Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை விவாகரத்து | பெண்ணுக்கல்ல, பையனுக்குத்தான் நஷ்டம்? | அபிலாஷ் சந்திரன்

விவாகரத்து | பெண்ணுக்கல்ல, பையனுக்குத்தான் நஷ்டம்? | அபிலாஷ் சந்திரன்

6 minutes read

இம்முறை நீதிமன்ற காத்திருப்பு பெஞ்சில் என்னருகே தலைமுழுக்க சுருள்முடி, தாடி மற்றும் அழகான சிரிப்புடன் ஒரு ஐயப்ப சாமி இருந்தார். அவருடைய மனைவி திருமணமாகி ஒரே மாதத்தில் விட்டுவிட்டு பெற்றோரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். பெரிய பிரச்சினை ஒன்றுமில்லையாம். மனப்பொருத்தம் தான். இரண்டாண்டுகள் ஆகின்றன இப்போது. விவாகரத்துக்கு அவர்கள் தரப்பில் இருந்து கேட்டிருக்கிறார்கள். பரஸ்பர சம்மதத்துடன். செட்டில்மெண்ட் போன்ற வேறெந்த எதிர்பார்ப்பு இல்லை. அதிர்ஷ்டசாலி, சீக்கிரம் முடிந்துவிடும் என அவரை வாழ்த்தினேன். அவர் அதற்கும் சிரித்தார். வறட்டுச் சிரிப்பு. ஹியரிங்குக்காக வந்திருந்த தன் மனைவியைக் காட்டினார். ஒல்லியாக, பாவம் போல ஒரு இளம்பெண். ஒரே மாதத்தில் மனப்பொருத்தம் இன்மையால் பிரிய வாய்ப்பு குறைவு, அந்த பெண்ணின் விருப்பமில்லாமல் திருமணத்தை நடத்தியிருப்பார்கள், அவளும் ஒரு மாதத்தில் வந்துவிடலாம் எனும் முடிவுடனே தாலியை வாங்கியிருப்பாள், அதன் பிறகு தன் பெற்றோரிடம் திரும்பி சென்று உங்களால் தான், உங்களுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்க ஒப்புக்கிட்டேன், எனக்கு அப்படி ஆகிருச்சு, இப்படி ஆகிருச்சு எனப் புலம்பியவுடன் பெற்றோர் குற்றவுணர்வு கொண்டு ‘இனிமே நீ போக வேணாம், எங்களோடே இரு’ என்றிருப்பார்கள். இப்படித் தானே நடந்தது என்று கேட்டால் அட ஆமாம் சார், உங்களுக்கு எப்படித் தெரியும் என சிரித்தார்.

அப்பெண்ணுக்கும் லாபம், பெற்றோருக்கும் லாபம் – பொண்ணுக்கு ஏன் கல்யாணம் ஆகல என யாரும் கேட்க மாட்டார்கள் இல்லையா! நஷ்டம் அந்த பையனுக்கு மட்டும் தான். தேவையில்லாத வேதனை, கசப்பு, அலைச்சல். இனியொரு திருமணம் நடந்தால் அவர் தன் இரண்டாவது மனைவியை முழுமனதுடன் நேசிக்க முடியாது, நம்ப முடியாது, ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். இது நிறைய இடங்களில் இப்போது நடக்கிறது. கடந்த மாதம் இன்னொருவரை சந்தித்தேன். அவருக்கும் திருமணமாகி இரண்டே மாதங்களில் மனைவி மாமியாருடன் பிரச்சினை பன்ணி பெற்றோரிடம் திரும்பிவிட்டார். மூன்று வருடங்கள் ஆகியும் திரும்ப வர மறுத்ததால் அவரே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
முன்பு மனநலம் இல்லாத ஆண்களை அப்பாவி பெண்களுக்கு கட்டிவைத்து வாழ்க்கையை நாசமாக்குவார்கள், இப்போது விருப்பமில்லாத பெண்களை கட்டி வைத்து ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் இன்றைய படித்த பெண்களுக்கு திருமணமே அவசியமில்லை – அது காதல் திருமணமாகவோ அல்லது கணவன் பெரும் பணக்காரனாகவோ அல்லாத பட்சத்தில்.
நவீன பெண்களுக்கு என்ன தேவை? சாப்பிட, வாழ, செலவு செய்ய, ஊர் சுற்ற வாய்ப்பு வசதி. அது திருமணத்தால் தான் கிடைக்கும் என்றில்லை. ஒரு வேலையிருந்தாலே இவை நிறைவேறும். செக்ஸ்? அதுவும் நவீன நகர வாழ்வில் கிடைக்காத வஸ்து இல்லை. இல்லாவிட்டாலும் சகித்துக்கொள்ளப் போகிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்கு இன்றைய நவீன பெண்கள் ஆணை நம்பியில்லை எனும் போது திருமணம் அவர்களுக்கு அவசியம் இல்லை. சமூக அழுத்தம், அங்கீகாரத்துக்காக திருமணம் செய்யும் காலமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தன் திறமையாலும் சாதனையாலும் தனக்கான – தாலியினால் அல்ல – அங்கீகாரம் இருக்க வேண்டும் என அவள் நினைக்கிறாள்.

