Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள் – பகுதி 1

தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள் – பகுதி 1

4 minutes read

தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக வெளியிடுவது போன்ற நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதன் பணிகளைத் தொடர்கிறது. நாட்டு நிலமைகள் காரணமாக இடையிடையே தொய்வுகள் எற்பட்டபோதும் தனது பணியினை இயன்றவரை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. இலங்கையில் ஏராளமான தினசரிகள், சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களும் வருகின்றன்.

இவற்றையெல்லாம் தேடி எடுத்து அவற்றில் கடந்த இரு வருடங்களாக வந்த சிறுகதைகளைப் படித்து, மதிப்பீடு செய்து, தேர்வு செய்வது இலேசான விடயம் அல்ல. கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்Pடு இது. வசந்தியும் தயாபரனும் முழு முயற்சி செய்து தேடி எடுத்த சில நூறு சிறுகதைகள் இவை. கண்ணில் படாது தப்பியிருக்கச் சாத்தியங்கள் இல்லை. இருந்தபோதும் எங்காவது தவறு நேர்ந்திருக்கக் கூடும என்பதை மறுக்க முடியாது.

முழுக்கதைகளும் வாசிக்கப்பட்டு அவற்றில் ஓரளவு நல்ல கதைகள் முதல் கட்டத்தில் வடிகட்டி எடுக்கப்பட்டன. இரண்டு வருடத்தில் சுமார் 400 சிறுகதைகள் வெளிவந்திருக்கும். அவற்றில் ஒவ்வொரு காலண்டிற்கும் சுமார் 10 கதைகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை மீண்டும் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன.  கதையின் கரு, சித்தரிப்பு முறைமை, கலைத்துவ வெளிப்பாடு, மொழி நடை, ஒட்டுமொத்த தாக்கம் போன்ற அம்சங்கள் புள்ளிகள் இடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் பெற்ற புள்ளிகளுக்கு எற்ப படைப்புகள் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்கள் அளிக்கபட்டன.

இருந்தபோதும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை தகவம் கவனத்தில் கொள்கிறது. இதன் காரணமாக சாஹித்திய பரிசு பெற்றவர்கள், வேறு பல போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்கள், தகவத்தில் முன்பு பரிசுகள் பெற்றவர்கள் எனத் தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற்று, தங்களை எழுத்துலகில் நிலை பெறச் செய்தவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதைத் தவிர்க்கிறது. அவர்கள் சிறப்புப் பராட்டு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை அமரர் இராசையா மாஸ்டர் காலம் முதல் பின்பற்றப்படுகிறது

உதாரணம் சொல்வதானால் இம்முறை ‘மாறுதல்’ என்ற சிறுதைக்காக சிறப்புப் பாராட்டுப் பெறும் தேவமுகுந்தனைச் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றபோதும் தனது எழுத்தாளுமையை சிறுகதை உலகில் பதித்து பரவலான பாராட்டுப் பெற்றவர் தேவமுகுந்தன். ஆரம்பக் காலத்திலேயே தகவம் அவருக்கு பரிசு அளித்து கௌரவித்திருக்கிறது. 2008ம் ஆண்டு இவர் எழுதிய ‘வழிகாட்டிகள’; சிறுகதைக்கு தகவம் பரிசளித்திருக்கிறது. சாஹித்திய பரிசு, வடக்கு மாகாண சபையின் பரிசு, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த பரிசு, அவுஸ்திரேலிய தமிழ் கலை இலகிய சங்கப் பரிசு எனப் பல. இவ்வாறு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் என்பதால் அவருக்கு பரிசு கொடுக்கபப்படாது சிறப்புப் பாராட்டை தகவம் வழங்கியுள்ளது.

இவற்றைத் தவிர மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் செய்கிறது. தெளிவத்தை ஜோசப், எஸ்.எல்.எம் ஹனீபா, இன்று கோகிலா மகேந்திரன் எனப் பலர் இவ்வாறு சிறுகதைத் துறைக்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்ட்டுள்ளார்கள். இதைத் தவிர மறைந்த எழுத்தளரான அமரர்.சி.வி.வேலுப்பிள்ளை பற்றிய நினைவுரை நடைபெற்றதும் அத்தகைய அங்கீகாரத்தில் அடங்கும்.

இருந்தபோதும் புதிய எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பதையே தகவம் தனது முக்கிய பணியாகக் கருத்துகிறது. அதன் மூலமே ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பானவையாக, உலக அங்கீகாரம் பெறத்தக்கவையாக வளர முடியும். சினிமா, சீரியல் நாடகம், கணனி, ஐபோன் என வேறு வழிகளில் மூழ்கிக் கிடப்பவர்களை சிறுகதையின் பக்கம் திருப்ப முடியுமாயின் அதுவே மகத்தான பணியாக இருக்கும்.

திருமதி இந்திராணி புஸ்பராஜா எனக்குப் புதிய படைப்பாளி. இம்முறை தனது படைப்பு ஒன்றிற்காக முதல் முறையாக பரிசு பெறுகிறார். செங்கதிர் சஞ்சிகையில் அவர் எழுதிய ‘கற்பெனப்படுவது’ என்ற சிறுகதை 2012ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு பரிசு பெறுகிறது. அது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பரவலாக அறியப்படாத அவர் தனக்குப் பரிசு கிடைத்தமை பற்றி அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெற்றிருக்கிறார். இதை அவருடன் தொலைபேசியில் கதைத்தபோது தான் உணர்ந்ததாக வசந்தி தயாபரன் கூறினார். தகவம் தனது குறிக்கோளை எட்டிவிட்டது என என்னால் உணர முடிந்தது.

