அமைதித் திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ஈரான் நாட்டில் “எதுவும் மிச்சமில்லாமல் போகலாம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரானுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காலம் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையைத் தீர்க்க விரைவான முடிவுகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கடந்த ஆறு வாரங்களாக நீடித்து வரும் யுத்தநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு செல்லக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) உடன் டிரம்ப் தொலைபேசியில் முக்கிய ஆலோசனைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஈரானின் அணு திட்டம் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், எதிர்கால இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தீர்மானங்கள் குறித்து தனது தேசிய பாதுகாப்புக் குழுவினரை டிரம்ப் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.