மேற்சொன்ன சங்கதிகள் திருமணத்தின் மூலம் அதிகமாகக் கிடைத்தாலோ, வேலைக்குப் போகாமலே அனுபவிக்கலாம் என்றிருந்தாலோ தான் நவீன படித்த பெண்களுக்கு திருமணம் நல்ல டீலாக இருக்கிறது. அதனாலே இப்பெண்களை பெற்றோர் வலியுறுத்தி திருமணம் பண்ணி வைக்க வேண்டி இருக்கிறது. அதன் பிறகும் அவர்கள் சின்னச்சின்ன அசௌகர்யங்களில் இருந்து புதிய குடும்பத்தில் ஏற்படும் பொருத்தமின்மைகளால் (மாமியார், உறவினர்களுடன், கணவனுடன்) உடனே கடுப்பாகி பிய்த்துக்கொண்டு வருகிறார்கள். அவளுடைய பெற்றோருக்கும் கடமை நிறைவேறியாகிற்று எனும் நிறைவிருப்பதால் மணமுறிவை ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ என எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆண்கள் பெண்கள் அளவுக்கெல்லாம் இதைப் பற்றி யோசிப்பதில்லை என நினைக்கிறேன். அவர்களுக்கு மிதமிஞ்சிய கற்பனை இருக்கிறது. குடும்ப வாழ்வு, வீட்டுச்சாப்பாடு, செக்ஸ் பற்றியெல்லாம். இந்த விசயங்களில் எந்த உத்தரவாதமும் இல்லை எனும் போது அவர்கள் கோபத்தால், ஆதிக்கத்தால், சில நேரங்களில் கையை ஓங்கி அதை சாதிக்க முடியுமா என முயல்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் வெகுண்டெழுமுன் பெண் பொடியைத் தட்டி புறப்பட்டு விடுகிறார்கள். வேறு பல காரணங்களும் இருக்கின்றன, ஆனால் இரு பத்தாண்டுகளுக்கு முன்பு இக்காரணங்களுக்காக மணமுறிவை நாடியிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லுவேன்.

நான் குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக காணும் ஜோடிகளில் 80% 24 வயதுக்கு உட்பட்டவர்கள், மிச்ச பேர் 45 வயதுக்கு மேலானவர்கள். கடந்த மாதம் ஒரு 55 வயதான தாத்தாவைக் கூட பார்த்தேன். பெரும்பாலானவர்கள் மத்திய, மேல்மத்திய வர்க்கத்தினர். விண்ணப்ப படிவத்தை நிரப்பக் கூடத் தெரியாத பெற்றோர்களையும் காண்கிறேன். ஆனால் இவர்களின் பிள்ளைகள் அப்படி இல்லை. மிக மிக அரிதாகத் தான் உடலுழைப்பில் ஈடுபட்டிருக்கும் வர்க்கத்தினரைப் பார்க்கிறேன். அவர்களுக்கு விவாகரத்து ஆவதில்லையா? ஏன் நவீன வாழ்வின் தடுமாற்றங்கள் அவர்களை பாதிப்பதில்லை? இதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

ஒரு சமூகமாக நாம் வெகுவேகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். திருமண அமைப்பு ரொம்ப பழையது. ஒரு யானையை ஒரு இடுங்கின தெருவுக்குள் கூட்டி வந்ததைப் போலிருக்கிறது இன்றைய உலகத்தில் திருமணம் பண்ணுவது.
நான் ஆண்களுக்கு சொல்ல விரும்புவது:

