சர்வதேசமகளிர்தினம்– மார்ச் 8:
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(பெண்கள் உயர்வின் வெற்றியில் எங்கள் சங்க தமிழ் இலக்கியங்களும்- வடமொழி இலக்கியங்களும் எத்தகைய வகிபாகம் வகித்தன என்பதனை அலசும் ஆய்வே இதுவாகும்.)
அடுப்போடு வாழ்ந்த பெண்கள் நெருப்பாய் எழுந்த – சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாளாகும்.
அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடிய பெண்களின் தினமே மார்ச் 8.
உரிமைக்காகபோராடியபெண்கள்:
1908 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாதாரண பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் இதுவாகும்.
பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் முதல்படி. முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பொருளாதார சுதந்திரம் வேண்டியே 1910ல் கோபன்ஹேகனில் நகரில் மார்ச் 8ஐ உலக உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார் சோசலிச பெண்ணுரிமைப் போராளியான கிளாரா ஜெட்கின்.
ஆயினும் இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்
அல்லது பெண்ண்டிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதும், பெண்கள் விடுதலையிலும் சமூகவிடுதலையிலும் அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும்.
சமூகவிடுதலையும்பெண்களும்:
பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் மற்றவர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இதனாலேயே பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன.
அம்மாநாட்டில் இயற்றப்பட்ட புரட்சிகர தீர்மானங்களும், சட்டத்திருத்தங்கள் மூலமான உரிமைகளையும் முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. உழைக்கும் பெண்கள் இரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப் பட்டிருக்கின்றன.
இப்படி பெண்கள் உயர்வின் வெற்றியில் எங்கள் சங்க தமிழ் இலக்கியங்களும்- வடமொழி இலக்கியங்களும் எத்தகைய வகிபாகம் வகித்தன என்பதனை அலசும் ஆய்வே இதுவாகும்.
பெண்ணைபோற்றியதமிழ்இலக்கியங்கள்:
உலகம் முழுவதுமே பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் காப்பியங்கள். ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் இலக்கியங்களே ஆகும்.
உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் அக்காலத்தில் இருந்தனர். ஆனால் சங்க காலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.
அன்றைய வடமொழி இலக்கியமான இராமாயணத்தில் இராமன் தன் மனைவியை சந்தேகித்து பதினான்கு வருடம் வனத்தில் தள்ளிய வரலாறும் நாம் கண்டோம்.
ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். இது நளாயினி கதை இது அனைத்தும் வட மொழி இலக்கியங்கள் தான்.
ஆனால் சங்க தமிழ் இலக்கியங்களில் புலியை, யானையை விரட்டிய பெண்களின் வீரமும் போருக்குத் தன் கணவன், மகன் என ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்த பெண்களின் வீரமும் விதந்து போற்றப்பட்டுள்ளன. பெண்கள் போர்க்களத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டமை பற்றிய குறிப்புக்கள் இல்லை. யுத்தம் நிறைவுற்ற பின் போரில் புண்பட்ட வீரர்களை, கணவனை காவல் செய்யும் செய்த வரலாறும் உண்டு.
காப்பியங்களில்தமிழ்ப்பெண்கள் :
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள், தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், ‘அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா’ என வெளிப்படுகிறது சிலப்பதிகாரம்.
அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும்
ஆபாசமாக மிரட்ட வில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். இப்படி வியாபிக்கிறது மணிமேகலை.
தமிழ் மொழி எப்போதுமே பெண்களை உயர்வாகவேவகொண்டாடுவதை இலக்கியங்களில் காணலாம். ஆனால் இதற்கு மாறாக வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவதுடன் ஆணாதிக்க மேலாண்மையை எப்போதும் உயர்த்தி நிற்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் பெண் போராளிகள் சாதித்த வல்லமை உலகின் எந்த இலக்கியங்களிலும் ஒப்பாகாது. அளப்பெரும் தியாகங்களும் ரணகளத்தில் போராடிய
இவர்கள் தமது வீரம் செறிந்த செயற்பாடுகளையும் போரியல் வாழ்வின் கோலங்களையும் பல்வேறு புதிய அனுபவங்களையும் இலக்கியங்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த போர்க்கள இலக்கியத்தில் பெண் கவிஞைகளின் படைப்புகள் உயிர்த்துடிப்பானவை.
“கூவி வந்த எறிகணைக்காய்க்
குனிந்தோம்
அடுத்த செல் வந்து
அதிருமுன்னே விரைந்தோம்
மீண்டும் கையில்
எடுத்த ஆயுதத்துடன்
நடந்தோம்….” என்று
புரட்சிகா எனும் பெண் போராளி கவிஞை உரத்துக் கூவுகிறார்.
ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.
அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.
தமிழ் மொழி எப்போதுமே பெண்களை உயர்த்திக் கொண்டாடுவது வழமை. ஆனால் வடமொழி இலக்கியங்களில் பெண்களை அடிமைத் தனமாக்குவது பற்றியே அதிகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
புற நானூற்றை மிஞ்சிய வடிவமாய்
மனோதைரியத்தையும் விடுதலை வேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாக தம்மை இனங்காட்டுவதோடு, தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாக ஈழப் பெண் போராளிக் கவிஞைகள் மிளிர்ந்துள்ளனர்.
இப் பெண் போராளிகளின் படைப்பைகளில
தாம் எவருக்கும் அடங்கி, அடிமைப்பட்டுப் போகாத, இலக்கை அடைவதையே நோக்காகக் கொண்ட, தமது சுயத்தை இழக்காத தன்மையை அவதானிக்க முடிகின்றது.
உலகம் முழுவதுமே பெண்களைக் ஒடுக்கி வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். பிற்கால ஈழப்போராட்ட களத்தில் பெண் போராளிக் கவிஞைகளாக பலராலும் அதிகம் அறியப்பட்ட, அடையாளப் படுத்தப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி, அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் , காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞனமதி, புரட்சிகா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபிமார்க்கட், தயாமதி, சிரஞ்சீவி, கிருபா போன்றோரின் கவிதைகளும் தமிழ் மண்ணின் வீரத்தை பரணிக்கு பறை சாற்றுகின்றன.
ஈழத்தில் யுத்தகளத்தில் நேரடியாக பங்கு கொண்ட வீரப் பெண்களின் வல்லமையையும் போரிடும் திறமையையும் வீர உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வானதியின் வரிகளாக…
“மழையில் நனைந்து
அடுத்த ஆடை மாற்றாது
பொஸிசனில் நின்றதை
பசி மறந்து தூக்கம் மறந்து
எதிரி எல்லையை மீறுவதெனில்
எம் உடல்கள் மேலாகத்தான் என
உறுதியோடு காவலிருந்ததை கூறுவாயா? என வினவுகிறார்.
இப்படியாக போராளிப் பெண்களின் படைப்புகள் போரியல் வாழ்வினை துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டின.
ஆனால் தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.
ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் காப்பியங்கள்.
வீரமாக போரிட்டு, உலகை வியக்க வைத்த ஈழப் பெண்களின்
உண்மை தற்போது மறைக்கப்பட்டு, கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது. இன்று காதலர் தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்துக்கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆயினும் புறநானூற்றை விஞ்சிய வீரம் படைத்த ஈழப்பெண்களின் வரலாற்றை உலகம் ஒருபோதும் மறவாது. அதற்கு சான்றாக அவர்களின் படைப்புகளே இலக்கிய சான்றுகளாக சாட்சி பகர்கின்றன.
– ஐங்கரன்விக்கினேஸ்வரா