Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை குந்தவை | கொண்டாடப்படவேண்டிய ஓர் எழுத்தாளர் | அ. யேசுராசா

குந்தவை | கொண்டாடப்படவேண்டிய ஓர் எழுத்தாளர் | அ. யேசுராசா

6 minutes read

 இன்று மூத்த எழுத்தாளராகவுள்ள  குந்தவை பேராதனைப் பல்கலைக்கழக மாணவியாயிருக்கையில், தமிழக ‘ஆனந்த விகடன்’ வார இதழில் அவரது சிறுகதையொன்று ‘முத்திரைக் கதை’யாகப் பிரசுரமானதெனக் கேள்விப்பட்டிருக் கிறேன் ; வேறு யாராவது ஈழத்தவரின் சிறுகதை அவ்வாறு முத்திரைக் கதையாக வெளியானதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் சிறந்த கதைகளைத் தேர்வு செய்தே முத்திரைக் கதையாக வெளியிட்டுக் கூடுதல்  சன்மானமும் கொடுத்தார்கள். அறுபது களில் ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் வழியாகவே ஜெயகாந்தன் பிரபல மானார். அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து ஏராளமான முத்திரைக் கதைகளை நான் படித்துள்ளபோதிலும், குந்தவையின் கதையைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை (பிந்திய காலங்களில் வெளிவந்த அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலுங்கூட அதனைக் காணவில்லை ; அப்பிரதி தவறியிருக்கலாம்!).

       எண்பதுகளில் ஒருநாள் நண்பர் பத்மநாப ஐயருடன், தொண்டைமானாறிலுள்ள குந்தவையின் வீட்டுக்குச் சென்றபோதே, முதல்முறையாக அவரைச் சந்தித்தேன் ; பத்மநாப ஐயருக்கு ஏற்கெனவே அவருடன் தொடர்பிருந்தது. புத்தகங்கள், சிற்றிதழ் களை ஐயர் அவருக்குக் கொடுத்தார் ; கலை, இலக்கியம்பற்றிக் கதைத்தோம். அவ்வீட்டில் கண்ட மிகப்பெரியதொரு நங்கூரம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ; விசாரித்ததில், முன்பு அவரது குடும்பத்தவரின் பாய்க்கப்பலில் அது பாவிக்கப்பட்ட தென்று தெரியவந்தது. பின்னர் குந்தவையுடனான தொடர்பு நீடித்தது . ‘அலை’யில் அவரது ‘Field Work’ சிறுகதையும் வெளியானது. கடிதங்கள், புத்தகங்கள், இலக்கிய இதழ்களின் பரிமாற்றமும் நிகழ்ந்தது. அவரது சகோதரரின் கூரை ஓடுகள் விற்கும் கடையொன்று, யாழ்நகரத்தில் இருந்தது ; அதன்மூலம் இலகுவாகத்  தொடர்பை மேற்கொள்ள முடிந்தது. குந்தவை யாழ்நகர் வந்த சிலவேளைகளில், அந்தக் கடை யில் நேரிலும் சந்திக்க முடிந்தது.

 குறைவாக எழுதிய அவரது சிறுகதைகள், ‘யோகம் இருக்கிறது’, ‘ஆறாத காயங்கள்’ என இரண்டு தொகுப்புகளாக வந்துள்ளன ; அவற்றிலுள்ள (13 + 9)   22 கதைகளுடன், பேராதனை ‘பல்கலை வெளியீடா’க வந்த ‘காலத்தின் குரல்கள்’ (1964) மாணவர் கதைத் தொகுப்பிலுள்ள, ‘மனிதத்துவம்’ சிறுகதையுடன் எல்லாமாய், 23 கதைகளே தற்போது எனக்குப் படிக்கக் கிடைக்கின்றன. தேர்ந்த வாசகரின் கவன வட்டத்துள், ஈழத்தின் சிறந்த எழுத்தாளரில் ஒருவராகவே அவர் மதிக்கப்படுகிறார். 