1) சமகாலப் பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், அதன் பிறகு கல்யாணம் பண்ணுங்கள். காதலுக்காக, செக்ஸுக்காக, வீட்டுச் சாப்பாட்டுக்காக, பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக ஒப்புக்கொள்ளாதீர்கள். தாம்பத்ய இன்பம் இன்று உத்தராவாதம் இல்லை, நிரந்தரமில்லை, இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு சமைக்கத் தெரியாது, கல்யாணத்துக்குப் பிறகு எப்படியும் ஹோட்டல், ஸ்விக்கி அல்லது சமையற்காரியைத் தான் நம்பியிருக்கப் போகிறீர்கள். விவாகரத்து என வந்து விட்டால் அது ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்வதைப் போல. சுமூகமாக முடிந்தால் தப்பினீர்கள். இல்லாவிட்டால் 3-7 வருடங்கள் மாதாமாதம் அலைய வேண்டும், சென்னையில் வக்கீல்கள் சராசரியாக மாதம் 50,000-75,000 வாங்குகிறார்கள், செட்டில்மெண்ட் என்று போனால் சொத்தில் பாதியைக் கொடுத்துவிட வேண்டும். சில பெண்கள் மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி, சின்னக் குழந்தை எல்லார் மீதும் வரட்சணைக் கொடுமை வழக்கை போட்டு விடுகிறார்கள். அதற்கு பெயில் இல்லை. அதன் பிறகு கைகாலில் விழுந்து எல்லா சொத்தையும், பணத்தையும் கொடுத்து செட்டில் பண்ணியே தப்பிக்க முடியும். நான்கைந்து ஆண்டுகளில் வழக்கு முடிந்து மனைவிக்கு மாத பராமரிப்பு தொகையைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் அதுவும் ஆணுக்கு ஒரு பாரம். உங்கள் சம்பாத்தியம் 30,000 என்றால் பத்தாயிரத்தை ஆயுள் முழுக்க முன்னாள் மனைவிக்கு கொடுக்க வேண்டும். அப்பெண் படித்தவள் என்றால் வேலைக்கும் போகலாம், இந்த பணத்தையும் வாங்கிக்கொள்ளலாம். ஆண்கள் எப்படிப் பார்த்தாலும் இடிபாட்டுக்குள் சிக்கினால் கைகாலை இழந்தே வெளிவர முடியும்.

2) அதனால் பெற்றோர் வற்புறுத்தினால் இந்த பிரச்சினைகளை எல்லாம் விளக்குங்கள். ஒரே ஒருநாள் ஏதாவது ஒரு வழக்கை காரணம் காட்டி குடும்பநல நீதிமன்றத்துக்கு வந்து அங்கு வந்துள்ளோருடன் பேசிப் பாருங்கள், எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள், அதை ஒரு வீடியோ எடுத்து உங்கள் பெற்றோருக்கு காட்டுங்கள், பொய் வரதட்சணை வழக்கு போடப்பட்டு சிறைசெல்ல நேர்ந்த பெற்றோர்கள், வயதானோரைப் போய் பார்த்து உங்கள் பெற்றோரையும் அவர்களுடன் பேச வையுங்கள். அப்போது தான் உங்கள் பெற்றோருக்கும் உறைக்கும். இது ஆபத்தான் பிஸினஸ். பெண்களைப் போல ஆண்களும் உஷாராகிக் கொள்ளுங்கள். இன்று திருமணத்திற்குப் பின் கிடைக்கிற ‘எல்லாம்’ உங்களுக்கு திருமணம் ஆகாமலே கிடைக்கும். காதலித்தால் லிவ் இன் பண்ணுங்கள். லிவ் இன் முறிந்தாலும் நீதிமன்றம் செல்லலாம் என்றாலும் பெரும்பாலான பெண்கள் போவதில்லை என்பதால் அது ஒரு பாதுகாப்பான அமைப்பு. அதுவும் கொஞ்ச நாள் தான். அடுத்த சில பத்தாண்டுகளில் லிவ் இன் காதலிகளும் உஷாராகி உங்களை நீதிமன்றத்திற்கு கையில் சிலம்புடன் அலைய விடுவார்கள். அதுவரை எஞ்சாய் பண்ணுங்கள்.

3) கல்யாணம் தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றால் மிக மிக குறைவாகப் படித்த கீழ்த்தட்டை சேர்ந்த ஒரு பெண்ணைத் தேர்வு பண்ணுங்கள். இத்தகைய பெண்களை நியாயமாக நடத்தினால் திருமண உறவுக்கு பொருத்தமாக இருப்பார்கள். நிச்சயமாக ஒரே மாதத்தில் விவாகரத்து, அப்பா வீடு என கிளம்ப மாட்டார்கள். அல்லது ஒரு அனாதைப் பெண்ணாகத் தேர்வு பண்ணுங்கள். உறவினர்கள் சின்ன பிரச்சினைகளை பெரிது பண்ணி விவாகரத்தை ஆதரித்து பிரித்துவிடுவது நடக்காது.

