இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா? இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா?

புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய சம்பவம் முஸ்லிம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பெரும்பான்மையின சிங்கள இனவாத அமைப்புக்களால் இவை போன்ற பல்வேறு சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக 2009 மே மாதத்துக்குப் பின்னரான விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவ் மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இச்செயல்களைக் கண்டிக்க அரசும் தயங்குகின்றது. குறைந்த பட்சம் கண்டிப்பதாக அறிக்கையேனும் உத்தியோக பூர்வமாக விடுவதுமில்லை. இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்தாலும். முஸ்லிம் தலைமைகளின் இணக்க அரசியலும் நழுவல் போக்கும் சிங்கள இனவாத கட்சிகளுக்கு சாதகமாகவே அமைகின்றது. இன்றும் இலங்கையில் இனவாத அரசியலில் நம்பிக்கை வைத்தே கொழும்பின் அரசியல் நீரோட்டம் பாய்கின்றது. அண்மையில் உருவான புதிய அரசியல் அமைப்புக்களும் கட்சிகளும் இதற்கு உதாரணங்கள்.

பல தசாப்தங்களாக காணப்படுகின்ற இன முரண்பாடும் இனவழிப்பும் இன்றும் வீரியம் குறையாமல் இருப்பதும் இவற்றுடன் மத முரண்பாடும் இணைந்து சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பும் அரசியலில் அவர்களுக்கான இடமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தாயகத்தில் தமிழர்கள் தமது அடுத்தகட்ட நகர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக முன்னெடுக்க தொடங்கியபோதும் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகள் இன்றும் அரசுடன் தொங்கிக்கொண்டு சலுகைகள் பெறவே நினைக்கிறார்கள். முஸ்லிம் மக்களின் தேவைகள்  உரிமைகளா அல்லது சலுகைகளா என்பதில் முஸ்லிம் தலைமைகளுக்கு சந்தேகம் இருந்தாலும் கடந்தகால சம்பவங்களால் முஸ்லிம் மக்கள் உரிமைகள் பற்றி கடுமையாக சிந்திக்கத் தொடங்கியதின் அறிகுறிகளை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தந்தை செல்வாவின் சாத்வீக போராட்டங்களை நாமும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரஹூப் ஹக்கீம் கூறியுள்ளார். கடந்த ஞாயிறு மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற தந்தை செல்வா பற்றி ஆற்றிய நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறிப்பிட்ட சில இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவத்தை அடக்க முடியாது விட்டாலும் அது பற்றி கண்டிக்கவும் அரசால் முடியவில்லைஇந்தச் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வை அரசுக்கெதிராக பிரயோகிக்க முயற்சிக்காது நாம் மாற்றுவழிகளைக் காண தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.  இச் சந்தர்ப்பத்தில்தான் தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் நமக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது.

 

தந்தை செல்வாவுக்கு முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அவரது சாத்வீகப் போராட்டங்களில் முஸ்லிம்கள் உணர்வு ரீதியாகப் பங்கேற்றுள்ளார்கள்இன்று முஸ்லிம் காங்கிரசை அரசாங்கம் சரியாக எடை போடமுடியாது தடுமாறுகிறது. எதிர்க்கட்சியும் எம்மை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. நாங்கள் எதிர்வரும் மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுகிறோம். எமது கட்சியையையும் சமூகத்தையும் பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்தோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆயினும் வட மாகாணசபைத் தேர்தலில்கூட முஸ்லிம் காங்கிரசால் சிறுபான்மையின கட்சிகளுடன் முஸ்லிம் காங்கிரசினால் கூட்டுச் சேரமுடியவில்லை. கடந்த முறை கிழக்கு மாகாணசபை தேர்தலில் செயல்ப்பட்டதுபோல் தேர்தலின் பின்பு என்ன முடிவு எடுப்பார்கள் என்பது பற்றி ஐயம்கொள்ள வேண்டியுள்ளது, வடக்கிலும் அரசுடன் கூட்டு சேர்ந்தாலும் எவரும் ஆச்சரியப் படப்போவதில்லை.

கிழக்கில் அரசுக்கு மிகப்பெரிய பலமாக ஆதரவு கொடுத்தபின்னரும் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களது மத தலங்கள் மீதும் நடைபெறும் தாக்குதல்களை ஆட்சிபீடம் கட்டுப்படுத்த முன்வரவும் இல்லை பெரும்பான்மை இன மக்களும் இவற்றை கண்டுகொள்ளவும் இல்லை. அப்படி என்றால் முஸ்லிம் தலைமைகள் அரசுடனான இணக்க அரசியல் மூலம் எவற்றை தமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறார்கள் ?

வந்தியத்தேவன் | லண்டனிலிருந்து

ஆசிரியர்