செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்… பத்திரம்!

அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்… பத்திரம்!

3 minutes read

“சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்… செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ – இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும்கூட, இதில் சிறிதளவு உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை… என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது. செல்போன் தரும் பாதிப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

செல்போன்

செல்லுலார் டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications and Internet Association – CTIA) கணக்குப்படி, ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பொதுவாகவே, அழைப்புகளின்போது, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி (Radio-Frequency) எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளியாகும். இது, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று. செல்போனில் இருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. எப்போதெல்லாம் இந்த ரேடியேஷன் பாதிப்புகள் ஏற்படும்… அதிகளவு ரேடியேஷன் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தும் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதே நம்மைப் பல பிரச்சனைகளில் இருந்தும் காக்கும்.

* எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும். செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது.

* அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் மொபைலைவைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

* செல்போன் அருகில் டவர் இருக்கும்போது, சிக்னல் வீக் ஆக இருக்காது. அது போன்ற நேரத்தில் ஆற்றலும் அதிகம் தேவைப்படாது. ஆற்றல் தேவை குறையும்போது, ரேடியேஷன் பாதிப்பும் குறையத் தொடங்கும். சில நேரங்களில், டவர் அருகில் இருந்தும், சிக்னல் பாதிப்பு ஏற்படலாம். `சிக்னல் ட்ராஃபிக்’ என இதைக் கூறுவார்கள். இந்த நேரங்களில், ஆற்றல் தேவை அதிகரித்து, ரேடியேஷன் பாதிப்பும் அதிகரிக்கும்.

 

என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

* அதிகமாக மொபைல் உபயோகிப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை. அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.

* சுத்தமில்லாத கையால் செல்போனை உபயோகித்தால், கைகளின் மூலம் பாதிப்பு செல்போனுக்குப் பரவி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.

* கண்கள் பாதிப்பு… செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை கண் பாதிக்கப்படுவது. பொதுவாகவே, அதிகமான வெளிச்சம் சிறிய ஸ்கிரீனில் இருந்து வெளிவரும்போது, கண்ணின் தசைகளுக்கு வலி எடுக்கத் தொடங்கும். முடிந்த வரை கண்களுக்கு மிக அருகில்வைத்து, மொபைல்போனைப் பார்க்காமல் இருப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக்கொள்வது சிறந்தது.

* தொற்றுநோய் அபாயம்… நம்மைவிட செல்போனே விரைவில் கிருமிகளால் ஈர்க்கப்படும். நாம் செல்லும் அனைத்து இடங்களுக்கும் மூன்றாவது கையாக கூடவே வருவது இதுதான். நாம் போகும் இடங்களில் உள்ள நோய்க் கிருமிகள் இதன்ன் மூலமாகவே நமக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். இது சாதாரண தலைவலி முதல் புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்தும். செல்போனைப் பயன்படுத்தும் கையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. பெர்சனல் ஹைஜீன் எப்போதும் இதற்குத்தான் அவசியம் தேவை.

* தசை நார்களில் பாதிப்புகள்… அதிகமாகவும் நீண்ட நேரமாகவும் மொபைலில் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், விரல்களை அசைக்க முடியாதநிலையும்கூட ஏற்படலாம்.

* உடல் வலியை உண்டாக்கும்… சரியான போஸ்ச்சர்களில் மொபைல்போன்களைப் பயன்படுத்த வெண்டும். இவற்றை நாம் நம்முடைய வசதிக்கேற்றாற்போல் அமர்ந்து, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு பயன்படுத்துகிறோம். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகும்.

* கம்ப்யூட்டர் விஷன் சிண்ரோம் என்னும் தலை மற்றும் கண் வலியை உண்டாக்கும்.

* நினைவாற்றைலைப் பாதிக்கும்… அனைத்து தகவல்களையும் கையில் இருக்கும் இந்தச் சிறிய சுறுசுறுப்பு மூளையில் பதிவேற்றிவிடுகிறோம். இது, எந்த ஒரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை உணராமல் இருக்கச்செய்யும். இதனால், ஒரு செயலை உள்வாங்கும் திறன் / கண்காணிப்புத் திறனில் குறைபாடு ஏற்படும்.

செல்போன்

* மனநோய்க்கு வழிவகுக்கும்… தன்னிச்சையாக செல்போனுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நோமோஃபோபியா (Nomophobia) என்னும் மனநோயை உண்டாகும். உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே, செல்போனைப் பார்க்கும் பழக்கம், அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம், நம்மைவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம், அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் (இந்தச் சமயங்களில் ஸ்க்ரீனில் உள்ள நேரம், தேதிகூட நம் நினைவில் இருக்காது), தன்னிச்சையாக மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம்… போன்றவை.

* பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.

* மனஅழுத்தத்துக்கு மகான்… செல்போன்கள். இதை அதிகம் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாமல் இருந்தால் ஒருவித மனஅழுத்தம் உண்டாகும். மீண்டும் செல்போனைப் பயன்படுத்தாமல் இருக்கும் வரை மனச்சோர்வு மற்றும் கோபத்தை உண்டாக்கும்.

* ஒபிசிட்டிக்கு வழிவகுக்கும்… உடல் உழைப்பைக் குறைக்கும். உடல் எடையை அதிகரிக்கும்.

* அதிகமாக இதை உபயோகிப்பது, தூக்கமின்மையை ஏற்படுத்தும். இரவு வேளையில் அதிக நேரம் உபயோகிப்பது மனஉளைச்சலுக்கு வழிவகுக்கும்.

 

நன்றி : ச. மோகனப்பிரியா | ஜெ. நிவேதா | ஆனந்த விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.