Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை யாழ் விமான நிலைய தமிழ்ப் பதாகைகள் சர்ச்சை: என்.சரவணன்

யாழ் விமான நிலைய தமிழ்ப் பதாகைகள் சர்ச்சை: என்.சரவணன்

9 minutes read

 

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான, யாழ்ப்பாண விமான நிலலயம் பலாலியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவிட்டதாக தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சை இப்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
சிங்கள பௌத்த வாக்குகளை இலக்கு வைத்த இனவாத வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு ஆயுதமாகவே  இதனைப் கையிலெடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மகிந்தவாத சக்திகளாள அதிகமாக இந்தப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி சிங்கள வாசகர்களுக்கு பரப்பப்பட்டது.
முதன்முதலில் இதனை செய்தியாக வெளியிட்ட நெத் வானொலி நிறுவனத்தின் (NethGossip.lk) இணையத்தளத்தில் (17.10.2018) “இந்த பெயர்ப்பாதகைகளில் இந்த நாட்டின் பிரதான மொழியான சிங்கள மொழியில் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு தமிழில் காணப்படுவதால்…” என்று தொடர்கிறது.
“நெத்”தின் படி இலங்கையில் பிரதான மொழியென்று ஒன்று உண்டு. ஆனால் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதான மொழியென்று ஒன்றும் கிடையாது.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.
அரசியலமைப்பில்
அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.
1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.
அதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.

”சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்”

என அரசியலமைப்பு கூறுகிறது.
தென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.
வடக்கைப் பொறுத்தளவில் 93வீத தமிழ் மொழி பேசுவோர் வாழும் இடங்களில் தமிழில் முதல் விளக்கம் இருப்பதை எந்த அளவுகோல் கொண்டு மறுக்க முடியும். அப்படியும் அதை மறுக்கின்ற போக்குகானது பச்சை இனவாதமின்றி வேறென்ன?
வடக்கைப் பொறுத்தளவில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டம் உட்பட முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய சேர்த்து மொத்தம் ஐந்து மாவட்டங்களை உள்ளடங்கியது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் வடக்கில் மொத்த சனத்தொகை 1,143,000 அதில் தமிழர்கள் 995,975 அதாவது 93.8%. முஸ்லிம்கள் 32,796 (3.1%), சிங்களவர்கள் 31,985 (3%).
அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் எச்சரிக்கைப் பதாகைகள் கூட சீன, ஆங்கில, சிங்கள மொழிகளில் மட்டும் தான் இடப்பட்டிருந்தது. தமிழில் எந்த எச்சரிக்கையும் இல்லை என்பது மட்டுமன்றி சீன மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதியாக மகிந்தவின் ஆட்சி காலம் என்பதால் இதனை எவரும் தட்டிக்கேட்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.
மேலும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோட்டபாயவின் யாழ்ப்பாண கிளையின் அலுவலகத்தின் முகப்பு பதாகையில் கூட தமிழில் தான் முதலில் உள்ளது.
மகிந்த ஆட்சியில் பெருந்தொகை கடன்பெற்று கட்டப்பட்டு இன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மத்தள விமான நிலையத்தின் பதாகை சிங்களத்திலும் இல்லை தமிழிலும் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் உண்டு.
அதுமட்டுமல்ல தியவன்னா  வாவி சூழப்பட்ட இன்றைய பாராளுமன்ற வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற எச்சரிக்கைப் பலகையில் “வாவியில் முதலைகள் இருப்பதால் கவனம்” என்கிற வசனம் சிங்களத்தில் மட்டும் தான் காணப்படுகிறது. “சிங்கள மொழி தெரியாதவர்கள் செத்தே போங்கள்” என்று அர்த்தம் கொள்ளலாமா?
ஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road”  என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாளிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதைக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன்  அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.  சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்
அரச போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான “அம்பாறை – கண்டி” போக்குவரத்து சேவையில் இருந்த பஸ்சொன்று “கண்டி” என்பதற்குப் பதிலாக “குண்டி” என்கிற பெயர்ப்பலகையுடன் பல காலமாக சேவையில் இருந்ததை சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.
நிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.
மகிந்த வாதிகளின் எதிர்ப்பு
இதே விமல் வீரவன்ச இதற்கு முன் தமிழில் தேசிய கீதம் பாடுப்படுவதை எதிர்த்து ஏதோ முதல் தடவையாக கண்டது போல தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆக்ரோசமாக கத்தியதை பல ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட காலம் தொட்டு சிங்களத்தைப் போலவே தமிழிலும் ஏக காலத்தில் பாடப்பட்டத்தையும், அரசாங்கப் பள்ளிக்கூட தமிழ் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் தமிழில் தேசிய கீதம் பல வருட காலமாக அச்சிடப்படுவதும், தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதையும், இலங்கையின் அரசியலமைப்பின் தமிழ் பிரதியில் தேசிய கீதம் ஒரு அத்தியாயமாக இருப்பதையும் அறியாதவராக இருந்திருக்கிறார். அதே போலத் தான் 6 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழியே நிர்வாக மொழி என்பதும் தெரியாமல் இருந்திருக்கிறது.
அல்லது வசதியாக அந்த உண்மைகளை மூடி மறைத்து சிங்கள பேரினவாதத்தை உசுப்பேத்தி அதில் அரசியல் லாபமடையும் முயற்சி என்றே நாம் கொள்ள முடியும்.
35 ஜனாதிபதி வேட்பாளர்களில் இந்த இனவாதப் பிரச்சாரத்தை பகிரங்கமாக அதுவும் சிங்கள மொழியிலேயே அம்பலப்படுத்தி கண்டித்த ஒரே நபர் ஜே.வி.பியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க தான்.

“இவ்வாறு மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளிடம் தேசிய ஐக்கியத்தையோ தேசிய பாதுகாப்பையோ எதிர்பார்க்க முடியுமா” என்றார் அநுரகுமார.

தமிழ் மொழி அமுலாக்கம் விடயத்தில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி  ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. இப்படி அரச தரப்பில் தமிழ் மொழியானது இன்னமும் பாரபட்சமாகவே இருப்பதும் அந்த மீறல் எந்த எதிர்ப்புமின்றி, கேட்பாருமின்றி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் நிலையில் இப்படி “சிங்கள மொழி” பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்கிற போலி குற்றச்சாட்டு மோசமான கடைந்தெடுத்த இனவாதம் மட்டுமே.
நன்றி – தினக்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More