கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு காயிதத்-அல்-ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிம் உமர் தலைமை வகிப்பார் என்றும் அந்த வீடியோ காட்சியில் அய்மான் அல் ஜவாகிரி பேசுவதாக தயார் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் கிளப்பி விடப்பட்ட இந்த அல்-கொய்தா சினிமாவிற்கு திரைக்கதை எழுதியது யார், இயக்கியது யார் என்பது குறித்து வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய அரசு உடனடியாக இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாடு முழுவதும் முஸ்லீம் இன மக்கள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவது பெருத்த காமெடியாக உள்ளது.
உலகத்தையே கோமாளி ஆக்க சிலர் செய்யும் பொம்மலாட்ட விளையாட்டில் ஆட்டு மந்தைகளை போன்று நாக்கை நீட்டி செல்லும் இந்தியாவை போன்ற அரசுகள் மீள முடியாத புதை குழியில் சிக்கி கொள்ளும் என்பது தெளிவான உண்மை.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வெளிப்படையான பயங்கரவாத அரசுகள் உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உருவாக்கி விட்ட இயக்கங்கள் தான் சர்வதேச அளவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களும் போராளி இயக்கங்களும். பல்வேறு பயங்கரவாத, போராளி இயக்கங்களுக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்வதும் இந்த நாடுகள்தான்.
இவர்களை எதிர்க்க அந்த அந்த நாட்டு அரசுகளுக்கு ஆயுத சப்ளை செய்வதும் இந்த நாடுகள்தான். எவ்வளவு கொடூரமான வணிகத்தை இந்த நாடுகள் மேற்கொண்டு வருகிறது. உலக நாட்டு பிரதமர்களை எல்லாம் கோமாளிகளாக்கி கொண்டு அமெரிக்கா செய்யும் சித்து வேலைக்கு தற்போது இந்தியாவில் கிடைத்த மிகப்பெரிய அடிமைதான் இந்துத்துவா வாதிகளின் இரும்பு பிரதமர் மோடி.
இலங்கையில் உள்ள தமிழ் ஈழ மீட்பு போராளி அமைப்பான விடுதலை புலிகளுக்கு ஆயுத சப்ளையில் இஸ்ரேலின் பங்கு அபரிமிதமாக இருந்தது. பின்பு அந்த போராளிகளை கொடூரமாக கொலை செய்ய இலங்கை ராஜபட்சே அரசுக்கு ஆயுதங்களை வழங்கியதும் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான்.இதே போன்று இவர்களது சித்து வேலையில் உருவானதுதான் அல்-கொய்தாவும், ஐஎஸ்-ம். ஆரம்பத்தில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக அல்-கொய்தா உட்பட இயக்கங்களை உருவாக்கி அப்பகுதிகளில் இவர்களை வைத்து கபளீகரங்களை ஏற்படுத்தி பின்பு இவர்களே உருவாக்கிய பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்கிறோம் என்று கூறிகொண்டு எத்தனை நாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் கபளீகரம் செய்திருக்கிறது.
இப்படிப்பட்ட தெளிவான உண்மைகள் நம் கண்முன்னே தெரிந்த பின்பும் அமெரிக்கா தனது கோமாளிகளை நடிக்க வைப்பதற்காக அவிழ்த்து விட்ட வீடியோ காட்சிக்கு இந்தியா உடனடியாக முசுலீம் இன மக்களை பெருவாரியான இந்து மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நடவடிக்கையில் குதித்துள்ளது இந்த பயங்கரவாத நாடுகளுக்கு அதீத மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கும்.
இந்த வீடியோ காட்சி அல்கொய்தா இயக்கத்தின் இணையதளத்தில் இருந்து எடுத்து சமூக தளங்களில் பரப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் உலகத்தில் உள்ள அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வரும் அமெரிக்கா ஏன் இன்னும் அல் கொய்தாவின் இணையதளத்தை முடக்க முடியவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மேலும் இந்திய தீபகற்ப நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை வலுவாக வேரூன்ற இதுதான் சரியான தருணம் என்பதை அமெரிக்காவும் இஸ்ரேலும் சரியாக புரிந்து கொண்டதன் விளைவுதான் தற்போது மோடியை கோமாளியாக்க பல்வேறு செயல்திட்டங்களில் இறங்கி உள்ளனர். காரணம் முசுலீம்களையும் பாகிஸ்தானையும் எதிரியாக சித்தரித்த கருத்தியலில் உருவான மோடியை விட இவர்களது செயல் திட்டத்தை எத்தருணத்தில் தான் செயல்படுத்த முடியும்? இந்த கண்ணோட்டத்தில் தான் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையையும் பார்க்க வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் இடையே சுமூக உறவுகள் ஏற்படும் போதெல்லாம் எல்லையில் பிரச்சினையை கிளப்பி விடுவது யார் என்பதில் தெளிவான புலனாய்வு இருந்த பின்பும் வேண்டும் என்றே அதை பாகிஸ்தானுடனும் அல்லது ஏதாவது போராளி அமைப்புகளுடனும் முடித்து கொள்வது எவ்வளவு கொடூரமான அரசியல்.
அல் கொய்தா பூதத்தை கிளப்பி விட்டு இந்திய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஆதிக்கத்தை செலுத்த அமெரிக்கா எத்தனிக்கும் இந்த தருணத்தில் இந்த வீடியோ காட்சி குறித்த உண்மைத்தன்மையை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய முசுலீம் இயக்கங்கள் சங்க பரிவார கும்பல்களின் மிரட்டலுக்கு பணிந்து போகும் விதமாக வீடியோ காட்சி வெளியான உடனேயே அல்கொய்தா இயக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் நகைப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ காட்சியை தங்களது திட்டத்தை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் மோடி அரசும் சாதகமாக பயன்படுத்தும் போது அதற்கு உறுதுணை கொடுப்பது போன்றே இசுலாமிய இயக்கங்களின் அறிக்கைகள் உள்ளன. யாரும் இனி கேள்வி கேட்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. எந்த முசுலீமையும் அல் கொய்தா தொடர்பு என்று மத்திய அரசு கைது செய்யலாம். எந்த இசுலாமிய இயக்கமும் அதற்காக குரல் கொடுக்காது. அல்லது இதையே காரணமாக வைத்து பொடா போன்ற கருப்பு சட்டங்களை கொண்டு வரலாம்.
மோடி ஆட்சி ஏற்பட்ட பின்பு இந்திய முசுலீம்களின் பொது புத்தியிலும் உண்மைதன்மை குறித்த தெளிவு சிறிது சிறிதாக மறைந்து ஒரு பதட்ட மன நிலை ஏற்படுவதாகவே தெரிகிறது. அல் கொய்தாவை முதலில் பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு ஆர்.எஸ்.எஸ்.
கும்பலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற மாற்று கேள்வியை கிளப்ப யாருமே தயாராக இல்லை. உலகில் அனைத்து பகுதிகளிலும் அல் கொய்தா தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் இந்தியாவில் மத கலவரங்களை உருவாக்கி ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் கூட்டி பார்த்தால் முதலில் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பது தெரியும். அதே போன்று ஐ.எஸ் இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அமெரிக்க இசுரேலால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிகையையும் கூட்டி பார்த்தால் யார் பயங்கரவாதிகள் என்பது தெரியும். ஆனால் ஒன்றாம் வகுப்பில் படித்த இந்த சிறிய கூட்டல் கணக்குக்கு கூட நாம் தயாராக இல்லை. நாம் ஆட்டுமந்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற பயங்கரவாத சக்திகளின் முயற்சிக்கு நாம் பலியாகி கொண்டு இருக்கிறோம்.