காஸாவில் கடந்த 6 வாரங்களில் நிவாரணப் பொருள்களை பெற, அவை வழங்கப்படும் இடங்களுக்கு வந்த சுமார் 875 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவில் இயங்கும் Gaza Humanitarian Foundation (GHF) அமைப்பின் தளங்களில் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், தனது தளங்களில் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என GHF தெரிவித்துள்ளது. ஐ.நா அமைப்பு தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
இதை ஐ.நா மறுத்துள்ளது. நம்பகமான வழியில் தகவல்களைப் பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
GHF, தனியார் அமெரிக்க விநியோக நிறுவனங்கள் மூலம் நிவாரணப் பொருள்களைக் காஸாவுக்கு கொண்டு செல்கிறது. இது நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்யும் முறை பாதுகாப்பற்றது என்றும் அது மனிதாபிமான முறைகேடு என்றும் ஐ.நா குறைகூறுகிறது.
இருப்பினும், 5 வாரங்களில் காஸாவில் சுமார் 70 மில்லியன் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்திருப்பதாக GHF தெரிவித்துள்ளது.