பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், அந்த நாட்டின் முதல் பெண் பிரதமருமான கலீதா ஷியா (Khaleda Zia) காலமானார். அவருக்கு வயது 80 ஆகும். இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணியளவில் அவர் உயிரிழந்ததாக பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1991 முதல் 1996 வரையும், பின்னர் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஷியா பங்களாதேஷின் பிரதமராக பதவி வகித்தார். நீண்ட காலமாக நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர், பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருந்த 2026 பிப்ரவரி பொதுத் தேர்தலில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் அவரது கட்சி முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. எனினும், சென்ற மாத இறுதியில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடுமையான கல்லீரல் பாதிப்பு, மூட்டுவலி, நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக BNP தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சிக்காலத்தில், 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் கலீதா ஷியா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024ஆம் ஆண்டு ஹசினாவின் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கலீதா ஷியாவின் மறைவுக்குப் பின்னர், அவரது மகன் தாரிக் ரஹ்மான் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று வரவுள்ள தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.