நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதிகளில் இந்த குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்பகுதிகளில் வசிப்போர் பீதியடைந்துள்ளனர்.
நோர்வே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அந்த பகுதியைச் சுற்றி வளைத்த அவர்கள், தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு வெடிக்காமல் இருந்த கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர்.
அங்கு சுற்றித்திரிந்த சந்தேகநபர்கள் மூவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஒஸ்லோ பொலிஸ் தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறியதாவது; “மத்திய ஒஸ்லோ பகுதியில் குண்டு வெடித்துள்ளது. தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த இடம், தற்போது முழு பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.
பிஸ்லெட் ஸ்டேடியத்தில் இருந்து கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
காரில் இருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
குண்டுகள் வெடித்த பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்றும் அருகில் உள்ளவர்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் சம்பவ இட பகுதி மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.