நல்ல படைப்பாக்கத்துக்கு கலைஞர் / எழுத்தாளரின் அனுபவத் தாக்கம் இன்றியமையாதது. அது முதல்நிலை அனுபவமாகவும் அல்லது இரண்டாம்நிலை அனுபவமாகவும் இருக்கலாம். “இலக்கியங்கள் ஆழ்ந்த அனுபவங்கள் இல்லாமல் எழுதப்பட முடியாதவை” என்ற மேற்கோளைத் தனது ‘யோகம் இருக்கிறது’ நூலின் ‘என்னுரை’யில் .குந்தவை குறிப்பிடுவதால், இதுபற்றிய தெளிவு அவருக்கு இருப்பதும் புலனாகின்றது. 

 எதுவாயினும், கலைஞர் / எழுத்தாளரின் உணர்திறன் முக்கியம்! இயற்கைச் சூழல், சம்பவங்கள், மனித நடத்தைகள், வெவ்வேறு உணர்வுக்கோலங்களைக் கூர்மையாக அவதானித்துப் புரிந்துகொள்ளும் திறமை வேண்டும். அவ்வனுபவத் தாக்கங்களைப் படைப்புகளில் வெளிப்படுத்தும் கூர்மையான மொழியாட்சி – தனித்தன்மையை வெளிக்காட்டும் படைப்புமொழிக் கையாள்கையும் எழுத்தாளருக்கு அவசியம். நல்ல கலை இலக்கியங்களுடனான தொடர் பரிச்சயம், ரசனைப் பக்குவம், அவைபற்றிய மதிப்பீட்டுக் கூருணர்வு என்பனவும் இணைந்திருக்க வேண்டும். இவற் றில் பலகூறுகள் குந்தவையிடம் சுவறியிருப்பதை அவரது படைப்புகள்வாயிலாகவும், அவருடனான பழக்கத்தின் காரணமாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.

 குந்தவையின் பல கதைகளில், கண்ணில்படும் காட்சிகளையும் அவற்றினடி யாகத் தோன்றும் எண்ணங்களையும் உயிர்ப்புடன் சித்திரிக்கும் தன்மை காணப்படு கிறது. ‘இறுக்கம்’, ‘பெயர்வு’, ‘இணக்கம்’, ‘பயன்படல்’, ‘Field Work’, ‘புழுக்கம்’ முதலிய கதைகளில் இச்சித்திரிப்புத் திறன் நன்கு வெளிப்படுகின்றது. ஆயினும், ‘இணக்கம்’, ‘பயன்படல்’ ஆகியவற்றின் முற்பகுதிச் சித்திரிப்புகளிலுள்ளவை கதையின் மைய நோக்கிற்கு அவசியமானவையல்ல எனவும் தோன்றுகின்றது.