அதேபோல வல்வை நெற்கொழுதாசன், கிரிஸ்டி முருகுப்பிள்ளை, எஸ்அரசரத்தினம் போன்றவர்களும் அண்மைக் காலத்தியே எமது வாசிப்புப் பரப்பில் வந்திருக்கிறார்கள். இவர்கள் பரிசு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ‘ரகசியத்தின் நாக்குகள்’ என்ற தனது கவிதைத் தொகுதி மூலம் அண்மையில் வாசகர்கள் பார்வையை தன் பக்கம் இழுத்தவர் நெற்கொழுதாசன். வேளிநாட்டில் வசிக்கும் வல்வை ஊர் படைப்பாளி அவர்.

அதே நேரம் ஏற்கனவே சிறுகதைப் படைப்புலகில் ஏற்னவே தமது இருப்பை புலப்படுத்தியிருக்கும் சிவனு மனோகரன், ராணி சீதரன், முருகேசு இரவீந்திரன், இராஜேஸ் கண்ணன், சமரபாகு சீனா உதயகுமார், கே;.எஸ்.சுதாகர், கிண்ணியா சபருள்ளா, ஆகியோரும் தலா ஒவ்வொரு பரிசு பெற்றுள்ளார்கள.

இருந்தபோதும் சிலர் பல பரிசுகள் பெறுவதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக வி.ஜீவகுமாரன் 4 பரிசுகளையும். தாட்சாயணி 2 பரிசுகளையும். சமரபாகு சீனா உதயகுமார் 2 பரிசுகளையும் பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது. இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவ் அவ் காலாண்டுகளில் தேர்ந்தெடுக்கக் கூடிய சிறந்த கதைகளை எழுதியிருந்தமையால் அவ்வாறு நேர்ந்தது. இவர்களுள் மேலை நாட்டில் வசிக்கும் நம்மவரான வி.ஜீவகுமாரன் அதிகமாக எழுதுவது மட்டுமின்றி கவனித்து வாசிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கிறார்

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் ஜீவகுமாரனின் வித்தியாசமான எமக்கு அந்நியமான புலத்தைச் சேர்ந்தவை. சூழல் வேறு, பிரச்சனைகள் வேறு, அத்துடன் கலாசார முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் மாந்தர்கள் பற்றிவை என்பதால் ரசிக்க முடிகிறது. நிறைய எழுதுகிறார். சிலவேளைகளில் ஒவ்வொரு மாதமும். ஆயினும் சலிப்புத்தட்டாமல் வாசிக்க முடிகிறது.

மாறாக தாட்சணியின் படைப்புகள் எமக்குப் பரிச்சயமான புலத்தில் நடப்பவையாகும். ஆயினும் அவை வெறும் கதைகள் அல்ல பாத்திரங்களின்  உணர்வுகள் ஊடாக நகர்த்தப்படுபவை. கூர்மையான அவதானிப்பும் ஆழமான நடையும் அவரது சிறப்பு.

சீனா உதயகுமாரும் எமக்குப் பரிச்சமான சூழலில் எழுதினாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார். அடிக்கடி படிக்கக் கிடைத்தாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார். ராஜேஸ் கண்ணனும் அவ்வாறே. மரணவீட்டில் சுன்னப் பாட்டு எமது பாரம்பரிய வழக்கம் எவ்வாறு இன்று மறைந்தழிந்து போகிறது என்பதை உணர்வு பூர்வமான படைப்பாகத் தனது பரிசுக் கதையில் தந்திருந்தார்

மிகக் குறைவாக எழுதுபவர் சித்தாந்தன். கவிஞனான அவரது ‘நூறாயிரம் நுண்துளைகளால்..’ கதை மிகவும் வித்தியாசமானது. கலைமுகத்தில் வெளியான அப் படைப்பு ஒரு படைப்பாளி பற்றிப் பேசுகிறது. அதன் கருவை விட அது சொல்லப்பட்ட விதம் அற்புதமானது. வழமையான இலங்கைப் சிறுகதை படைப்பாக்க முறையில் இருந்து மாறுபட்டு, கவித்துவமமான நடையில் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் கூற முடியுமானாலும் கால அவகாசம் இல்லாததால் மற்றைய படைப்புகள் பற்றி பேசவில்லை.

பரிசு பெற்ற 21 கதைகளில் 10 சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலும், நான்கு சிறுகதைகள் ஞாயிறு தினக்குரலிலும்  வெளியாகியுள்ளன. கலைமுகம,; வீரகேசரி ஆகியவற்றில் தலா இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ஜீவநதி, சுடரொளி, செங்கதிர், ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவற்றையெல்லாம் இங்கு கூறுவதற்குக் காரணம் தகவம் பரிசுகள் படைப்புகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகின்றனவே ஒழிய யார் எழுதினார, எதில் எழுதினார்; ஆகியவற்றை நோக்காகக் கொண்டு அல்ல என்பதை வலியுறுத்தவே.

இதன் காரணமாகவே பொருத்தமான பரிசு பெறக் கூடிய சிறந்த சிறுகதைகள் கிடைக்காத காரணத்தால் 2012 காலாண்டில் இரண்டு பரிசுகளும் 2013ல் ஒரு பரிசும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சிறப்பாக இருப்பதும் வேறு சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சொல்லும்படியாக இல்லாதிருப்பதையும் உணரக் கூடியதாக இருக்கிறது. சில விமர்சகர்கள் இதைச் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள்.

 

 

தொடரும்…

 

 

 

நன்றி :  எம்.கே.முருகானந்தன் | பதிவுகள் இணையம்

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More