ரசிய -உக்ரைன் போர் ஓராண்டு கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாசி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரசியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புடின் மக்களுக்கு உரையாற்றினார். இதையடுத்து, பல மாதங்களுக்குபின், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முத் நகரில் ரசியப்படைகள் கடுமையாக தாக்கின.
உக்ரைனின் பக்முத் நகரில் நடைபெற்ற தாக்குதலில், ஃபிரெஞ்ச் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். அர்மன் சோல்டின் AFP செய்தி நிறுவனத்திற்காக உக்ரைனில் செய்தி சேகரித்து வந்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் சண்டையின் மையப்பகுதியான பக்முத் நகரின் புறநகரில் உள்ள சாசிவ் யார் அருகே ராக்கெட் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
அர்மன் சோல்டினுடன் இருந்த சக ஊழியர்கள் 4 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். தாக்குதலின்போது பத்திரிகையாளர்கள் அனைவரும் உக்ரைன் வீரர்களுடன் இருந்ததாக AFP செய்தி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.