பிலிப்பைன்ஸில் குறைந்தது 114 பேரைக் கொன்ற ‘கல்மேகி’ புயல், தற்போது அதிகரித்து வரும் காற்றின் வேகத்துடன் மத்திய வியட்நாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
வியட்நாம் வானிலை பணியகத்தின்படி, இந்தப் புயல் 8 மீட்டர் (26 அடி) வரை உயரமான அலைகளைக் கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடலோர சமூகங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்மேகி இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாகும். இது ஏற்கெனவே கடந்த வாரத்தில் சாதனை மழையுடனும், கொடிய வெள்ளத்துடனும் போராடி வரும் பிலிப்பைன்ஸில் மேலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அன்று, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசியப் பேரிடர் நிலையை பிரகடனம் செய்தார்.
புயலால் ஏற்பட்ட பெரும்பாலான இறப்புகள் நீரில் மூழ்கியதாலேயே நிகழ்ந்துள்ளன. இந்தப் புயல் சேற்று நீரின் வெள்ளத்தை மலைப்பகுதிகளிலிருந்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குள் கொண்டு சென்றது.
இப்பகுதியின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபுவில் (Cebu) மட்டும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. செபுவில் மேலும் 127 பேர் காணவில்லை மற்றும் 82 பேர் காயமடைந்துள்ளனர்.