இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் சார்லஸ் தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
அரச குடும்பத்தின் நிதிநிலை மற்றும் செலவினங்கள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் மற்றும் ஆய்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அரச மரபின் அடிப்படையில், மன்னர்கள் சட்டரீதியாக சில வகை வரிகளை செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்றிருந்தாலும், பல தசாப்தங்களாக அரச குடும்ப உறுப்பினர்கள் தாமாக முன்வந்து சில வரிகளை செலுத்தி வருகின்றனர்.
அதேவேளை, அவர்களது தனிப்பட்ட வரி விவரங்களை பொதுமக்களிடம் வெளியிட வேண்டிய கட்டாயம் இதுவரை இருந்ததில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ தொடர்பான அண்மைய சர்ச்சைகள், அரச குடும்பத்தின் நிதி விவகாரங்கள் குறித்த பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
இதனையடுத்து, தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளிப்படையாக பகிரும் முதல் இங்கிலாந்து மன்னராக மன்னர் சார்லஸ் வரலாற்றில் இடம்பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, அரச குடும்பத்தின் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.