செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 20 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 20 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 20 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 20 | மகாலிங்கம் பத்மநாபன்

7 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

பயிற்சிக் கலாசாலை வாழ்க்கை மிகவும் இனிமையானது தான். க.பொ.த (சா.தரம்), அல்லது க.பொ.த (உ.தரம்) முடிந்த கையோடு கலாசாலை வருபவர்களுக்கு கற்றலும் இலகு. மகிழ்ச்சியும் அதிகம். எம்மைப் போல ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் களத்தில் நின்று சேவையாற்றி, சேவை அனுபவம் பெற்று, சம்பள அதிகரிப்பிற்காக வருபவர்களுக்கு அதே அளவு மகிழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.

ஆனாலும் எமது ஆசிரிய வாழ்வில் இந்த இரண்டு வருடங்களும் வித்தியாசமானவை தான். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பத்திரிகை வெளியீடுகள், நாடகப் பயிற்சிகள் என்று எம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டோம். விரிவுரையாளர்களும் எமக்கு பல வகையிலும் உதவியாக இருந்தார்கள்.

எங்களில் பலர் திருமணமானவர்கள். பலருக்கு  குழந்தைகளும்  இருந்தன. எனவே குடும்ப கடமைகளும் இருந்தன. எனவே, திருமணமானவர்களுக்கு மனைவி/கணவன் இன் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் பயிற்சி மகிழ்ச்சிகரமாக அமையும். பலருக்கு அந்த ஒத்துழைப்பு  இருந்தது. ஓரிருவர் அந்த ஒத்துழைப்பு கிடைக்காது துன்பப்பட்டதையும் கண்டோம். அதிஸ்டவசமாக சுசி எனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தார்.

திரு. அலெக்ஸ்ஸான்டர் என்ற நண்பர், நாங்கள் இருந்த வீட்டிற்கு அயலில் மனைவியுடன் இருந்தார். திரு.நாகேந்திரசீலன், சற்று தூரத்தில் குடும்பமாக இருந்தார். நாங்கள் திரு. அலெக்ஸ்ஸான்டர் வீட்டிற்கும் திரு. நாகேந்திரசீலன் வீட்டிற்கும் அவர்கள் எங்கள் வீட்டிற்கும் விசிற்(visit) பண்ணுவது வழக்கம். திரு. மாணிக்கவாசகருக்கு சொந்த இடம் வசாவிளானுக்கு அண்மையிலுள்ள வளலாய் என்ற ஊர் ஆகும்.

இந்த இடத்தில் வசாவிளான் பெற்றெடுத்த தமிழ் அறிஞரைப் பற்றி குறிப்பிடுதல் பொருத்தமானது. பெருமதிப்பிற்குரிய ‘கல்லடி வேலன்’ என்று அழைக்கப்பட்ட திரு. வேலுப்பிள்ளை பிறந்த ஊர் வசாவிளான். இவரது பாடல்கள் புனையும் ஆற்றலாலும், தென்னாலி இராமன் போன்று, சந்தர்ப்பத்திற்கேற்ப பதில் சொல்லும் ஆற்றலாலும் இலங்கைத் தமிழர் மத்தியில் புகழ் பெற்றவர். இரண்டு சந்தர்ப்பங்களை மாத்திரம் கூறிவிட்டு, எனது கட்டுரையை தொடர்கின்றேன்.

cinema1

கல்லடி வேலன் ஒருமுறை தியேட்டர் ஒன்றுக்கு சினிமா படம் பார்க்கப் போனார். அங்கு, கதிரையில் இருப்பவர்களுக்கான கட்டணம் ரூபா 1.25 என்பதை, கதிரை ஒன்று ரூபா 1.25 எனவும் வாங்கிலிருப்பவர்  ஒருவருக்கான கட்டணம் 50 சதம் என்பதை, வாங்கு ஒன்று 50 சதம் என்றும் எழுதப்பட்டிருந்தது. வேலர் ஒரு கதிரைக்கான சீட்டைப் பெற்றுக் கொண்டார். படமும் முடிந்தது. எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியேறினர்.

