“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -9 | வதிலைபிரபா

கட்டுரையாளர் – வதிலைபிரபா

மகாகவி இதழில் “துட்டிலக்கியம்” தொடர் தந்த அதிர்வில் அடங்குவதற்குள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் 9 -ஆவது தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் பங்கேற்க அழைப்பும் வந்தது.

1996 டிசம்பர்த் திங்களில் நடைபெற்ற சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் ‘மகாகவி’ ஆசிரியர் வதிலைபிரபா “துட்டிலக்கியம்” எனும் தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டார். சிற்றிதழ்கள் குறித்தும், சிற்றிதழ்கள் சங்கம் குறித்தும் ஒருபோதும் நான் திட்டமிட்டதில்லை. இந்த இயல்பான நகர்வுகள் காலத்தின் திட்டமிடாத அதிசயங்களில் ஒன்றுதான். மாநாட்டின் அமைப்பாளர் இதயகீதன் அழைப்பின் பேரில் மாநாடு சென்றேன்.

மாநாட்டுத் திடலில் “துட்டிலக்கியம்” குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். நான் மேடையில் என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். ‘மகாகவி’ இதழில் வெளிவந்த “சிற்றிதழ்கள் மோசடிகள்” எனும் தலைப்பு பலரின் உதடுகளை முணுமுணுக்க வைத்தது.

மாநாட்டில் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் “தாராமதி” இதழாசிரியர் குன்றம் மு. இராமரத்நம் சங்கத்தில் இணைந்து செயல்படுங்கள் சிற்றிதழ்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து ‘மகாகவி’ சிற்றிதழ்கள் சங்கத்தில் தமது உறுப்பாண்மையைப் பதிவு செய்துகொண்டது. சங்கத்தில் இணைந்தமைக்காக சங்க உறுப்பாண்மை எண்ணும், சான்றிதழும் மகாகவிக்கு வழங்கப்பட்டன. அன்று முதல் ‘மகாகவி’ தமது முகப்பில் “தாஸ்னா உறுப்பிதழ்” (TAMIL SMALL NEWSPAPERS ASSOCIATION என்பதன் சுருக்கப் பெயர்) எனப் பொறித்தபடி வெளிவந்தது.

தமிழ்நாடு முழுவதுமுள்ள சிற்றிதழ்களை ஒருங்கிணைத்து, அவற்றில் சுமார் 150 இதழ்களை சங்க உறுப்பினர்களாக்கி இயங்கும் அமைப்பு தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம். கோயம்புத்தூர் இதன் தலைமையகம்.

1997 -ஆம் ஆண்டு நடைபெற உள்ள 10 -வது சிற்றிதழ்கள் சங்க மாநில மாநாட்டினை வத்தலகுண்டுவில் நடத்த “மகாகவி” இதழ் முன்வந்தது. கூடவே “சுவடு” மற்றும் “சுப்ரமணிய சிவா” இதழ்களும் இணைந்து நடத்த முன்வந்தன. ஆனால், “இனிய ஹைக்கூ” இதழாளர் மு. முருகேஷ் புதுக்கோட்டையில் நடத்த அனுமதி தரப்பட்டது. ஆனால், 1997 -இல் 10 -வது மாநாட்டினை மு. முருகேஷ் ஏன் நடத்தவில்லை என்று தெரியவில்லை.

வேறொரு இடத்தில் திட்டமிடப்பட்ட 10 -வது சிற்றிதழ்கள் சங்க மாநில மாநாட்டில் “மகாகவி” இதழாசிரியர் வதிலைபிரபா கலந்துகொள்ள அழைப்பு வருமென்றும், அது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல அந்த மாநாடு எனக்கு பெரும் திருப்பத்தைத் தருமென்று அறிந்திருக்கவில்லை. அந்த மாநாடு எங்கே நடைபெற்றது என்றும் கூட அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் “மகாகவி” தமது முதலாவது ஆண்டுமலரை வெளியிட முனைந்தது. அதற்கான அறிவிப்பை ‘மகாகவி’ ஜூன் 1997 இதழில் வெளியிட்டது..

வதிலைபிரபா. எழுத்தாளர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்.

முந்தைய தொடர்கள்

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -8 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -7 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -6 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -5 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -4 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் – 3 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 1

ஆசிரியர்