September 22, 2023 2:58 am

கோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும்: நிலவன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கோரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். உலகநாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் கோரோனா வைரஸ் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அரசின் மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் தங்களுடைய உணவுத் தேவையினை பூர்த்திசெய்வதற்கு தடுமாறி வருகின்றனர்.

வடக்கு-கிழக்கு வாழ் தமிழ்மக்களிடையே பெருமளவு மக்கள் நாளாந்த உணவுக்கும், இதர தேவைகளுக்கும் அவர்கள் தமது தினச் சம்பளத்தையே நம்பி தமது வாழ்வை நகர்த்திவருபவர்கள். போரின் காரணமாக, அவயங்களை இழந்தவர்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், இயங்கு அற்றல் குறைபாடு உடையவர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆதரவற்றவர்களும் உள்ளனர். அவர்களிடையே பெருமளவு வேலையற்றோரும், வறுமையும், போஷாக்கு குறைந்தோரும் இருப்பதால் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு அவர்கள் இலகுவாக ஆளாகிவிடக் கூடிய அபாயம் உள்ளது.

மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் நடமாட்டத்தடையும், ஊரடங்கும் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கப்படலாம் என்பதால், நாளாந்த வருமானம் ஏதுமின்றி, வரும் வாரங்களில் இம்மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. வருமானமின்மையும், அரச ஆதரவின்மையும் காரணமாக, இச்சமூகம் பட்டினியின் விளிம்பில் இருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத கோரோனா தொற்று நோய் பரவிவரும் இச் சூழலில் தமது பாதுகாப்பினையும் மக்களின் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு இடர் அனர்த்த நிலையினை உணர்ந்து துரிதமாக செயற்படும் உள்ளூர் அமைப்புக்களும், நிறுவனங்களும், வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதி உதவியுடனும் சில தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகள் உட்பட ஊடகவியலாளர்கள்,  ஆலயங்கள் , சமய ஒன்றியங்கள் , மதகுருக்கள், தன்னார்வு சமூகக் குழுக்கள், தொழில் அதிபர்கள் , மக்கள் நலன் விரும்பிகள் செய்துவரும் சேவைகள் அளப்பெரியது. மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கிவரும் அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் .

அதேவேளை மக்களுக்கு இவ் ஊரடங்கின்போது தன்னார்வுத் தொண்டர்களினால் மிகக் குறைவான நிவாரணப் பொதிகள் ஆங்காங்கே வழங்கப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. மொத்த விற்பனைச் சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், சில்லறை விற்பனையில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் பல இரட்டிப்புத் தன்மையும் உள்ளது . புலத்திலும் , நிலத்திலும் வசதிபடைத்தவர்கள் செய்கின்ற சிறிய உதவிகள் போதுமானதாக இல்லாத நிலை காணப்படுகிறது. பல பக்கச்சார்வுகளும், அரசியல் பலம் தேடல் செயற்பாடுகளும்  அதிகரித்து வருகின்றது.

வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அடைந்துகிடக்கும் சூழலால் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிப்படுபவர்களை கண்டறிந்து தேவையான மனநல, உதவிகளையும் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைத்திருக்கும்  அதேவேளையில் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தவும், பொது இடங்கள்  செல்லுமிடத்தில் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து செல்வதை ஊக்குவிக்க வேண்டும்.  அயல் வீட்டார்கள் , உறவினர்கள், கிராமத்தவர்கள் குழுக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

அரசியலும் , அரசியல். கட்சிகள் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்குகின்றன. மக்களாட்சிக்கோட்பாட்டின் அடிப்படையில் வாக்குரிமை,  பிரதிநிதித்துவ ஆட்சியியல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது பாராளுமன்ற அரசாங்க முறையின் வளர்ச்சியோடு கட்சிகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக விளங்க வேண்டும் என்று மக்கள் நலன் சார்ந்த விடயத்தை விடுத்து சமூக பிரிவினைகளையும் கட்சி  அரசியலையும் நோக்காக் கொண்டு செயற்படுவது மன வேதனைதரும் விடயமாகும்.

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைகளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துலகுணவர்தன தெரிவித்தார். இதனை வழங்குவதில்  கூட  தமிழ் பேசும் அரசியல் பிரதி நிதிகளின் தலையீடும் தன்னார்வத்துடன் விளையாட்டு வீரர் ஒருவர் வழங்கிய இடர் அனர்த்த அவசரகால உதவி நிதியிலும் அரசியல் பேசும் தமிழர் தலைமைகளின் சர்வாதிகாரமும் பயனாளிகள் தெரிவும் என அவர்களின் தலையீடுகளும், அச்சுறுத்தல்களும்  அதிகமாக உள்ளது. இவ்வாறு ஏற்படும் தலையீடுகளையும் தனிநபர் அச்சுறுத்தல்களையும் குறைப்பதற்கு சுகாதாரம், நிர்வாகம், சமூக சேவை உட்பட சகல அரச, அரசு சார்பற்ற அமைப்புக்களும் இணைந்து ஒரு இடர் அனர்த்த கோரோனா தொற்று நோய் தொடர்பாக மாகாணமட்ட செயல் குழுவை உருவாக்க வேண்டும்.

