விலைவாசி அதிகரித்துள்ளதாக தெரிவித்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக மக்கள், நேற்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் பதவி விலகும்படி மக்கள் கோஷமிட்டனர்.
Dataran Merdeka சுதந்திரச் சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக நடந்திருக்கும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும்.
எதிர்த்தரப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர்களான டொக்டர் மகாதீர் முகமது மற்றும் முஹிதீன் யாசின் ஆகியோரும் கலந்துகொண்டு, உரையாற்றியிருந்தனர்.
மலேசிய பிரதமர் அன்வார் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விலைவாசி அதிகமாக உள்ளது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300,000 பேர் கூடுவர் என்று எதிர்த்தரப்பு PAS கட்சி எதிர்பார்த்தது. ஆனால், 15, 000 பேர் மட்டுமே திரண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.