இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், மக்களின் வாழ்வாதாரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒற்றை வழி பஸ் பயணக் கட்டணம் £2-ஆகக் குறைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் 2027 ஜனவரி 1 முதல் தொடங்கி அந்த ஆண்டு முழுவதும் அமலில் இருக்கும்.
இலண்டன் மாநகரம் தனது சொந்தக் கட்டண வரம்பைக் (£1.75) கொண்டுள்ளதால், இந்த £2 உச்சவரம்பு இலண்டன் தவிர்ந்த பிற பகுதிகளுக்குப் பொருந்தும். இந்தத் திட்டத்துக்கு £500 மில்லியனுக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என்றும், இதற்கான நிதி எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத் துறையிலிருந்து (DESNZ) மறுஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாடச் செலவுகளைக் குறைக்க, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு வீட்டு உபயோக மின்சாரக் கட்டணத்துக்கான வாட் (VAT) வரி 5%-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதன்மூலம் ஒரு குடும்பம் சராசரியாக £45 வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்றைய அரசின் டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) திட்டத்தை இரத்து செய்ததன் மூலம் இதற்கான நிதி திரட்டப்படும் என அரசு கூறியுள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை (£12,570) உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், தற்போது அந்தத் திட்டத்திலிருந்து பிரதமர் பின்வாங்கியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெருக்களில் வசிப்பவர்களின் நிலையை முடிவுக்குக் கொண்டு வர £340 மில்லியன் ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செயலாளர் ஹெய்தி அலெக்சாண்டர், சர்வதேச காலநிலை திட்டங்களுக்கான மானியங்களைக் கடன்களாக மாற்றுவதன் மூலம் பஸ் கட்டணக் குறைப்பிற்கான நிதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணக் குறைப்பு தங்களுக்கு மாதம் £20 வரை சேமிப்பைத் தரும் எனச் சில பயணிகள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், லிபரல் டெமக்ராட் கட்சியினர் இந்தக் கட்டணத்தை £1ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில், இந்தத் திட்டம் பஸ் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சாதகமானது என்றும், கார் ஓட்டுபவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பர்ன்ஹாம் தனது அரசாங்கத்தை ஒரு வாழ்வாதாரச் செலவு குறைப்பு அரசாங்கமாக வழிநடத்தப்போவதாகத் தனது அமைச்சரவையிடம் தெரிவித்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.