நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ண கரப்பந்தாட்டத்தின் 5ஆம் இடத்திற்கான போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது.
பி குழுவில் மாலைதீவுகளுடனான போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டிய இலங்கை, தரநிலைப்படுத்தல் குழுவில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் 3 நேர் செட்களில் இலகுவான வெற்றியை ஈட்டியது.
முதலாவது செட்டில் 25 – 16 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் 2ஆவது செட்டில் 25 – 15 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் கடைசி செட்டில் 25 – 7 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் பங்ளாதேஷை இலங்கை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து 5ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் கிர்கிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது.
இலங்கைக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையிலான 5ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி சனிக்கிழமை (27) நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்றைய நிரல்படுத்தல் போட்டியில் மாலைதீவுகளிடம் கடும் சவாலை எதிர்கொண்ட கிர்கிஸ்தான் 3 நேர் செட்களில் (25 – 20, 25 – 20, 25 – 15) வெற்றிகொண்டது.
உஸ்பெகிஸ்தான், கஸக்கஸ்தான் ஆகிய பலம்வாய்ந்த அணிகளுக்கு சவாலாக விளங்கி தோல்வி அடைந்த இலங்கை, சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் கிர்கிஸ்தானை வீழ்த்தி 5ஆம் இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.