Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பகுதி 2 | தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள்

பகுதி 2 | தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள்

2 minutes read

இதற்குக் காரணம் என்ன? பத்திரிகைகளில் வெளியாகும் அனைத்து சிறுகதைகளின் தரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் அற்புதமாக இருக்க ஏனைய காலாண்டுகளில் அவை சாதாரண தரத்தில் இருந்தால் இது பரிசுத் தேர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அமரர் இராசையா அவர்கள் தகவம் பரிசளிப்பு சிறுகைத் தொகுப்பிற்கான முன்னுரையில் இதை ‘மதிப்பீட்டு விழு’ எனச் விளக்குவதை அவதானிக்க முடிகிறது.

தகவத்தின் பரிசு வழங்கும் இந்தச் செயற்பாட்டால் கிடைக்கப் போகும் பெறுபேறுகள் எவை?

வந்த படைப்புகள் பற்றிய பொது மதிப்பீட்டைச் செய்ய முடியும். அவற்றில் இருந்து சில அவதானங்களை மேற்கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாக சிறுகதை இலக்கியம் வளரச்சியடைவதை நோக்கமாகக் கொண்டு செய்ய வேண்டியவற்றைச் சிந்திக்க வேண்டும்.

இலங்கைச் சிறுகதைகளின் தோற்றம் 30களில் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஆளுமைகள் வருகிறார்கள்

60களில் நவீனத்தன்மையுடைய சிறுகதைகள். பன்முக பரிமாணத்துடன் எழுதப்பட்டன.

இப்பொழுது பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணக்க கதைகள் பெரும்பாலானவை யுத்தத்தைப் பேசுபவை மற்றவை வறுமையைப் பேசுபவை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கொண்டு வருவது குறைவு.

இன்றைய பல புதிய எழுத்தாளர்களுக்கு கடந்தகாலப் படைப்புகளுடனான பரிச்சயம் குறைவு. தானும் தன்னைச் சுற்றிய 4 பேருடைய படைப்புகள் தவிர்ந்த பரந்த வாசிப்பு அதிகம் இல்லை. எமது இலங்கையர்கோனையும் சம்பந்தனைப் பற்றியும் தெரியாது. தமிழக்கத்தின் புதுமைப்பித்தனையும் மௌனியையும். லாசாராவையும் ஜெயகாந்தனையும் படித்தது கிடையாது.

இதனால் சிறுகதை ஆக்கம் பற்றிய பரந்த அறிவும் பரந்துபட்ட அனுபவமும் குறைவு. அவுஸ்திரேலியாவிலிருந்து ஆ.சி.காந்தராஜாவும் கனடாவிலிருந்து அ.முத்துலிங்கமும் உலகம் சுற்றியதால் தங்களுக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை தமிழில் சிறுகதைகள் ஊடாகத் தருவதும் நாங்கள் அவர்களது எழுத்துக்களை ஆர்வத்தோடு படிப்பதற்கு காரணமாகின்றன.

ஆ.சி.காந்தராஜா தனது தாவரவியல் அறிவைக் கொண்டு மாம்பழத்தை பற்றி எழுதும் போது அங்கு சீனா ஆபிரிக்கா என பல கண்டங்களைத் தாண்டும் ஆச்சரியமான அனுபவங்களைத் தருகிறார். மிருக வைத்தியரான நடேசன் சிறுகதை நாவல் போன்ற தனது படைப்புகளில் தனது துறை சார்ந்த அனுபவங்களையும் ஆங்காங்கே கலந்து தந்து ஆர்வமாகப் படிக்க வைக்கிறார். இருந்தபோதும் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழத்துடனான தங்கள் பழைய நினைவுகளைவிட்டு விலக முடியாது திணறுகிறார்கள்.

அத்துடன் இலக்கியம், சமூகவியல், உளவியல் என பரந்தும் கூர்ந்தும் பல படைப்பாளிகளால் பார்க்க முடியாதுள்ளது. சிறுகதை என்பது வெறுமனே கதை சொல்வது அல்ல என்பதைப் பலரும் புரிந்து nhகள்வதில்லை. புதிய மொழி புதிய கரு புதிய நடை என தமக்கென ஒன்றை உருவாக்க பலராலும் முடியாதிருக்கிறது.

அச்சுப் பதிவிலிருந்து இணையத்தில் வாசிக்கும் பழக்கமாக மாறியதும் மற்றொரு காரணம். நிறையக் கிடைப்பதால் எதை வாசிப்பது எதை விடுவது என்பது புரியாமல் பலரும் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊடகம் பெறுமதிமிக்கது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் உலக இலக்கிய அறிவை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளதை மறக்கக் கூடாது.

எமது சிறுகதை இலக்கியம் வளராதிருப்பதற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் இல்லாதிருப்பது முக்கிய காரணமாகிறது.

எழுதுவது சிலர். அதைப் பற்றி விமர்சிப்பதும் அந்த ஒரு சிலரே என்ற சூழலில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறியும் விமர்சனமே இங்கு இருக்கிறது. மாறாக ஒருவர் கறாராக விமர்சித்தால் அதைத் தனிப்பட்ட தாக்குதல் என்ற ரீதியிலேயே படைப்பாளிகள் அணுகுகிறார்கள். பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் படைப்புகளை அலச வழிகாட்டித் தந்தார்கள். ஆனால் அதிலிருந்து மேலெழுந்து கலைத்துவமான படைப்புகளுக்கு வழிகாட்டும் விமர்சகர்கள் எழவில்லை என்றே சொல்ல வேண்டும். மு.பொ., தளையசிங்கம் ஆகியோர் புதிய அணுகுமறையைக் காட்டியபோதும் அது பரவலாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆரோக்கியமான நல்ல விமர்சனங்கள் இல்லாததால் வாசிக்கத் தூண்டும் ஆர்வம் எழுவதில்லை. நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் நல்ல படைப்புகளை கோடி காட்டுகிறார் என்பது உண்மை. பலரும் அவற்றால் பயன்பெறுகிறோம். ஆனால் அக்குவேறு ஆணி வேறு பிரித்து விரிவாக எழுதுவதில்லை என்பதால் அவற்றின் ஆழத்தை பலராலும் கண்டுகொள்ள முடிவதில்லை.

எம்மிடையே தேடல் உள்ள எழுத்தாளர்கள் இல்லை என்பதற்கு இங்கு முழுநேர எழுத்தளார் என எவருமே இல்லை என்பது முக்கிய காரணமாகும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தங்கள் படைப்புகளுக்காக நேரடி அனுபவங்களைப் பெறப் பயணப்படுவதுபோல எம் எழுத்தாளர்களால் முடியாது. குறுகிய வாசக எல்லையைக் கொண்ட எமது எழுத்தாளர்கள் எழுத்தை முழுநேர வேலையாகக் கொள்வது பொருளாராத ரீதியாகச் சாதிதியமற்றது. ஏனெனில் இங்கு பலரும் தங்கள் தொழிற் கடமைகளுக்கு அப்பால் எழுத்தை ஒரு பொழுதுபோக்காகவே கொள்ள முடிகிறது.

 

 

நிறைவு பெற்றது…..

 

 

 

நன்றி :  எம்.கே.முருகானந்தன் | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More