அரசாங்கத்தால் வட மாகாணத்திற்கு அறிவிக்கப்பட்ட  நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. இருப்பினும் அதனை உரியமுறையில் கையாளவும் , பயன்படுத்தவும் அல்லது வேலைகளை இலகுபடுத்தவும் துரிதமாக வினைத்திறனுடன் செயற்படவும் மாகாணம், மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் கோரோனா தொற்று  நோய் இடர் அனர்த்த முகாமைத்துவ செயற்குழு ஒருங்கிணைப்பு  அலகுகளை உருவாக்கி அவசர நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நெறிப்படுத்தலையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டும் .

எளிதில் பாதிக்கப்படக் கூடிய  ஏதுநிலை மக்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கைகளை தயார்நிலை, தணித்தல், தடுத்தல், நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும், அவ்வாறான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைவதும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளலும், அந் நிதியை பொருத்தமான பிராந்தியங்களுக்கு விடுவிப்பதும், மற்றும் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதும் மதிப்பீடு செய்வதற்கும் இலகுவாக இருக்கும் .

பொது நிர்வாகத் துறையின் , தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும், பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களும், சமூக நலன் விரும்பிகளும் , ஊழல் காரணமாக நேர்மை தொடர்பில் குறைந்தளவு நம்பிக்கையே உள்ளது. பணம் பறித்தல் மற்றும் இலஞ்ச கோரல்கள் போன்ற ஊழலில் இருந்து பொதுச் சேவை விநியோகம் தொடர்பில் பொது நிறுவனங்களில் பரந்தளவு விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், மற்றும் அவர்களது சேவைகளைப் பெறுவதற்கு மக்களுக்கு வசதியளிப்பதற்கும் நேர்மை நிறைந்த அதிகாரிகளின் நியமனத்தையும் உறுதிப்படுத்தி கட்டமைக்கப்பட ஒரு செயல்குழு ஊடாக வளப்பகிர்வை மேற்கொள்வது அவசியம்.

பொது மக்கள், பங்கேற்புவெளிப்படைத் தன்மைக்கும், வகைப்பொறுப்புக்குமான தொழில்நுட்பமும், செயல் திட்டங்கள் பரந்த நிலையிலான கிராமிய மற்றும் சிவில் சமூகத்தின் கலந்தாலோசனையுடன், தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான பங்காளர்களின் பங்களிப்புடன் அனர்த்தங்களுக்கான இடர்களைக் குறைப்பதற்கான தேசிய மற்றும் உபதேசிய மட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப் படுத்துவதற்கும்  ஒருங்கிணைப் பதற்குமான பொறுப்புடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளில் உரிய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கலும் அவ்வாறான நிறுவனங்களுடனும் செயலகங்களுடனும் ஒருங்கிணைந்து வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதும் நடைமுறைப்படுத்திட செயல்குழுவின் தேவை உணரப்படுகிறது.

தொற்று நோய்கள் வருவதற்கான காரணிகள் யாவை? இவைகள்  எவ்வாறு பரவுகின்றன? இவற்றை  எப்படி கட்டுப்படுத்துவது?  என்பதைப் பற்றி கவலைகள் விஞ்ஞானிகள் முதல் நாட்டின் தலைவர்கள் வரை எல்லோரிடமும் பரவலாக இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒற்றைப் பதில் “சுத்தம் சுகம் தரும்” என்பதுவே ஆனால் தற்போது உள்ள சூழல் ஊரடங்கும் , தொற்று நோய் பற்றிய உளவியல் நெருக்கீடும் , வறுமையிலும் மக்கள் வாழ்கின்றார்கள்.

உடன் இருப்பவர்களையும் ,பயணிப்பவர்களையும் கடந்த சில நாள்களாகச் சந்தேகத்துடன் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டடார்கள். பத்தடி தூரத்திலிருக்கும் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோகூட அந்தச் சத்தம் அடங்கும்வரை கஷ்டப்பட்டு மூச்சைப் பிடித்துக்கொள்கின்ற நிலையில் அந்தரிக்கின்றார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் நமக்கும் வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ?” என்ற பயம் கலந்த சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுவது இயல்புதான். உடலின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால்கூட, தமக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதா என்ற  அச்சம் மக்களைத் தொற்றிக் கொள்கிறது.