நான் சொல்வது உங்களுக்கு இப்போது பிற்போக்காகத் தெரியலாம். ஆனால் இதுவே எதார்த்தம்.

4) அழகு, நவீனம், ஸ்டைல், சொத்து, நகையைப் பார்த்து இன்றைய ஆண்கள் ஏமாந்துபோகிறார்கள். இவற்றுக்கு அப்பால் இருப்பது ஒரு சாதாரண பெண் தான். ஆங்கிலம் பேசத் தெரிந்தாலும் பப்புக்குப் போனாலும் இலக்கியம், உலக சினிமா பார்த்தாலும் இல்லாவிட்டாலும் அவள் பெண் தான். புறப்பூச்சுகளுக்காக தண்டனிடாதீர்கள்.

5) உங்களைச் சுற்றி கல்யாணம் பண்ணி அமைதியாக வாழ்கிறவர்களைக் கண்டு ஏமாறாதீர்கள் – உள்ளே புயல் அடிக்க வெளியே அமைதியின் சொரூபமாக உலா வருகிறார்கள். கணிசமான பந்தங்கள் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. யாரோ ஒருவர் அடியாழத்துக்கு சென்று சகித்துக் கொள்வதால் உடையாமல் இருக்கிறது. அல்லது வீடு, வேலை போன்ற பொறுப்புகளால் சிக்குண்டிருக்கிறார்கள். சிலர் ஹெல்மெட்டே போடாமல் விபத்தும் ஆகாமல் சுற்றிக்கொண்டிருப்பார்களே அதைப் பார்த்து நாம் எப்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்ட முடியாதோ அப்படித்தான் இவர்களைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொள்வது.

6) கல்யாண பந்தம் புனிதமானதோ உன்னதமானதோ அல்ல. அது ஒரு அசமத்துவமான பந்தம், புரிதல், அன்பு, விட்டுக்கொடுத்தலினால் அல்ல சமத்துவமின்மையே கடந்த காலத்தில் திருமணம் உறவுகளைக் காப்பாற்றியது. இன்றை சமத்துவம் ஏற்பட்டதும் திருமணத்திற்குள் பெரிய விரிசல்கள் தோன்றுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம், சுயசார்பு ஆகியன திருமணத்திற்கு விரோதமான விசயங்கள். ஏனென்றால் திருமணமானது இந்த முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் தோன்றுவதற்கு முன்பு ஏற்பட்டது. ஆகையால் நீங்கள் உங்களுக்கு சமமான ஒரு ஜோடியைத் தேடாதீர்கள். உங்களை விட சொத்தில், பணத்தில், கல்வியில், அறிவில், தகுதியில் குறைவான ஒரு பெண்ணையே தேடுங்கள். அன்புக்காகவும், பண்புக்காகவும் எந்த பெண்ணும் உங்களுடன் சில பத்தாண்டுகள் சேர்ந்து வாழப் போவதில்லை. பணம், வீடு, வசதி, அந்தஸ்து ஆகியவற்றில் அப்பெண் உங்களை சார்ந்திருந்தால் மட்டுமே அவள் உங்களுடன் இருக்கப் போகிறாள்.

7) பெற்றோராகப் பார்த்து வைக்கும் திருமணம் எனில் அப்பெண்ணை ஒருமுறைக்கு இருமுறைகள் சந்தித்து உன் முழுவிருப்பத்துடன் தானே நடக்கிறது, ஒரு மாதத்தில் போய்விட மாட்டாய் தானே எனக் கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

அதற்காக ஒரு பொருத்தமான பெண் கிடைத்ததும் அவளை போட்டு வதைக்கவோ முதுகு முறிய ஆதிக்கம் செலுத்தவோ வேண்டாம். என்னதான் உங்களை விட ஒரு படி கீழே இருந்தாலும் அவளுக்கு தன்மானம் இருக்கும். அசமத்துவத்தை தக்க வைத்துக்கொண்டே அன்பாகவும் பண்பாகவும் இருங்கள், பரிவுடன் ஆதிக்கம் செலுத்துங்கள்.

எழுத்தாளர் – அபிலாஷ் சந்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More