அப்போது கல்லடி வேலன் ஒரு கதிரையை தலையில் சுமந்தபடி வெளியே வந்தார். தியேட்டர் முகாமையாளர் “ஏன் ஐயா, கதிரையை தூக்கிக்கொண்டு செல்கின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு கல்லடி வேலன் கதிரை ஒன்று ரூபா1.25 என்று எழுதியிருந்ததையும் காட்டி ரூபா 1.25 இற்கான சீட்டையும் காட்டினார். முகாமையாளர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

கல்லடிவேலன் சாட்சி சொல்வதற்காக அடிக்கடி நீதிமன்றம் செல்வது வழக்கம். இதனை அவதானித்த நீதவான் ஒருவர், கல்லடிவேலரிடம், “நீர் இனி மேல் சாட்சி சொல்ல நீதிமன்றம் வரக் கூடாது” என்று சொல்வதற்குப் பதிலாக “கல்லடிவேலர், நான் இனி இந்த நீதிமன்றத்தில் உமது தலைக் கறுப்பைக் காணக்கூடாது” என்று கூறினார். கல்லடிவேலர் அடுத்த முறையும் நீதிமன்றம் சென்றார். கோபமடைந்த நீதவான் கல்லடிவேலரைப் பார்த்து “நான் உங்களை நீதிமன்றம் வரக்கூடாது என்று சொன்னேன் அல்லவா? பிறகு ஏன் வந்தீர்கள்” என்று கேட்டார்.

கல்லடிவேலர் மிகவும் பணிவாக” இல்லை ஐயா, இந்த நீதிமன்றத்தில் என்னுடைய தலைக் கறுப்பைக் காணக்கூடாது என்று தான் கூறினீர்கள். அதனால் நான் தலையை இந்தச் சட்டியினால் மூடி வந்தேன்” என்று தனது தலையை மூடியிருந்த சட்டியைக் காட்டினார். நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி, அங்கு கூடியிருந்தவர்களுடன் சேர்ந்து நீதவானும் சிரித்து விட்டார்.

இப்போது கல்லடிவேலர் இல்லை. நாங்கள் அவசரமாக யாழ்ப்பாண பஸ்சில் செல்வதற்காக, சில வேளைகளில் அவரது காணிக்கு குறுக்கால் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் அந்த அறிஞரின் ஞாபகமாக, அந்த காணியில் எவ்வித நினைவுத்தூபிகளோ, நினைவு மண்டபங்களோ இல்லாத நிலையை எண்ணி வருந்துவேன்.

உயர் திரு. கந்தசாமி அவர்கள் எங்கள் அதிபர். உயர் திரு. கனகலிங்கம் உப அதிபர். உயர் திரு. இரத்தினவேல் எங்கள் கணித துறைத் தலைவர். திரு. சிவானந்தநாயகம், திருமதி. அரிராஜசிங்கம் ஆகியோர் கணித விரிவுரையாளர்கள். பண்டிதர் திரு. சச்சிதானந்தன் தமிழ் விரிவுரையாளர். திரு. நல்லையா, திரு.R.S. நடராஜா ஆகியோர் கல்வியியல், கல்வி உளவியல் விரிவுரையாளர்கள்.

எனக்கு வைத்தீஸ்வராவில் உயிரியல் கற்பித்த திரு. சித்திரவடிவேல் அவர்கள் விஞ்ஞானபாட விரிவுரையாளர். திரு. பொன் முத்துக்குமாரன் சமயபட விரிவுரையாளர். உடற்கல்வியும் சுகாதாரமும் கற்பித்தவர் வசாவிளானைச் சேர்ந்த திரு. அருட்பிரகாசம். திரு. சண்முகலிங்கம் அவர்களும் கணித விரிவுரையாளராக இருந்தார். இவர்கள் யாவரும் ஒருங்கிணைந்து எங்களை வருங்காலத்தின் சிறந்த ஆசிரியர்கள் ஆக்குவதற்கான தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தார்கள்.

சுசியும் நானும் தீபாவுடன் வசாவிளானில் குடியேறி விட்டோம். எனக்கு அவசரமாக ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. நானும் ஜெகநாதனும் சைக்கிள் வாங்க யாழ்ப்பாணம் சென்றோம். எனக்கு ஆஸ்மா இருந்தபடியால், ஜெகநாதன் வாங்கிய புதிய சைக்கிளை வசாவிளானுக்கு ஓடி வர, நான் பஸ்சில் திரும்பினேன்.

ஜெகநாதனின் நட்பு எனக்கு பயிற்சி முழுவதும் பெரும் உதவியாக இருந்தது. ஜெகநாதன் நாங்கள் கலாசாலை செல்லும் வழியில், தபாலதிபரின் ஒரு வீட்டில் இரண்டாம் வருட மாணவர்களுடன் தங்கியிருந்தார். நான் ஒவ்வொரு நாளும், அவரிடம் சென்று, அவரையும் அழைத்துக் கொண்டு கலாசாலை செல்வது வழக்கம். ஜெகநாதனின் இந்த நட்பு, இப்பொழுது அடிக்கடி சந்திக்காத போதும், அதே போன்று தொடர்கின்றது.

