Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் சீனா வேண்டாம் | இந்தியாதான் என் தெரிவு | அமைச்சர் டக்ளஸ்

சீனா வேண்டாம் | இந்தியாதான் என் தெரிவு | அமைச்சர் டக்ளஸ்

3 minutes read

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும். 

இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன. எனவே அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு முன்வருகின்ற தரப்பினரிடமிருந்து அவற்றைப்பெற்று நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம். 

அதற்கு பலவாறு உள்நோக்கம் கற்பிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. சீனாவுடனான தொடர்புகள் குறித்து ஒவ்வொருவரும் பல்வேறு விடயங்களைக் கூறலாம். 

ஆனால் அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடற்றொழில்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தகவல் திணைக்களத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அமைச்சரிடம் கேளுங்கள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கேள்வி – அண்மையில் நாட்டிற்கு வருகைதந்த இந்திய வெளியுறவுச்செயலருடனான சந்திப்பின்போது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசினீர்களா?

பதில் – ஆம், மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசினேன். ஏனைய தமிழ்க்கட்சிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாமல் அவற்றைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கே விரும்புகின்றன.

இருப்பினும் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அந்தவகையில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை விவகாரத்தில் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றல், சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடாத்துதல், இப்பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வை வழங்குவதில் கவனம்செலுத்தல் ஆகிய அணுகுமுறைகளையே நான் கையாண்டுவருகின்றேன்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமியிடமும் எடுத்துரைத்தேன். இவ்விவகாரத்திலே அவர் எனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். குறிப்பாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இருதரப்பிற்கும் எந்தவொரு பயனுமில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இத்தகைய செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதையும் அவரிடம் வலியுறுத்தினேன். இதுபற்றி அவர் மாநிலங்களவையில் பேசுவதாக வாக்குறுதியளித்திருக்கின்றார்.

கேள்வி – இந்திய வெளியுறவுச்செயலருடன் மாகாணசபைத்தேர்தல் குறித்துப் பேசினீர்களா?

பதில் – இல்லை. ஏனெனில் இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றேன். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று நான் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றேன். தற்போது இந்திய வெளியுறவுச்செயலரும் அதனையே வலியுறுத்தியிருக்கின்றார்.

ஆனால் கடந்த காலத்தில் 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவேமாட்டோம் என்று கூறியவர்கள், இப்போது அனைத்துத்தரப்புக்களினதும் தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து 13 ஆவது திருத்தத்தை தமக்கான ஓர் கவசமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள்.

கேள்வி – மாகாணசபை முறைமை ஓர் ‘வெள்ளையானை’ என்று வர்ணிக்கப்படுகின்றது. அதனை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது?

பதில் – அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை மூலம் கடந்த காலங்களில் ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்தந்த மாகாணங்களும் மக்களுக்கும் தேவையானவற்றைச் செய்திருக்கின்றார்கள். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் அது சாத்தியப்படவில்லை என்றால், அது யாருடைய தவறு?

கேள்வி – இன்றைய தினத்திலிருந்து (நேற்று) பெரும்போகச்செய்கை ஆரம்பிக்கப்படவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இருப்பினும் வடக்கிலும் உரத்திற்கான தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு அரசாங்கம் எத்தகைய தீர்வை வழங்கப்போகின்றது?

பதில் – விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனால், அதன் பயன்பாட்டைக் குறைத்து சேதனப்பசளையின் பயன்பாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்பது ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கொள்கைகளில் ஒன்றாகும். அதனைக் கட்டம் கட்டமாக முன்னெடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடபகுதியில் உரத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே இதுகுறித்து உடனடியாகக் கேட்டறிந்து, அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன்.

கேள்வி – இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில், அடுத்தடுத்து இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயம் முக்கிய அவதானத்தைப் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இந்திய வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் சுப்ரமணியன் ஸ்வாமி ஆகியோருடனான சந்திப்பின்போது, இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்து அவர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டதா?

பதில் – இல்லை, அதுபற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. சீனாவா? இந்தியாவா? என்றால், எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும். இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன.

ஆகவே அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு முன்வருகின்ற தரப்பினரிடமிருந்து அவற்றைப்பெற்று நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம். அதற்கு பலவாறு உள்நோக்கம் கற்பிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. சீனாவுடனான தொடர்புகள் குறித்து வௌ;வேறு தரப்பினர் பல்வேறு விடயங்களைக் கூறலாம். ஆனால் அவை அனைத்திலும் உண்மை இல்லை என்று குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More