சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | ஜாவா லேன், மாத்தறை சிட்டி ஆகியன வெற்றி

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் 9ஆம் கட்டப் போட்டிகளில் ஜாவா லேன், மாத்தறை சிட்டி ஆகிய இரண்டு கழகங்களும் வெற்றியீட்டி சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத அணிகளாக புள்ளிகள் நிலையில் தொடர்ந்தும் முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கின்றன.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற போட்டிகளில் ஒன்றில் ஜாவா லேன் கழகம் 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ யூத் கழகத்தை வெற்றிகொண்டது.

மிகவும் பரபரப்பை தோற்றுவித்த மற்றைய போட்டியில் சோண்டர்ஸ் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மாத்தறை சிட்டி வெற்றிகொண்டது.

இந்த இரண்டு கழகங்களும் தலா 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டியை சமப்படுத்திக்கொண்டு தலா 25 புள்ளிகள் பெற்றுள்ளன.

எனினும் நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் ஜாவா லேன் கழகம் முன்னிலை வகிக்கிறது.

நிகம்போ யூத் கழகத்துக்கு எதிரான போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய ஜாவா லேன் கழகம் இடைவேளையின் போது 2 – 0 என முன்னிலையில் இருந்தது.

9ஆவது நிமிடத்தில் நவீன் ஜுடின் கோர்ணர் கிக் பந்தை ‘வொலி’ முறையில் ஜாவா லேன் அணித் தலைவர் மொஹமத் அலீம் கோலினுள் புகுத்தினார்.

26ஆவது நிமிடத்தில் இதே ஜோடியினர் 2ஆவது கோலுக்கு வழிவகுத்தனர். மத்திய களத்திலிருந்து அலீம் பரிமாறிய பந்தை சுமார் 25 யார் தூரம் நகர்த்திச் சென்ற நவீன் ஜுட் இடது காலால் உதைத்து கொல் போட்டார்.

அதன் பின்னர் இடைவேளைவரை மேலதிக கோல் எதுவும் போடப்படவில்லை.

இடைவேளையின் பின்னர் 52ஆவது நிமிடத்தில் நிகம்போ யூத் கோல் காப்பாளர் கனேஷ் கிரிஷாந்த் இழைத்த தவறு காரணமாக மத்தியஸ்தர் டிலான் பெரேராவினால் வழங்கப்பட்ட பெணல்டியை ஜாவா லேன் வீரர் ஒலுவாசியுன் ஒலாவாலே கோலாக்கினார்.

தொடர்ந்த 68ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் மேலும் ஒரு கோலை ஜாவா லேன் கழகத்துக்குப் போட்டுக்கொடுத்தார்.

70ஆவது நிமிடத்தில் 24 யார் தூர ப்றீ கிக் மூலம் நிகம்போ யூத் அணித் தலைவர் நிலூக்க ஜனித் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

போட்டி முழு நேரத்தைக் கடந்து உபாதை ஈடு நேரத்துக்குள் பிரவேசித்தபோது ஜூட் நவீன் தனது 3ஆவது கோலைப் போட ஜவா லேன் 5 – 1 என இலகுவாக வெற்றிபெற்றது.

விறுவிறுப்பான போட்டியில் மாத்தறை சிட்டி வெற்றி

சுகததாச அரங்கில் மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் சோண்டர்ஸ் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மாத்தறை சிட்டி வெற்றிகொண்டது.

ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் இரண்டு அணியினரும் பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

போட்டியின் 24ஆவது நிமிடத்தில் மாத்தறை சிட்டி அணித் தலைவர் அட்வேன் ஐசாக்கின் ப்றீ கிக்கைப் பயன்படுத்தி போவாடு ப்றின்ஸ் முதலாவது கோலைப் போட்டார்.

அதனைத் தொடர்ந்து இடைவேளைவரை இரண்டு அணிகளும் மிகத் திறமையாக விளையாடிய போதிலும் கோல் போடும் பல வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர்.

இடைவேளைக்குப் பின்னர் 49ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை நகர்த்திச் சென்ற லார்பி ப்றின்ஸ் தனது அணியின் இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் மிக வேகமாக விளையாடி இரசிகர்கைளை பரபரப்பில் ஆழ்த்தினர்.

81ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் வீரர் நாலக்க கன்னங்கர பரிமாறிய பந்தை மாத்தறை சிட்டி பின்கள வீரர் ருசிரு லக்மால் வெளியில் உதைக்க முயற்சித்தபோது பந்து தவறுதலாக அவரது சொந்த கோலினுள் புகுந்தது.

கடைசி 9 நிமிடங்களில் இரண்டு அணியினரும் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்

வெற்றி தோல்வி இல்லை

செரெண்டிப் கழகத்துக்கும் இ.போ.ச. கழகத்துக்கும் இடையில் கண்டி, போகம்பறை மைதானத்தில் நடைபெற்ற போட்டி 2 – 2 என்ற கோல்கள் எண்ணிக்கையில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் இலங்கையின் முன்னாள் வீரர் சண்முகராஜா சஞ்சீவ் கோல் போட்டு இ.போ.ச.வை முன்னியைலில் இட்டார்.

எனினும் 16ஆவது நிமிடத்தில் இலங்கையின் மற்றொரு முன்னாள் வீரர் எம்.என்.எம். இஸ்ஸதீன் கோல் நிலையை செரெண்டிப் சார்பாக சமப்படுத்தினார்.

இடைவேளையின் பின்னர் 54ஆவது நிமிடத்தில் செரெண்டிப் வீரர் விஜயகுமார் விக்னேஷ் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

எனினும் அடுத்த 7ஆவது நிமிடத்தில் இ.போ.ச. வீரர் விஜயசுந்தரம் யுகேஷ் கோல் நிலையை சமப்படுத்தி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து வெற்றி கோலுக்காக இரண்டு அணிகளும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஆசிரியர்