1990 முன் மடு வீதியில் அமைந்துள்ள மடுறோட், புகையிரத நிலையம், இலங்கையின் மிக நீண்டதொரு புகையிரத மேடை கொண்டதாக அமைந்திருந்ததை நாம் அறிவோம். ஒரு நாளில் நான்கிற்கு மேற்பட்ட விஷேட புகையிரதங்கள், அதிக பிரயாண பெட்டிகளை கொண்டதாக மடுவிற்கு வருகைதந்ததும், மடு வீதியில் அமைந்துள்ள தற்காலிக பேரூந்து ஸ்தானத்தில் இருந்து ரயில் இணைப்புச் சேவைகள் மடுக்கோவிலுக்கு நடைபெற்றதும் உண்டு. திருத்தலத்தின் புனிதத்தை பேணுவதற்காக மதுபானம் பாவித்தல், புகைப்பிடித்தல், போதைப்பொருள் பாவித்தல், துர்நடத்தையில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது, கேளிக்கைகள், களியாட்டங்கள், மடு நிர்வாகத்தினால் முற்றாக தடைசெய்யப்பட்டு மடுத்திருத்தலம் உணவு, உடை, உறையுள், பக்தி, பரவசம் போன்றவற்றிற்கு மாத்திரம் உட்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அயல்கிராமங்களில் உள்ளவர்கள் நேர்த்திக்கடனுக்காக இரண்டு, மூன்று, நாட்கள் கால் நடையாக நடந்து கூட்டம் கூட்டமாக “ஆவே ஆவே மரியா” “வாழ்க வாழ்க மரியே” (மருதமடு மாதாவே) என்னும் கீதத்தைப்பாடிக்கொண்டு மடுத்திருப்பதியை வந்து அடைவதை தற்போதும் காணக்கூடியதாகவுள்ளது. மடு கிராமசேவகர் பிரிவு சுமார் 28.93 சதுர கி.மீ இடப்பரப்பை கொண்டுள்ளது. இதில் மடுத்தேவாலயம், மடுபெருங்காடு, கொக்குடையான், சின்னப்பண்டிவிரிச்சான், போன்ற இடங்கள் அடங்கும், 8 சதுர கி.மீ இடப்பரப்பில் அமைந்துள்ள அடர்ந்த காட்டினில் கொடிய விலங்குகளின் மத்தியில் மடுமாதா எழுந்தருளி இருப்பதினால். மடுமாதாவை கானகத்தின் கன்னி என அழைப்பர். 2010 இல் மடுத்திருத்தலத்திற்கு மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 1சதுர கி.மீ பரப்பிற்கு புனிதபூமி மின் ஒளியினால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
திருவிழாக்காலங்களில் காலை 5.00 மணியானதும், திரிகால மணி அடித்து விடுதிகள் தோறும் கேட்கும்படி ஒலிபெருக்கி மூலம் திரிகாலச்செபம் சொல்லப்படும். மக்கள் பாவனைக்காக குடிநீர் குழாய்மூலம் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகிக்கப்படும். காலை 5.30 மணி தொடக்கம் 7.30 மணி வரை அடுத்தடுத்து திருப்பலி பூசைகள் நடைபெறும். கோவில்களிலும் ஆறு (06) சிற்றாலயங்களிலும் உள்ள பன்னிரண்டு பீடங்களில் நாற்பது குருமார்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். பாவசங்கீர்த்தனம் காலை 8.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையிலும் பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 7.00 மணிவரை மும்மொழிகளில் கேட்கப்படும். 1993ல் மடுகோவிலின் பரிபாலகராக இருந்த வண. பிதா பி.ஜேசுராஜா அடிகள் 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் படங்களை மடுக்கோவிலின் வளாகத்தில் அமைத்து பக்தர்களின் ஆன்மீக தாகத்தை தீர்த்து வைத்தார், 2005ம் ஆண்டில் வண. பிதா பிலிப் அடிகளாரினால் மடுத்திருத்தலத்தின்; மேற்கு எல்லையின் சின்னப்பண்டிவிரிச்சான் சந்திக்கு அருகாமையில் சிறிய நுழைவாயில் ஒன்று அழகுற அமைக்கப்பட்டது. சமாதானத்தை வேண்டி அணையா தீபம் ஒன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களினால் மடுமாதாவின் உள் பீடத்தில் 2003ம் ஆண்டு ஏற்றி வைக்கப்பட்டது.
1999ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம் மடுக்கோவில் பகுதியை கைப்பற்றும் முகமாக போராளிகளுடன் செல்தாக்குதலில் ஈடுபட்டபோது, மடு அன்னையின் சிற்றாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொது மக்கள் 43 பேர் பலியாகிய துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்றது. இதன்பின் ஆயர் அவர்களினால் கோவில் மந்திரிக்கப்பட்டு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது. போரின் உச்ச கட்டத்தில் 2008 ஆரம்பப்பகுதியில், போராட்டத்திற்காக இளைஞர்களை சேகரிக்க தொடங்கிய காலப்பகுதியில் வயது வந்த ஆண், பெண், இளைஞர், யுவதிகளை வைத்திருக்கும் தாய்மார்கள், மரியன்னையை நம்பி தமது பிள்ளைகளை அக்காலத்தில் மடு பரிபாலகராக இருந்த வண. பிதா எமிலியானுஸ்பிள்ளையிடம் கையளித்திருந்தனர். இப்படியாக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை இரவு, பகலாக பாதுகாத்த பெருமை மடுமாதாவிற்கே உண்டு.
2010ம் ஆண்டில் சிலுவைப்பாதை ஸ்தலங்களின் சிலைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவை மன்னார் ஆயரினால் ஸ்தாபிக்கப்பட்டன. இலங்கையின் 2வது கருதினாலான அதி. உயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் 15-08-2011 காலப்பகுதியில் மடுத்திருப்பதியை தரிசித்து தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். நவநாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், மடுத்திருப்பதி அரசியல் மயப்படுத்தலின்கீழ் உல்லாசப் பயணிகளை கவரும் உல்லாசபுரியாக, சந்தைப்படுத்தல் இடமாக மிளிர்வதை இலங்கை கத்தோலிகத் திருச்சபை என்றுமே விரும்பவில்லை. பக்தர்களின் நலன்கருதி மடுக்குளம் ஆழமாக்கப்பட்டு கூடிய மழைநீரை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மடு ஆலயத்தைச் சுற்றி பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கிணறுகள், குளத்தின் வரம்பிற்குள்ளும் ஏனைய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. 1983 இல் இலங்கை அரசினால் (By Late Hon President Premadasa) ஆயிரம் மலசல கூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
மேலும் பக்தர்களின் நலன்கருதி நூற்றுக்கு மேற்பட்ட நிரந்தர, தற்காலிக விடுதிகள் ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. போரின் பின் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு மீள்குடியேறியமையினால் சின்னப்பண்டிவிரிச்சான், பெரியபண்டிவிரிச்சான், தட்சணாமருதமடு, மடுறோட், போன்ற மடுவை அண்டிய கிராமங்களில் தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக் காலப்பகுதியில் மன்னார் மக்கள் மடுத்தேவாலயத்திற்கு மடுவீதியினால் செல்வதற்கு முதலில் அனுமதிக்கப்பட்டு, பின் தடைசெய்யப்பட்டது. பயணிகளின் வசதிக்காக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் மடுவீதியில் பிரயாணிகள் தங்கும் மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தது.
மடுவீதியின் நுழைவாயிலின் அருகாமையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மடு அன்னையின் திருச்சுரூபம் (marble statue) அவ்வீதியால் போகும் பாதசாரிகளுக்கும்இ பக்தர்களுக்கும் ஓர் கலங்கரை விளக்காகத் திகழ்கின்றது. 2009ம் ஆண்டுகளில் மடுவீதியின் நுழைவாயில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மடுத்தேவாலயத்தின் வரைபடத்தை ஒத்த நுழைவாயில் ஒன்று பெரும் பணச்செலவில் ஸ்தாபிக்கப்பட்டு மன்னார் ஆயரினால் 2011 இல் திறந்துவைக்கப்பட்டது. 2010ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் மடுவின் சுற்றாடலின் சில பகுதியை சரணாலயம் என வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தி இருப்பதனால் மடுபரிபாலனம் மடுக்கோயிலின் எல்லையை மீள் பரிசீலனை செய்யவேண்டியள்ளது. போரின்பின் அரசாங்கத்தினால் ஆயரின் அனுசரனையுடன் 2009-2011 ஆம் காலப்பகுதியில், மடுத்தேவாலயம் புனரமைக்கப்பட்டதுடன், மடுக்கோவிலைச் சுற்றியுள்ள (பிரதான) வீதிகள் செப்பனிடப்பட்டு, சீமெந்துக் கற்களினால் நடைபாதை போடப்பட்டு மின்னொளி ஊட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன.
2010-2011 ஆம் காலப்பகுதியில், தெற்கிலுள்ள பெருந்திரளான யாத்திரியர்கள் குழுக்களாகவும், தனித்தும், நாளாந்தம் மடுத்தேவாலயத்தை தமது ஆன்மீக தேவைக்காக தரிசிக்கின்றனர். ஒரு நாளில் ஏறத்தாழ ஜந்து வாகனங்களும், 200 ற்கு மேற்பட்ட பக்தர்களும், மடுவை தரிசிப்பதாக நாள் ஏடுகள் குறிப்பிடுகின்றன.
2011 ஆம் ஆண்டு இறுதியில் 21 வருடங்களின் பின், மடு புகையிரத நிலைய மீள்கட்டுமான பணிகள், அரசாங்கத்தினால் இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 1990 இல் இடம்பெயர்ந்து சென்ற சிங்கள, முஸ்லீம், தமிழ் மக்கள், மீண்டும் மடுவை அண்டியள்ள பிரதேசங்களில் வந்து குடியேறத் தொடங்கினர். இருப்பினும் மடுத்தேவாலயத்தின் தனித்துவமான இயற்கை வன, சுற்றாடல், கடந்த 500, வருடங்களுக்கு மேலாக மாறுபடாமல் அமைதியும், பக்தியும், சூழ்ந்த இடமாக இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் ….
Mr.Peter Sinclair | Project Consultant & Trainer | மன்னாரிலிருந்து
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/madumatha-1/
http://www.vanakkamlondon.com/madumatha-2/
http://www.vanakkamlondon.com/madumatha-3/