‘தைக்கொண்டோ’ போட்டியில் தங்கம் வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி

கேகாலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ‘தைக்கொண்டோ’ (Taekwondo) சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக கலந்துகொண்ட கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிகள், இரண்டு வெண்கலங்கள் என மொத்தமாக தேசிய ரீதியில் 5 பதக்கங்களை பெற்று மாகாணத்துக்கும் வலயத்துக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

இதில் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 80-87 கிலோ எடைப் பிரிவில் JA. சுமைட் தங்கப் பதக்கமும், 74-80 கிலோ எடைப் பிரிவில் N.M.நுஸ்ரி வெள்ளிப் பதக்கமும், 63-68 கிலோ எடைப் பிரிவில் A.L.M. அப்ரி வெண்கலப் பதக்கத்தையும், +87 கிலோ எடைப் பிரிவில் A.M. நாஸிக் அன்சாப் வெண்கல பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான +74 கிலோ எடைப் பிரிவில் J.A. சுரைப் வெள்ளிப் பதக்கமும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சம்பியனாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரலாற்று வெற்றியை பெற மாணவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டிய கல்லூரி முதல்வர் M.I.ஜாபிர் (SLEAS), தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்கள், மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் U.L.M. இப்றாஹீம், உதவி பயிற்றுவிப்பாளர்களான A.A. சிஹாப், M.H.A. ஹஸீன், A.A. ஹம்தான், விளையாட்டு பொறுப்பாசிரியர் M.I.M. அமீர், உடற்கல்வி பிரிவு ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்