இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியினர் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடும் உஷ்ணத்தை தாங்க முடியாதவர்களாக ஈரத் துவாய்களை தலையில் போட்டுக்கொண்டும் தண்ணீரால் தலையை நனைத்துக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுவந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் ஓரிருவரைத் தவிர மற்றைய வீரர்கள் அனைவரும் இலங்கை வந்தடைந்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் குஜராத் சார்பாக விளையாடிவரும் ராஷித் கான், நூர் அஹமத் ஆகிய இருவரும் ஐ.பி.எல். முடிவடைந்த பின்னர் இலங்கை வருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட ஆப்கானிஸ்தான் தகுதிபெற்றுள்ள அதேவேளை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட இலங்கை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கைக்கு பலப்பரீட்சையாக அமையும் என கருதப்படுகிறது.
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அம்பாந்தோட்டையில் ஜூன் 2, 4, 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மத் ஷா (உதவித் தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ரம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஸத்ரான், மொஹமத் நபி, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், அப்துல் ரஹ்மான், பஸால் ஹக் பாறூக்கி, பாரித் அஹ்மத் மாலிக்.