  போர்க்கால / போருக்குப் பிந்திய சூழலின் பதிவுகள், பல கதைகளில் இயல்புத் தன்மையுடன் பிரச்சாரமின்றி வெளிப்பட்டுள்ளமை மிகுந்த கவனத்துக்குரியது. இயக்க மோதல்கள், உலங்கு வானூர்தி சுற்றிச் சுற்றிச் சுடுதல், வெளிகளில் பயணிகள் வாகனத்தையும் துரத்திச் சுடுதல் - பயணிகளின் அவலக்குரல்கள், குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதல்கள், கடற்கலங்களிலிருந்து கடற்கரைப் பிரதேசங்கள் நோக்கிய பீரங்கித் தாக்குதல்கள், ஷெல்வீச்சில் சிதறும் மனித உடல்கள் -  வீடுவாசல்கள், அவலத்துடன் இடம்பெயரும் மக்கள்கூட்டம், யாழ்நகரத்தில் கொட்டடிப் பிரதேச மக்கள் இரவுவேளைகளில் பாதுகாப்பிற்காக,  சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பு வலயமான யாழ். மருத்துவமனைச் சூழலில் – கடை களின் படிகளிலும் தெருக்களிலும் உறங்கிக் காலையில் வீடுதிரும்புதல், 1995 இல் மாபெரும் இடப்பெயர்வு, வன்னி நோக்கிய ஆபத்தான கிளாலிக் கடற்பயணம், இறுதிப் போர்க்கால நிகழ்வுகள், முள்ளுக்கம்பி முகாம்களில் கூட்டுத்தண்டனைபோல் அடைபட்ட வாழ்வு, மீண்டும் ஊர் திரும்பியபின் இராணுவக் காவலரண்கள், சோதனைச் சாவடிகள் சூழ்ந்த வாழ்வு, திரும்பத் திறக்கப்படாத முன்னர் மூடப்பட்ட வீதிகள், அவலங்களை  எதிர்கொள்ளலில் மனச்சிதைவுக்கு உட்பட்ட மனிதர்கள்  என அக்காலங்கள்  உயிர்ப்பான ஆவணங்களாகியுள்ளன. இக்கதைகள் பிற மொழிகளில் – குறிப்பாக சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் ; அவை எமது காலத்துயரை அந்தந்த மொழிபேசும் மக்களிடம் வலுவாக உணர்த்திநிற்கும்!
   ‘இணக்கம்’ கதை புத்தளத்தில் நிகழ்கிறது. வெளி மாவட்டத்தில் வசிக்கையிலும் தனது சொந்தப் பிரதேசம், மக்கள் பற்றிய அக்கறைகொண்ட - கதைசொல்லியான ‘நான்’ என்னும் பெண் பாத்திரத்தினூடான, ஒரு வெளிப்பாடு இது :
   // எல்லாமே புதிதாக அழகாகத் தெரிந்தன. வெய்யில் தகிப்பிலும் வேர்வைக் கசகசப்பிலும், இந்த நகரம்தான் எவ்வளவு இயல்பாய், உயிர்த்துச் சிரிக்கிறது. எல்லோரும் கூடி ஒருவரை ஒருவர் கண்டு பேசிச் சிரித்து...
   இப்படியான ஒரு தன்னியல்பும் நிம்மதியும் சொந்த ஊரில்  இப்பொழுது இருக்குமா என நினைத்துக் கொண் டேன்.

எங்கோ ஒரு வெடிகுண்டின் ஓசை கேட்கும். தொடர்ந்து பலி ஆடுகளைப் பலி எடுக்கவென வரும் கனரகங்களின் உறுமல்களுக்கும் ‘படபட’க்கப் போகும் யந்திரத் துப்பாக்கிகளுக்கும் பயந்து, இழுத்துப் பூட்டப்படும் கடைத் தெருக்கள் ; ஓடிமறையும் மக்கள். //
நகரத்தில் நிற்கையில் அந்தப்பாத்திரம் இதனைக் காண்கிறது :
// இருபுறமாக சனங்களைப் பிரித்துக்கொண்டு புத்தளம எனத் தனிச்சிங்களத்தில் பெயர்ப் பலகை போட்ட பஸ் ஒன்று நிறைசனத்துடன் ஊர்ந்து வந்தது. //

