சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமானது | தசுன் ஷானக்க

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினமானது. தென் ஆபிரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அண்மைக் காலத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொண்டதில்லை. ஆனால், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள  இலங்கை  தயாராக இருப்பதாக அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிராக குவாட்டியில் இன்று நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக திங்களன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

‘இந்தியாவில் இந்த வருடம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் இந்தத் தொடர் எமக்கு முக்கியம்வாய்ந்ததாகும். இந்தத் தொடரில் இந்தியா பலம்வாய்ந்த அணியை களம் இறக்குகிறது. அவர்களை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினமானது. ஆனால், எத்தகைய சவாலையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் எங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளோம்.

‘இந்தியா எந்தளவு பலம்வாய்ந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், நாங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்போம். கடந்த சில வருடங்களில் நாங்கள் திறமையாக விளையாடி வந்துள்ளோம். எனவே திறமையாக விளையாடி வெற்றிகளை ஈட்டி இலங்கைக்கு புகழையும் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்போம்’ என தசுன் ஷானக்க ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே பெரும்பாலும் விளையாடுவார் என தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.

இந்த வருடம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் சில இளம் வீரர்களை இலங்கை பரீட்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை குழாத்தில் சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ ஆகியோரும் இடம்பெறுகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமாக விளையாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், கடந்த வருடம் பூர்த்தி செய்யப்பட்ட 10 போட்டிகளில் இலங்கை 6இல் வெற்றிபெற்றது. ஆனால் அவற்றில் 6 போட்டிகள் ஸிம்பாப்வேக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எதிரானவையாகும். ஆப்கானிஸ்தானுடனான ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் ஈட்டிய வெற்றி மகத்தானதாகும்.

அந்த வகையில் இந்தியாவுக்கு எதிரான கடினமான தொடரிலும் இலங்கை சாதிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ரோஹித், கோஹ்லி, ராகுல்

இந்த தொடரை முன்னிட்டு இந்தியா தனது அதிசிறந்த வீரர்களை களம் இறக்குகிறது. இலங்கைக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின்போது ஒய்வு கொடுக்கப்பட்டிருந்த அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோர் இந்திய குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் இறுதி அணியில் இணைக்கப்படுவது உறுதி.

இது இவ்வாறிருக்க, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விளையாடப்பட்டுள்ள 162 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 93 – 57 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளதுடன் 11 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

அணிகள் (பெரும்பாலும்)

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாககே, கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷன்க.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், யுஸ்வேந்த்ர சஹால், மொஹமத் சிராஜ், மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரன் மாலிக்.

ஆசிரியர்