`போர்க்களத்தின் நடுவே நடந்து செல்வதைப் போல உள்ளது!’ கொரோனாவால் கதறும் இத்தாலி மருத்துவர்கள்

இத்தாலி

இத்தாலி ( AP )

கொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இத்தாலியில் அதிகரித்துள்ளது.

வடக்கு இத்தாலி சிறந்த பொதுச் சுகாதார அமைப்புகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது. அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற அனைவரும் நன்கு படித்துச் சிறந்த பயிற்சி பெற்று வல்லுநர்களாகத் திகழ்கிறார்கள். தங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது அனைத்து விதத்திலும் தயாராக இருப்பதாகவே அங்குள்ள மருத்துவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பல உயிர்கள் பலியாகிவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மருத்துவமனை
இத்தாலி மருத்துவமனை
AP

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இத்தாலியில் தற்போதுவரை 35,713 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்த போதுமான படுக்கைகள் இல்லாத சூழல் நிலவுகிறது.

உலகிலேயே இரண்டாவது அதிக முதியோர்கள் உள்ள நாடாக இத்தாலி அறியப்படுகிறது, முதல் நாடாக ஜப்பான் உள்ளது. கொரோனா வைரஸ் குறிப்பாக வயதான முதியவர்களையே அதிகம் பாதிக்கிறது. எனவேதான் இத்தாலியில் உள்ள முதியவர்களுக்கு இந்த நோய் மிகத் தீவிரமாகப் பரவிவருவதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தற்போது அங்கு குளிர் காலம் என்பதால் சாதாரணமாகவே நிறைய முதியோர்கள் சுவாசப் பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை இரண்டுமே இத்தாலியின் மிக மோசமான நிலைக்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலி
இத்தாலி AP

“ஒரே நாளில் இத்தனை பேர் வரிசையாக உயிரிழப்பதை இதுவரை என் கண்ணால் பார்த்தது இல்லை. மருத்துவமனைக்குள் நடந்து செல்லும்போது போர்க்களத்தில் இறந்தவர்கள் மத்தியில் நடந்து செல்வதைப் போன்ற உணர்வு வருகிறது. நாங்கள் கடந்த சில வாரங்களாக வீட்டுக்குச் செல்லாமல் இரவு பகலாக வேலை செய்து வருகிறோம். இப்படி வேலை செய்யும் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறோம்” என்று வடக்கு இத்தாலியில் உள்ள பெர்கமோ நகரில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

சீனாவில் வைரஸ் தொற்று உறுதியான போதே இத்தாலியில் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திறமையான மருத்துவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும் அங்கு வைரஸ் பரவலைத் தடுக்கமுடியவில்லை. சாதாரண வார்டுகளை தீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றுவது, மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிப்பது போன்ற நடைமுறைகளை மேற்கொண்டும் லோம்பார்டி பகுதியில் நோயாளிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தாலி மருத்துவமனை
இத்தாலி மருத்துவமனை AP

இத்தாலியில் 80 முதல் 95 வயதுடையவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று பெர்கமோவில் பணிபுரியும் ஒரு மருத்துவர் கூறியுள்ளார். அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிந்தால் அவருக்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. நோயாளிகளின் நிலை கண்டு பல மருத்துவர்களும் செவிலியர்களும் கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி மனதைக் கனமாக்கியுள்ளது.

வெறிச்சோடிய இத்தாலி சாலை
வெறிச்சோடிய இத்தாலி சாலை AP

இது இப்படி இருக்க இத்தாலியின் மற்றொரு நிலை குறித்து பேசியுள்ளார் போக்கோனி (Bocconi)பல்கலைக்கழக சுகாதார ஆராய்ச்சி மைய இயக்குநர் பிரான்செஸ்கோ லாங்கோ, “வடக்கு இத்தாலி முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வீட்டில் இருந்தபடியே வேலை செய்துகொண்டு தங்கள் அன்பானவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதை நினைக்கும்போது சற்று மகிழ்ச்சியாக உள்ளது. இத்தாலியின் வீடுகள் அழகாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இங்கு மருத்துவமனைகள் அனைத்தும் போர்க்களமாக மாறி வருகின்றன” என்று கூறியுள்ளார்.

சத்யா கோபாலன்

நன்றி – விகடன்

ஆசிரியர்