உள்நாட்டு விமான நிறுவனமான ஈஸ்டர்ன் ஏர்வேஸ் (Eastern Airways) தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. மேலும், அதன் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிராந்திய சேவைகளை இங்கிலாந்து முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து இயக்கி வந்த இந்த விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், விமானங்கள் இயங்காததால் விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (CAA) வலியுறுத்தியுள்ளது.
இந்த விமான நிறுவனம் பறந்த இடங்களுள் அபர்டீன், ஹம்பர்சைட், லண்டன் கேட்விக், நியூக்வே, டீசைட் இன்டர்நேஷனல் மற்றும் விக்கி ஆகியவை அடங்கும்.
ஈஸ்டர்ன் ஏர்வேஸ் வாடிக்கையாளர்கள் மற்ற விமான நிறுவனங்கள், ரயில் அல்லது கோச் ஆப்பரேட்டர்கள் மூலம் தங்கள் சொந்த மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திங்கட்கிழமை காலை ஈஸ்டர்ன் ஏர்வேஸ் (UK) லிமிடெட் நிறுவனம் உயர் நீதிமன்றத்திற்குள் (High Court) உள்ள இன்சால்வென்சி மற்றும் கம்பெனிகள் நீதிமன்றத்தில் ஒரு நிர்வாகியை நியமிக்கும் நோக்கம் குறித்த அறிவிப்பை தாக்கல் செய்தது.
CAA இன் நுகர்வோர் மற்றும் சந்தை இயக்குனர் செலினா சாதா, ஈஸ்டர்ன் ஏர்வேஸ் வாடிக்கையாளர்கள் சமீபத்திய தகவல்களுக்கு சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டின் இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈஸ்டர்ன் ஏர்வேஸ் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில், இலண்டன் மற்றும் வடகிழக்கு ரயில்வே (London and North Eastern Railway), ஸ்காட்ரைல் (ScotRail), டிரான்ஸ்பென்னைன் எக்ஸ்பிரஸ் (TransPennine Express) மற்றும் நோர்தர்ன் (Northern) ஆகிய ரயில் நிறுவனங்கள் ஈஸ்டர்ன் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வழித்தடங்களில் இலவச நிலையான வகுப்பு பயணத்தை வழங்கும் என்று இங்கிலாந்து சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி தெரிவித்துள்ளது.
இந்த ஆதரவைப் பெற, ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் ஈஸ்டர்ன் ஏர்வேஸ் ஊழியர் அடையாள அட்டை, போர்டிங் பாஸ் அல்லது விமான உறுதிப்படுத்தலை நிலைய ஊழியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.