இங்கிலாந்தின் எசெக்ஸ் (Essex) பகுதியில் உள்ள வெஸ்ட் மெர்சியா (West Mersea) கடல் அலையில் சிக்கி சிறுமியும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சீவியூ அவென்யூ (Seaview Avenue) அருகே உள்ள கடல் பகுதியில் பல நபர்கள் சிக்கித் தவிப்பதாக புதன்கிழமை மாலை சுமார் 5.35 மணிக்கு அவசர கால சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது.
மீட்புப் பணிகளில் கடலோர பாதுகாப்புபடை, RNLI, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ், பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த கடல் விபத்தில் சிக்கிய மூன்றாவது நபர் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடல் அலையில் சிக்கிய இந்த மூவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று எசெக்ஸ் பொலிஸ் அதிகாரி அல் பிட்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் போது கடற்கரையில் இருந்தவர்கள் அல்லது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் கடலில் அலைகளின் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக கடினமான சூழல் நிலவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சர் பெர்னார்ட் ஜென்கின் இந்தச் சம்பவத்தால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
வெஸ்ட் மெர்சியா கடற்கரை பொதுவாகப் பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டாலும், அங்கிருக்கும் கடல் நீரோட்டங்கள் ஆபத்தானவை என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது என்று உள்ளூர் கவுன்சிலர் கார்ல் பவுலிங் தெரிவித்துள்ளார்.
தற்போது கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு வளையம் (Cordon) அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் நினைவாக கடற்கரையில் மலர்கள் வைக்கப்பட்டுள்ளன.