Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை பெண்களுக்கு விடுதலை தந்த சிங்கர் தையல் மிஷின் உருவான கதை!

பெண்களுக்கு விடுதலை தந்த சிங்கர் தையல் மிஷின் உருவான கதை!

5 minutes read
 

நச்சுத்தன்மையுள்ளஆண்மை‘ (Toxic Masculinity) க்கு எதிராகப் பேசுகிறது கில்லட்விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம்.

பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது ‘வோக் கேபிடலிசம்’ (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல.

1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்தூரம் செல்லவேண்டிய நிலைமையில் இருந்தது.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்க பிரச்சாரகர் எலிசபெத் கேடி ஸ்டான்ட்டன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மகளிர் உரிமை மாநாட்டில் பேசி சர்ச்சையை உருவாக்கினார். அது ரொம்ப பெரிய ஆசை என்று அவருடைய ஆதரவாளர்களே கூட கருதினர்.

இதற்கிடையில் பாஸ்டன் நகரில், திரையில் வெற்றி பெற முடியாத ஒரு நடிகர் ஒரு கண்டுபிடிப்பாளராக தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பட்டறை ஷோரூமில் சிறிய இடத்தை அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். மரத்தில் எழுத்துகளை செதுக்குவதற்கு தனது மெஷினை விற்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆனால், மரத்தில் எழுத்துருக்களை செதுக்குவது அப்போது வழக்கொழியத் தொடங்கிவிட்டது. அந்த இயந்திரம் நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது. ஆனால் அதை வாங்க யாரும் விரும்பவில்லை.

நம்பிக்கை இழந்திருந்த அவரை, விற்க முடியாமல் கிடந்த தையல் மெசின்களை பார்க்கும் படி அந்த பட்டறையின் உரிமையாளர் அழைத்தார். அது சரியாக விற்கவில்லை. பல தசாப்தங்களாக பலர் முயற்சி செய்தும், அந்த மெஷினை விற்பனைக்கு ஏற்ற அளவில் யாராலும் தயாரிக்க முடியவில்லை.

 

ஐசக் மெரிட் சிங்கர்

வாய்ப்பு தெளிவாக இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிராத காலம் அது – நியூயார்க் ஹெரால்டு பின்வருமாறு கூறியிருந்தது: “தங்கள் வேலைக்கு மிகக் குறைந்த அளவு ஊதியம் தரப்படும் வேறு பெண் தொழிலாளர்கள் இல்லை அல்லது கடினமாக உழைக்கும் வேறு பெண்களை பார்த்திருக்க முடியாது” என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால், துணி தைக்க அதிக நேரம் தேவைப்பட்டது – ஒரு சட்டை தைக்க 14 மணி நேரம் ஆனது. எனவே வேகமாக துணி தைக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற தேவை அப்போது இருந்தது.
தையல் பெண்மணிகளுக்கு மட்டும் தான் அந்தச் சிரமம் என்றில்லை: பெரும்பாலான மனைவியரும், மகள்களும் துணி தைக்க வேண்டும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

எழுத்தாளர் சாரா ஹாலே கூறியுள்ளபடி, அந்த “ஒருபோதும் முடிவுறாத – எப்போதும் தொடக்கமாகவே உள்ள” அந்த வேலையானது பலரையும் “சர்வகாலமும் துயரத்திலேயே இருக்கும் நபர்களாக” ஆக்குவதாக இருந்தது.

பாஸ்டன் தொழிலகத்தில், கண்டுபிடிப்பாளர் அந்த மெஷினைப் பார்த்து சொன்னார்: “பெண்களை அமைதியாக வைத்திருக்கும் ஒரே விஷயத்தையும் மாற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்.

திரையில் தோற்றுப் போய், கண்டுபிடிப்பாளராக மாறிய அந்த நபர் ஐசக் மெர்ரிட் சிங்கர். பகட்டாக உடுத்தக் கூடிய, கவர்ச்சியுள்ள மற்றும் தாராள சிந்தனை உள்ளவராகவும், அதேசமயம் கடுமையானவராகவும் இருந்தார்.

திருத்த முடியாத அளவுக்கு, நிறைய பெண்களுடன் காதல் கொண்டவராக இருந்த அவர் குறைந்தது 22 குழந்தைகளுக்குத் தந்தையானார்.