2010_09_29_2_8

உறவினரான பரமசாமி அண்ணருடைய மகன் கருணாகரன் அப்போது, வசாவிளான் மகாவித்தியாலயத்தில் ஹோஸ்ரலில் தங்கி க.பொ.த. (உ.தரம்) கற்று கொண்டிருந்தார். சில வார இறுதி நாட்களில், அவர் தனது நண்பன் சிவநாதனுடன் எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் வர முடியாத சந்தர்ப்பத்தில், சுசி பொதி செய்து தரும் உணவை, நான் பாடசாலைக்கு கொண்டு சென்று கொடுத்து வருவேன்.

மாமா, கமலா அன்ரியின் கணவர், அப்போது இராணுவத்தின் தொண்டர் பிரிவில் இருந்தார். அவர் பலாலி இராணுவ முகாமில் இருந்தார். வார இறுதி நாட்களில் அவரை வரச் செய்து, சாப்பிடப்பண்ணி அனுப்புவோம்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் ஐயா, அம்மாவும், அதே போன்று மாமா, மாமியும் எங்களையும் வசாவிளானில் வந்து பார்த்து விட்டு செல்வார்கள். அவர்களுடன் சில வேளைகளில் சுந்தர், மணி பிள்ளைகளும், மாமாவுடன் சுசியின் சகோதரிகளும் வருவதுண்டு.

1 (1)

விருந்தினர் வரும் நாட்களில், மயிலிட்டிக்கு சென்று, வள்ளங்களால் இறக்கப்படும் உடன் மீன்கள் வாங்கி வருவேன். அடிக்கடி உறவினர்கள் வந்து போனதால் நாங்கள் ஒரு போதும் தனிமையாய்   உணர்ந்ததில்லை.                             நாங்கள் தொடர்ந்தெடுத்த சாவி, கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளும் நிர்மலா, அரசகுமாரி ஆகியோரின் நட்பும் சுசிக்கு பொழுது போக்க உதவியாக இருந்தன.

நான் வெளியே போகும் வேளைகளிலெல்லாம் தீபா சைக்கிளில் ஏறி இருந்து விடுவாள். நானும் அவளும் தோலைகட்டி பண்ணைக்கு போய் நெல்லிரசம் வாங்கி வருவோம். சிஸ்டர்மாரின் மடத்திற்கு சென்று முட்டை, மரக்கறி வாங்கி வருவோம். அதனால் சிஸ்டர்மாருக்கு, தீபா செல்லப் பிள்ளையாக மாறி விட்டாள். அவர்கள் அவளுக்கு நெல்லிக்காய்கள் கொடுத்து விடுவார்கள்.

சிலவேளைகளில் விரிவுரையாளர்கள் வராத சந்தர்ப்பங்களில் நாங்கள் இரகசியமாக கடதாசி விளையாடுவதுண்டு. சாதாரண 304 விளையாடுவதில் நண்பர்களுக்கு விருப்பமில்லை. மூளைக்கு பயிற்சி தரும் பிரிட்ஜ்(Bridge) விளையாட்டை விளையாடுவோம் என்று செல்வச்சந்திரன், ரவீந்திரன், அலெக்ஸ்ஸான்டர் ஆகியோர் கருதினார்கள். அவர்களுக்கு அந்த விளையாட்டு ஓரளவு தெரிந்திருந்தது. யாவரும் நூலகத்தில் Bridge பற்றிய புத்தகங்களை எடுத்து படிக்கத்  தொடங்கினோம்.

ஓரளவு பிடிபட்டதும் முதலிலேயே விளையாடிப் பழகிய நண்பர்களுடன் விளையாடிப் பழகினோம். தோடர்ந்து புத்தகங்களை வாசித்துப் பார்த்து, விளையாடிப் பழகியதால் எங்களில் பலருக்கு அந்த விளையாட்டு இலகுவான விளையாட்டாக மாறிவிட்டது. நாங்கள் விளையாட்டை ஒரு பொழுது போக்காக வைத்திருந்தாலும், எமது கல்வியில் மிகவும் கவனமாக இருந்தோம்.

