ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற அல்டிமேட் ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, தான் பயன்படுத்திய ஐந்து ஈட்டிகள் விமானப் பயணத்தின்போது உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், வழக்கமாக மகிழ்ச்சியுடன் விமான நிலையத்திற்கு வருவதாகவும், ஆனால் இம்முறை மிகவும் கவலையுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
புடாபெஸ்டில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து சாதனை படைத்த ஈட்டி மற்றும் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிய பயன்படுத்திய ஈட்டி உள்ளிட்ட அவர் பயன்படுத்திய ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈட்டிகளை இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்துவதற்கு ருமேஷ் திட்டமிட்டிருந்தார். பின்னர் அவற்றை தனது விளையாட்டு வாழ்க்கையின் நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கவும் அவர் எதிர்பார்த்திருந்தார்.
விமானத்தில் ஈட்டிகள் சேதமடைந்தமை தொடர்பாக துருக்கிய விமான சேவைக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ருமேஷ் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
அல்டிமேட் மற்றும் டயமண்ட் லீக் ஆகிய இரு சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5.10 மணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து துருக்கிய விமான சேவையின் TK-730 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அவர் பணியாற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






உலக மெய்வல்லுநர் அல்டிமேட் சாம்பியன்ஷிப் மற்றும் டயமன்ட் லீக் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் விமானப் பயணத்தின்போது சேதமடைந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேவின் நேரடி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து மேற்கொண்ட விமானப் பயணத்தின்போது ருமேஷ் தரங்கவிடம் இருந்த சர்வதேச தரத்திலான ஐந்து ஈட்டிகளும் உடைந்து சேதமடைந்துள்ளன.
இதையடுத்து, விளையாட்டு அமைச்சு உடனடியாக தலையிட்டு, அவரது எதிர்கால பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அரசாங்கத்தின் முழுமையான செலவில் நவீன தரத்திலான புதிய ஈட்டி தொகுப்பொன்றை (New Javelin Set) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயணப் பொதிகளை கையாளும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த கடுமையான அலட்சியம் தொடர்பில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அடுத்தகட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்வரும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கைக்காக தங்கப் பதக்கம் வெல்லும் முக்கிய எதிர்பார்ப்பாக ருமேஷ் தரங்க திகழ்கிறார்.
அவரது விளையாட்டு பயணத்திற்கு தேவையான அனைத்து அரச ஆதரவு மற்றும் வசதிகளையும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எமது மெய்வல்லுநர் நட்சத்திரத்தின் ஒலிம்பிக் கனவுக்காக அரசாங்கம் தொடர்ந்து துணை நிற்கும்” என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