பல ஆண்டுகளாக அவர் மூன்று குடும்பங்களைப் பராமரித்து வந்தார். மூன்று பேருக்குமே, மற்ற இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் இன்னொருவரையும் அவர் திருமணம் செய்து கொள்வார். அவர் தன்னை அடித்தார் என்று யாராவது ஒரு பெண் புகார் சொல்வார்.

அவருடைய நடத்தை சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றாலும், இயல்பாக சிங்கர் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்

அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய ரூத் பிரான்டன், “பெண்ணிய இயக்கத்துக்கு உறுதியாக முதுகெலும்பை உருவாக்கிய மனிதர்” என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

தையல் மெஷினுக்கான அடிப்படையான மாதிரியை சிங்கர் உருவாக்கினார்.

“ஊடூசி வட்டமான பாதையில் அசைவதற்குப் பதிலாக, அது நேர்க்கோட்டில் முன்னும் பின்னும் செல்லும் வகையில் வடிவமைக்க விரும்புகிறேன். ஊசியின் பட்டை, வளைவான ஊசியை கிடைமட்டமாக நகர்த்துவதற்குப் பதிலாக, நேரான ஒரு ஊசி மேலும் கீழும் செல்வது போல உருவாக்க விரும்புகிறேன்” என்று தொழிலகத்தின் உரிமையாளரிடம் அவர் கூறினார்.

சிங்கர் தனது மெஷின்களுக்கு காப்புரிமை பெற்று, விற்பனை செய்யத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது: முதலாவது வடிவமைப்பு நன்கு செயல்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஒரு சட்டையைத் தைக்க முடிந்தது.

துரதிருஷ்டவசமாக, மற்ற கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மற்ற கருவிகளையும் அது சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. பள்ளம் உள்ள, கண் போன்ற துளையுள்ள ஊசி, முடிச்சு போடும் தையல், துணியை உள்ளே தள்ளுவதற்கான நுட்பம் கொண்டவை என பல அப்போது பயன்பாட்டில் இருந்தன.

1850களின் “தையல் மெஷின் போர்” நடந்த காலத்தில், தையல் மெசின் தயாரிப்பாளர்கள், தங்கள் மெசின்களை விற்பதைவிட பிற தயாரிப்பாளர்கள் மீது காப்புரிமை மீறியதாக வழக்குப் போடுவதில்தான் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர்.

கடைசியில் ஒரு வழக்குரைஞர் அவர்களை ஒன்று சேர்த்தார். ஒரு நல்ல தையல் மெஷினை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நான்கு தரப்பினரிடம் இருந்தன. அவற்றுக்கு லைசென்ஸ் வாங்கி, ஒன்றாக பயன்படுத்தி ஏன் தைக்கக் கூடாது என யோசித்தார்.

சட்டப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தையல் மெஷின் மார்க்கெட் சூடு பிடித்தது – அதில் சிங்கர் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியாளர்களைவிட அவருடைய தொழிற்சாலைகள் எப்படி வித்தியாசமாக இருந்தன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

தனிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ளக் கூடிய பாகங்களைக் கொண்டதாக இருந்த “அமெரிக்க முறையிலான” மெஷின் என்ற வகையில் மற்றவர்கள் தயாரித்தனர். அப்போதும் இந்த நடைமுறைக்கு சிங்கர் மாறுவற்கு தாமதமானது. கைகளால் தயாரிக்கப்பட்ட பாகங்களையும், கடைகளில் வாங்கப்பட்ட போல்ட், நட்களையும் கொண்டு அவருடைய மெஷின்கள் தயாரிக்கப்பட்டன.

ஆனால் சிங்கரும், அவருடைய வர்த்தக பங்காளர் எட்வர்ட் கிளார்க்கும் வேறொரு வழியில் முன்னோடிகளாக இருந்தனர். சந்தைப்படுத்துதலில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர்.

தையல் மெஷின்கள் விலை அதிகமாக இருந்தது. சராசரி குடும்பம் பல மாதங்கள் சேமித்தால் தான் அதை வாங்க முடியும் என்றிருந்தது.

மெஷின்களை தவணை கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கிளார்க் முன்மொழிந்தார். குடும்பத்தினர் மாதம் சில டாலர்கள் வாடகைக்கு அந்த மெஷின்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகையாக அவர்கள் செலுத்திய பணம், மெஷினின் விலையை எட்டிவிட்டால், அந்த மெசின் அவருக்குச் சொந்தமாகிவிடும்.