இப்படி கல்வி சிறப்பாக தொடர்ந்த பொழுது விஞ்ஞானபாடம் கற்க விஞ்ஞான ஆய்வுகூடம் சென்றோம். அங்கே எனது வைத்தீஸ்வரா ஆசான், திரு.சித்திரவடிவேல், தான் எங்கள் விரிவுரையாளர். அவர் எங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துமாறு கூறினார். ஒவ்வொருவரும் தமது பெயர், ஊர், தாம் கற்ற பாடசாலை ஆகியவற்றை வரிசையாக சொல்லி வந்தனர்.

அப்போது அவர் கண்ணில் நான் பட்டுவிட்டேன். வரிசையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, என்னை எழுப்பி விட்டார். “பத்மநாபன், வைத்தீஸ்வரா” என்று நான் கூறியதை தாமும் ஒரு முறை கூறியவர், பின்னர் வரிசைப்படி ஏனையவர்களை அறிமுகப்படுத்தச் செய்தார். அன்று தொடங்கியது ஒரு சிறிய பிரச்சனை. அதன் பின்னர் வினாக்களை வினாவும் போது எல்லாம், கட்டாயமாக என்னிடமும் ஒரு வினா கேட்கப்படும்.

அதனால், விஞ்ஞான பாடத்தில் அதிக ஆர்வமின்றியிருந்த நான் அந்த பாடத்தை, கட்டாயமாக நன்கு கற்று வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் இறுதிப் பரீட்சையில் நல்ல பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டேன். வைத்தீஸ்வரா ஆசிரியர்கள் எல்லோருமே பொதுவாக அப்படித்தான் இருந்தார்கள். தங்கள் பாடசாலையில் படித்தவர்கள் போகுமிடமெல்லாம் பேரெடுக்க வேண்டும் என்றே விரும்பினார்கள்

நாங்கள் கடதாசி விளையாடும் செய்தி எங்கள் அதிபரின் காதுகளுக்கு போய் விட்டது. அவரும் எங்களை கையும் மெய்யுமாக பிடிப்பதற்கு பலமுறை முயன்றார். நாங்கள் அயல் வகுப்பாருடனும் எங்கள் வகுப்பில் எல்லோருடனும் நன்கு பழகியபடியால், அதிபர் வரும் செய்தி எங்களுக்கு முதலே தெரிந்து விடும். அதனால் ஒரு நாளும் பிடிபடவில்லை.

si-bridge

ஒவ்வொரு வருடமும் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளுடன் உள்ளக விளையாட்டு போட்டிகளும் (Indoor Games) நடைபெறுவது வழக்கம். நாங்கள் எட்டு சோடிகள் Bridge போட்டிக்கு எங்கள் பெயரைப் பதிவு செய்தோம். போட்டிக்கு அனுமதி கிடைத்தது. Table Tennis, Chess போன்ற போட்டிகளுடன் Bridge போட்டியும் சினிமா ஹோலில் நடைபெற்றது. Chess சம்பியனாக ஜெகநாதன் தெரிவு செய்யப்பட்டார். Runner up ஆக அலெக்ஸ்ஸான்டர் வந்தார். Bridge சம்பியன்களாக நானும் மாணிக்கவாசகரும் தெரிவானோம். Runners Up ஆக ரவீந்திரனும் செல்வசந்திரனும் தெரிவானார்கள்.

பரிசளிப்பு நாளும் வந்தது.எங்கள் பெயர் அறிவிக்கப்பட்டு நாங்கள் நால்வரும் மேடையில் நின்றோம். பார்வையாளர்கள் வரிசையில் முன்னுக்கு விரிவுரையாளர்களும் பின்னால் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களும் இருந்தார்கள். அதிபர் எங்கள் சான்றிதழ்களைத் தந்துவிட்டு, “கடதாசி  விளையாடுபவர்களை பிடிப்பதற்கு இவ்வளவு நாளும் முயன்றேன். முடியவில்லை. இன்று சாட்சிகளுடன் பிடிபட்டு விட்டார்கள்” என்று சொல்லிச் சிரித்தார். சபையும் கை தட்டிச் சிரித்தது. எங்கள் பாடு திண்டாட்டமாய் போய்விட்டது.

அடுத்த ஆண்டு நாங்கள் கணித மன்ற வெளியீடான “எழில்” இனை வெளியிட்ட பொழுது, Bridge விளையாட்டு மட்டுமல்ல, ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் செய்யக் கூடியவர்கள் தான் என்பதை யாவரும் உணர்ந்திருப்பார்கள்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-19-01-19-17/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.