்துடன், நாங்கள் 1,100 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு நியமனங்களை வழங்க இருக்கிறோம். அதிலும் சிலர் இங்கு நியமனம் பெறுவர்.
மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக இந்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் சுகாதாரமும் வாழ்க்கைத்தரமும் உயர் நிலையை அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கடந்த இரு வருடங்களுக்குள் 600 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அந்த அனைத்துத் திட்டங்களையும் ஜனாதிபதி தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறார். இன்றைய இந்நிகழ்வில் அவர் கலந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தின் ஆதரவு நமக்குக் கிடைத்துள்ளது. அதற்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், குறிப்பாக இந்த ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உழைத்த இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட வைத்தியசாலைகளுள் மன்னார் வைத்தியசாலை மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாகும். அந்தக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். ஜனாதிபதியின் வருகையை உங்களது அந்தச் சேவைக்கு வழங்கப்பட்ட ஒரு கெளரவமாக நான் கருதுகிறேன்.
இந்த நாட்டின் மக்கள், இதற்கு இரு வருடங்களுக்கு முன்பு அதாவது 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி “வளமான நாடு – அழகான வாழ்க்கை”யை உருவாக்குவதற்காக தெளிவான மக்கள் ஆணை ஒன்றை வழங்கினர். அந்த மக்கள் ஆணை 2024 நவம்பர் மாதத்தில் மேலும் வலுப்படுத்தப்பட்டது. வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற மக்கள் ஆணையின் பிரகாரம், இந்நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் சுகதேகியான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு எமக்குள்ளது.
அதன் போது உங்களது பிரதேசம், தொழில், செல்வம் அல்லது இனம் ஆகிய எவையும் எங்களுக்குப் பொருட்டல்ல. இலங்கை பிரஜைகள் 21.7 மில்லியன் பேருக்கும் ஆரோக்கியமான, சுகதேகியான வாழ்க்கை மூலம் அழகான வாழ்க்கையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்றும் தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்:
அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை வளமான நாடும் அழகான வாழ்க்கையும் நோக்கிய மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது. இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் போலவே வடக்கு மாகாணத்தையும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி காட்டும் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அத்துடன் அந்த இலக்கை நனவாக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
மன்னார் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஒப்பந்தம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழேயே கைச்சாத்திடப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இந்தியா இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை ஒரு குடும்ப உறுப்பினருக்கான கடமையாகவும் பாரிய பொறுப்பாகவுமே கருதுகிறது. இந்நாட்டின் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் நிலையான முன்னேற்றத்திற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவோம்” என்றார்.


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டதாவது :
இலங்கையில் பல தசாப்தங்களாக வைத்தியசாலைகளுக்கு காயங்களுக்காகவும் விபத்துகளுக்காகவுமே கூடுதலாக அனுமதிக்கப்படுகின்றனர். மன்னார் புவியியல் ரீதியாக ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்பதால், மன்னார் மாவட்டத்திற்குத் துரிதமாகச் சென்றடையக்கூடிய, இலவசமாக வழங்கப்படும் தரமான சுகாதார சேவை மிக அவசியமானதாகும்.
இந்த வைத்தியசாலைக்கு ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கான CT ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ இந்த மருத்துவமனைக்குச் சிறந்த கதிர்வீச்சு வசதிகள் கிடைக்கப்பெறும்.
எனது 36 வருட அரச சேவையில் கடமையாற்றும் போது, எத்தகைய நிதிச் சிக்கல்களையும் எதிர்கொள்ளாத ஒரே காலப்பகுதி கடந்த ஆண்டாகும் என்பதை நான் கூறவேண்டும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கான பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம் காரணமாக, நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளார், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