 மொழிப் பாரபட்ச நிலைமை, எளிதாகச் சொல்லப்பட்டு விடுகிறது!  
 இனப் பாரபட்சம் இன்னும் கூர்மையாக வெளிப்படுவது, இக்கதையின் இன்னோரிடத்தில் சித்திரிக்கப்படுகிறது. வீட்டுக்காரியான முஸ்லிம் அன்ரி சொல்லிவிட்ட சாமான்களை வாங்க,  ‘மார்க்கெட்டிங் டிப்பாட்மென்ரில்’ வரிசையில் நிற்கிறாள் அந்தக் கதைசொல்லிப் பெண். வரிசை நகர்ந்து கிட்டவாக வருகையில், சிட்டை எழுதும் ஊழியன் எழுந்து உள்ளே செல்கிறான் ; வரத் தாமதமாகிறது. இவள் வரிசையி லிருந்து சற்று விலகி கம்பியில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தி நின்றாள். ஊழியன் வந்ததும் வரிசை உஷாரானது. பின்னே நின்ற சிங்களப்பெண் உடனே இவளுக்கு முன்னே சென்று நின்றாள். இவள் அவளிடம், “இது என்னிட மென்று நினைக்கிறேன்” என ஆங்கிலத்தில் சொல்கிறாள் ; உருவாகும் இடைவெளி யில் தனது தோளைப் புகுத்திவிடவும் ஆயத்தமாகிறாள். ஆனால் அச்சிங்களப் பெண்ணோ கடுமையான முகத்துடன், “மே தெமல கெல்ல போலிமே இன்னே நத்துவ மதட்ட என்ட ஹதனவா” (“இந்தத் தமிழ்ப் பெண் வரிசையில் நிற்காமல்  இடையில் நுழையப் பார்க்கிறாள்.” ) எனப் பொய் சொல்கிறாள். இவளுக்கோ சிங்களம் தெரியாது ; போலிமே என்பதும் ஹதனவா என்பதும் மட்டுமே புரிகிறது. இயலாமையில், யாராவது தனக்காகக் கதைப்பார்களா எனப் பின்னால் பார்க்கிறாள். ஆனால் அவர்களோ, “இட தெண்ட எப்பா, இட தெண்ட எப்பா” (“இடம் கொடுக்க வேணாம், இடம் கொடுக்க வேணாம்.”) என்று சொன்னபடி நெருங்கி நிற்கின்றனர். இவள் ஆற்றாமையுடன் வரிசையின் பின்புறம் செல்கிறாள்! இவளது உரிமை மறுக்கப்படுவதும், கடைநிலைக்குச் செல்ல நேர்வதும் – இலங்கையில் முதிர்ச்சி யடைந்துள்ள பேரினவாத பாரபட்சச் சூழலில் -  ஆழ்ந்த  குறியீட்டுத் தன்மையைப் பெற்றுக் கதைக்கு வலுச்சேர்க்கிறது! 

 நல்ல இலக்கியப் படைப்புகளுடனான குந்தவையின் பரிச்சயம் ஆங்காங்கே வெளிப்படுவதும் முக்கியமான சுவாரசியப் பண்பாகும்.

 i // மனத்தில் இலங்கையர்கோனின் வல்லையைக் கடக்கும் மாட்டுவண்டில்
    வந்தது. // (‘இறுக்கம்’ சிறுகதையில்).
 ii // தான் ஒரு சாதாரணமானவன். ‘தகழி’யின் கேசவப்பிள்ளை மாதிரி. //
    (‘யோகம் இருக்கிறது’ சிறுகதையில்).
 III // ஜீவாவின் ‘மல்லிகை’யை இவளுக்கென தவறாமல் எடுத்து வைத்திருந்து
     தரும் அந்தப் புத்தகக் கடைக்காரர். // {‘பயன்படல்’ சிறுகதையில்).
 1V // வ. அ. இராசரத்தினம் தன் கதை ஒன்றில் திருக்கோணமலையை
     “‘கந்தகபூமி” என்று குறிப்பிட்டிருக்கின்றார். // (‘பயன்படல்’ சிறுகதையில்).
 v // இப்படியான ‘ஆண்கள்’ எல்லாருமே நீலபத்மநாபனின் ‘திரவி’ 
     போன்றவர்கள்தானோ என அவள் அடிக்கடி யோசித்திருக்கிறாள். // (‘வீடு
     நோக்கி... சிறுகதையில்).
 vi // இவன், ஒரு காசை எடுத்து, தரையில் தட்டிப் பார்த்தான். இப்படித்தான்
     அசோகமித்திரனின் கதை ஒன்றில் ரெலிபோன் பூத் ஒன்றிற்குப் பொறுப்பாக 
     உள்ள கண் தெரியாத ஆள்... (‘இரக்கம்’ சிறுகதையில்).
        vii // என் மனத்தில் ஏதோ ஒரு கதை ... அழைக்கின்றவர்கள். அந்தப்பெண்ணை, 
     சில கணம் மறந்து, அதன் தலைப்பைத் தேடிப் பிடித்தேன், வண்ணநிலவ
     னுடையது. // (‘இணக்கம்’ சிறுகதையில்).
 viii // சட்டென்று சுப்ரபாரதி மணியன் நினைவுக்கு வந்தார். அவரும் இப்படி ஒரு
      வீடியோ ரேப்பை பார்த்து இருப்பாரென்ற எண்ணம் ஓடி  வந்தபொழுது
      வெட்கமாக இருந்தது. // (‘திருவோடு’ சிறுகதையில்).