முந்தைய ஆண்டுகளில் இருந்த மெதுவாக தைக்கும், அதிகம் நம்பியிருக்க முடியாத மெஷின்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு இது உதவிகரமாக இருந்தது. சிங்கர் நிறுவனத்தின் ஏஜென்ட்களும் அதற்கேற்ப பணியாற்றினர். மெஷினை வாங்கும் போது, அதை பொருத்திக் கொடுப்பதுடன், அது நன்கு செயல்படுகிறதா என பார்ப்பதற்கு அவ்வப்போது சென்று வந்தனர்.

அப்போதும் சந்தைப்படுத்தலில் ஒரு பிரச்சினை இருந்தது. பெண்ணின வெறுப்பு என்ற ரூபத்தில் பிரச்சினை வந்தது.

“தையல் மெசினை திருமணம் செய்ய முடியும்போது…”

இதற்கு இரண்டு கார்ட்டூன்களை ஸ்டான்டன் உருவாக்கினார். ஒரு தையல் மெசினை உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஏன் “தையல் மெசினை” வாங்குகிறீர்கள் என்று ஓர் ஆண் கேட்பது போல ஒரு கார்ட்டூன் இருந்தது.

பெண்கள் தங்களது “அறிவை வளர்த்துக் கொள்ள” கூடுதல் நேரம் கிடைக்கும் என்று விற்பனையாளர் சொல்வது போல இன்னொரு கார்ட்டூன் இருந்தது. அதில் சொல்ல வந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டது.

விலை உயர்ந்த இந்த மெஷின்களை பெண்களால் இயக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

தன் சொந்த வாழ்க்கையில் பெண்களை எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தியிருந்தாலும், இந்த மெஷினை பெண்கள் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதில் தான் அவருடைய வியாபாரம் சார்ந்திருந்தது.

நியூயார்க் பிராட்வே பகுதியில் ஒரு கடையை அவர் வாடகைக்கு எடுத்து, இந்த மெசின்களை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுவதற்காக சில இளம் பெண்களை பணிக்கு அமர்த்தினார். அங்கு நல்ல கூட்டம் கூடியது.

1907 எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படம்

முடிவெடுக்கும் நபர்களாக பெண்கள் உருவாகலாம் என்பதாக சிங்கரின் விளம்பரங்கள் இருந்தன. “தயாரிப்பாளரால் நேரடியாக குடும்பத்தின் பெண்களுக்கு விற்கப்படுகிறது” என்று விளம்பரம் செய்தார். பெண்கள் நிதி சுதந்திரம் பெற ஆசைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை அது உருவாக்கியது. “நல்ல பெண் தையல் தொழிலாளி ஆண்டுக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்க முடியும்” என்று விளம்பரம் செய்தார்.

1860 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படி புகழ்ந்தது: வேறு எந்த கண்டுபிடிப்பும் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு “இவ்வளவு பெரிய விடுதலையை” அளிக்கவில்லை என்று எழுதியது. தையல் பெண்மணிகள், “குறைவான உழைப்பில், நல்ல வருமானத்தை” ஈட்டத் தொடங்கினர்.

அப்போதும், “ஆணின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு” என்று கூறி, தி டைம்ஸ் பத்திரிகை பாலின பெருமை பேசியது.

ஒரு பெண்மணியை நாம் கேட்டால் தெரிந்துவிடும். 1860ல் வெளியான Godey’s Lady’s Book and Magazine-ல் சாரா ஹாலே இப்படி கூறியுள்ளார்: “ஊசியுடன் வாழ்ந்த பெண்மணி, இரவில் ஓய்வெடுக்க முடிகிறது. குடும்ப வேலைகளை கவனிக்கவும், மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடவும் பகல் பொழுதில் பெண்ணுக்கு நேரம் கிடைக்கிறது. இது உலகிற்கு பெரிய லாபம் இல்லையா?” என்று அவர் கூறியுள்ளார்.

வோக் கேபிடலிசம் என்னும் ‘முற்போக்கு முதலாளித்துவம்’ பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா? சில்லரை வருமானங்களில் தாம் அக்கறை காட்டுவதாக சிங்கர் கூறினார்.

மிக உயர்வான சுய அக்கறையுள்ள உந்துதல்களால் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு அவர் நிரூபணமாக இருக்கிறார்.

 

நன்றி : papiksha | வெப்துனியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More