அதிலும் சிலர் இந்த விஷயங்களில் கற்பனையுடன் கவலை கொள்கின்றார்கள். நம்மைச் சுற்றியுள்ள இவர்களுக்கு எல்லாம் நோய் பாதிப்பு இருக்குமோ, ஒருவேளை நமக்கும் ஏற்பட்டால் நம்மால் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுமோ’ போன்ற தேவையில்லாத அச்சங்கள் அவர்கள் மனதை அழுத்திக்கொள்கிறது இது ஒருவகை மன அழுத்தமே ஆனால், அந்த பயம் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டுமே தவிர நமக்குத் தேவையில்லாத தலைவலியை ஏற்படுத்தும் விதத்தில் அமைத்து விடக் கூடாது.

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பது போல வரு முன் காப்பதே மிகச்சிறந்தது. எனவே தொற்றுநோய் வருவதை தடுப்பதற்கு முன்னால் அது பற்றியும் அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புக்களில் இருந்து மீள் கொண்டுவருதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகின்றது. மக்களின் மனநலத்தைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளப் பக்கத்தில் மனநலம் தொடர்பான சில உளவியல் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கோவிட்-19 கோரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய். இதை எந்தவோர் இனத்துடனும் தேசியத்துடனும் இணைக்க வேண்டாம். அனைவரும் மற்றவர்கள் மீது அனுதாபத்துடன் இருங்கள்.

கோரோனா வைரஸ் பற்றி உங்களுக்குக் கவலை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்திகளைப் பார்ப்பது, படிப்பது அல்லது கேட்பதைக் குறையுங்கள். நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைத் தேடுங்கள். வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்.

வதந்திகளிலிருந்து உண்மைகளை வேறுபடுத்துங்கள். இது உங்கள் அச்சத்தைக் குறைக்க உதவும். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மற்றவர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்யுங்கள். வேலைகளுக்கு நடுவே தேவையான அளவு ஓய்வெடுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.

புகையிலை, ஆல்கஹால் போன்றவை உங்கள் மனம் மற்றும் உடலை மோசமடைய வைக்கும். தவிர்த்திடுங்கள். உங்களை உளவியல்ரீதியாகத் திடமாக வைத்திருங்கள். உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து இயல்பாக இருக்க முயலுங்கள். மனநல சுகாதார நடைமுறைக்கு சவாலாக அமைவதுடன், ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளைப் போதாதவை ஆக்குகின்றன.

இவற்றில் நம் சமூகத்தின் பங்கும் இதில் மிக முக்கியமானது. மனநலம் பாதிக்கப்பட்டவரை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்காமல், அவரையும் சக மனிதராக நினைக்க வேண்டும், நடத்த வேண்டும். அதேவேளை அவர்களுக்கு மருத்துவ, சமூக புனர்வாழ்வினை உரிய முறையில் வழங்க வேண்டும்.

தனி மனித சுத்தம் போலவே சுற்றுச் சூழல் சுத்தமும் மிக முக்கியமானது. கழிவுகளை நேர்த்தியான முறையில் முகாமைத்துவம் செய்தல், வடிகால்களை உரிய முறையில் துப்பரவு செய்தல், பராமரித்தல் என்பன நமது மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனிக்கப்படாத பொதுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது போலவே இயற்கை வளங்களை, மரங்களை பாதுகாத்தல் தொடர்பிலும் நமது அக்கறை பூச்சியத்துக்குக் கிட்டவாகவே காணப்படுகின்றது.

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள் பற்றி நாம் ஒவ்வொருவரும் சற்று  சித்தில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இதற்குரிய தீர்வுகளை நாம் ஒவ்வொரும் தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ செய்ய வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கைகளை கழுவிக்கொள்ளுதல் நோய்த்தடுப்பின் முதற்படி என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கின்ற உண்மை.

சமூகப் பொறுப்புணர்வு, சமூக வாழ்வின் ஒழுங்கு முறை, அது போலவே நோயாளிகளாக இருப்பவர்கள் நோய் குணமடைந்து வந்தவர்களும் வீட்டில் இருப்பதும், எங்காவது தொற்று நோய் பரவுவதைக் கேள்வியுற்றால் நீங்கள் அவ்விடத்துக்கு செல்லாமல் இருப்பதும், அதுபோல் தொற்று உங்கள் பிரதேசத்தில் ஏற்பட்டால், பயந்து வேறு பிரதேசத்திற்குச் செல்லாமல் இருப்பதும் சாலச் சிறந்தது.