 குந்தவையின் எழுத்துகளில் ஆங்காங்கே ஒருவகை எள்ளல் அலாதியாக வெளிப்படுவதைக் காணலாம். ‘திருவோடு’, ‘யோகம் இருக்கிறது’, Field Work’ ஆகியவற்றில் கூடுதலாக அது இருக்கிறது. ஆயினும் ‘இணக்கம்’ கதையின் ஓரிடத்தில் அது நுணுக்கமாக வெளிப்படுவதை, நான் மிகவும் இரசித்தேன்! ஆசிரியையான கதை சொல்லிப் பாத்திரம் இவ்வாறு சொல்கிறது :

// சன நடமாட்டம் அருகியே இருக்கும் கிழமை நாட்களில் மட்டும் அன்ரி,
  சந்தைக்குப் போக ஆயத்தமாவாள். என்னையும் வரச் சொல்லிக் கூப்பிடுவாள்.
  தன் கூடையையும் என்னிடமே தருவாள்.
  ரோட்டில், சேலைத் தலைப்பை விரித்து தன் கூனல் முதுகையும் தலையையும் போர்த்திப் 
  பிடித்தபடி நடப்பாள். நான் பின்னே போவேன். அப்படி முன்னே நடக்கையில், அவள்
  தன்னைப்பற்றிய என்னமாதிரி இமேஜுக்கு உருவம் கொடுக்க முனைகிறாள் என்பதை 
  உணரமுடியும். வேலைக்காரி பின் தொடர, சந்தைக்குப் போகும் உயர் முஸ்லிம் குடும்பத்
    தலைவி. //  

‘யோகம் இருக்கிறது; தொகுப்பில் எட்டுக் கதைகள் நல்ல கதைகளாகப் படுகின்றன. ‘வல்லை வெளி’, ‘பயன்படல்’, ‘வீடு நோக்கி’...’ ஆகியமூன்றை அடுத்த படிவரிசையில் வைக்கலாம். காட்சிகள், நிகழ்வுகளின் சித்திரிப்புகள் நன்றாக உள்ளபோதிலும், ஒரேவகைத் தான சித்திரிப்புத் தன்மை மதிப்பைச் சற்றுக் குறைக் கிறது. ‘இரக்கம்’ பரவாயில்லை ரகம் ; ‘குறுக்கீடு’ கதை தெளிவானதாக இல்லை! 

 ‘ஆறாத காயங்கள்’ தொகுப்பு பலவீனமானதாக இருக்கின்றது. அதிலுள்ள ‘புழுக்கம்’ நல்ல கதை! முழுமைத்தன்மையைக் கருதி, ஏனைய கதைகளிலுள்ள பலவீன அம்சங்கள் செவ்விதாக்கம் செய்யப்படவேண்டியவை எனத் தோன்றுகின்றது ; குந்தவையால் அதைச் செய்ய முடியும்!

  மேலும், சிலகதைகளின் தலைப்புகள் கட்டுரைகளுக்குரியவை போலத் தோன்றுகின்றன ; ‘காலிழப்பும் பின்பும்’, ‘ஊழியமும் ஊதியமும்’, ‘நாடும் நம்மக்க ளும்’, ‘இடமாற்றலுக்காய்’ ஆகியவை இவ்வாறானவை. 

 // இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கையின் பதிவுதான்! வரலாற்றினை இலக்கியமாகவும் உயர்த்தும் குந்தவையின் ‘யோகம் இருக்கிறது’ பலராலும் பேசப்பட்டு நின்று நிலவும். உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. // என்று நூலின் ‘முன்னீடு’ பகுதியில்  நமது மூத்த எழுத்தாளரான எஸ். பொ. குறிப்பிடுவதும் முக்கியமானதாய்ப்படுகிறது!

 ஆம்! ; மகிழ்ச்சியுடன் நாம் கொண்டாடவேண்டிய ஓர் எழுத்தாளர்தான் நமது குந்தவை என்பதில், எனக்கும் எந்த ஐயமுமில்லை!         

அ. யேசுராசா

11. 10. 2022

ஜீவநதி – (இதழ் 183)
ஐப்பசி 2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More