ஹமாஸ் போர்நிறுத்தத்தின் மீறல்களை செய்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, காசாவில் புதிய வான்வழித் தாக்குதல்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதால், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் போர்நிறுத்தத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன.
இஸ்ரேல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே, காசா மற்றும் டீர் அல் பாலாவில் (Deir al Balah) வெடிப்பு சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்கள், அகதிகள் முகாம், அல்-ஷிஃபா மருத்துவமனை மற்றும் ஒரு வீட்டை குறிவைத்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸால் நடத்தப்படும் காசாவின் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், சப்ரா மாவட்டத்தில் 4 பேரும், கான் யூனிஸில் (Khan Younis) ஒரு காரில் 5 பேரும் இறந்ததாகத் தெரிவித்தனர்.
நெதன்யாகு, ஓஃபீர் ட்ஸார்ஃபதி (Ofir Tzarfati) என்பவரின் எச்சங்கள் ஹமாஸால் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், அந்த எச்சங்கள் ஏற்கெனவே ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலம் காசா பகுதியிலிருந்து மீட்கப்பட்டவை ஆகும். இந்தச் செயல் “ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியது” என்று அவரது அலுவலகம் கூறியது.
பாதுகாப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு, பிரதமர் நெதன்யாகு இராணுவ உயரதிகாரிகளுக்கு உடனடியாக காசா பகுதியில் “சக்திவாய்ந்த தாக்குதல்களை” மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance), போர்நிறுத்தம் “நீடித்து வருகிறது” என்று கூறியுள்ளார். “இங்கும் அங்கும் சிறிய சண்டைகள் நடக்கப் போவதில்லை என்று அர்த்தம் இல்லை” என்றும், ஹமாஸ் அல்லது காசாவிற்குள் உள்ள வேறு யாரோ ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைத் தாக்கியதால் இஸ்ரேலியர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், ஆனால் அதிபரின் அமைதி நிலைக்கும் என்றும் அவர் நம்புவதாகவும் கூறினார்.
ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு 125 முறை விதிமீறல்களைச் செய்ததாகவும், அதன் விளைவாக 94 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 344 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேல் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க உண்மையான அழுத்தத்தைக் கொடுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற நாடுகள் தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று ஹமாஸ் அழைப்பு விடுத்தது.