நோய் உள்ளவர்கள் மற்றைய தேகாரோக்கியமான மனிதர்களிடத்தில் செல்    லாது இருப்பதும்  . அதே சமயம்  தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை, tissue , போன்றவற்றை பாவிப்பதை அதிலும் விஷேடமாக நோயாளிகளாக உள்ளவர்கள் தாம் இருமும் போதும் தும்மும் போதும் வாயை அல்லது  முகத்தை மூடிக்கொள்வதை  பழக்கப்படுத்திக் கொண்டால் நோய்தொற்றுக் கிருமிகள் வெளிச்சூழலில் விடுவிக்கப்படுவதை நாம் தடுத்துக்கொள்ள முடியும்.

தொற்று நோய்கள் என்றால் என்ன ?, அவை எப்படி தொற்றுகின்றன? இதன் அடிப்படைகள் எவ்வாறானவை ? தொற்றைத் தடுப்பது எவ்வாறு? தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றிய நமது அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொற்று நோய்கள், அதன் தடுப்பு முறைகள்  பற்றி நமது மத குருக்கள்,  ஆசிரியர்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் என பல்வேறும் தரப்பினரும் தமது முயற்சிகளை முன்னெடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நவீன தொழில் நுட்ப யுகத்திலே இது தொடர்பான தகவல்களை மிக மிக இலகுவாக நம்மால் வெளிப்படுத்தவும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் மக்கள் பெரும் சொல்ல முடியா துயரத்தில் இருந்து வரும் நிலை காணப்படுகிறது. மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இச் சூழ்நிலை , மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்ற உளவியல்   பிரச்சினையினால் பாதிக்கப்படுகிறார்கள் இவர்கள் , சோகம், நம்பிக்கை இழப்பு, கோபம், எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளும், சோர்வு, பதட்டம் மற்றும் தனிமை சார்ந்த பிரச்சினைகளுடன் அதிகரித்து மனஅழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டதன் ஆரம்ப கட்டத்திலேயே உரிய மருத்துவ , சமூக சிகிச்சை வழங்கப்படும் பட்சத்தில் தற்கொலைகளை தடுக்க முடியும்.

மன அழுத்தத்துடனும் தற்கொலை எண்ணத்துடனும் ஒருவர் இருந்தால் அவருடன் இருப்பவர்கள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையற்ற ஆலோசனைகள், அறிவுரைகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ‘நீ தனியாக இல்லை. உனக்காக நாம் எப்போதும் இருக்கிறோன்’ என்பன போன்ற நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைப் பேசி, பிரியத்துடன் பழகினால் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும். அதற்கு கிராமங்கள் முதல் நகரங்களிலும் உள்ள வீடுகள் தோறும் களவிஜயங்களை மேற்கொள்ள வேண்டும் .

களவிஜயங்களின் ஊடாக அவர்களின் தேவைகள் மதிப்பீடு செய்யப்படு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதனை இலகுபடுத்த நாம் வாழும் கிராமங்கள் ,பிரதேசம் , மாவட்டம் என்று உள்ள சுகாதாரத் தொண்டர்களையும் , பல்கலைக்கழக மாணவர்களையும் பயன்படுத்துவதனூடாக நோயற்ற சமூகமாக பாதுகாத்திட விழிப்புணர்வினையும் தொற்று நோய் அல்லது அதன் அறிகுறிகள் உள்ளவர்களையும் இனங்கண்டு கொள்ளவும் முடியும்.

அவசரகாலத்தின் போது புதிய கட்டமைப்புக்களும் பரிமாணங்களும் மனநல சுகாதாரக் கட்டமைப்புக்கள், நாட்டின் பொதுவான சுகாதாரக் கட்டமைப்புக்கள்  ஆரம்ப நிலைச் சுகாதார வசதிகள், அரச மற்றும் தனியார் சுகாதார வசதிகள், மருத்துவமனைகள் மற்றும் இரண்டாம் கட்டக் கவனிப்பு மையங்கள்) என்பவற்றில் தங்கியிருக்கும். அவசரகாலத்திற்குரிய இடையீடுகள் அவ் அவசர நிலை மாறியவுடன் மறைந்து போகும், அவசர நிலைக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட சேவைகளாக இருக்கக் கூடாது. மனநலச் சேவைகளை பொதுவான சுகாதார சேவைகளுடன் ஒன்றிணைப்பதன் மூலம்  பல பரிமாணங்களை ஆராய்வதற்கும் பல தரப்பினர் அடங்கிய கோரோனா தொற்று நோய் விழிப்புணர்வு ஒருங்கிணைந்த செயல்குழுவின் தேவை காலத்தின் தேவை என்று கருதுகின்றேன் .

நிலவன்.  

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்