இலண்டன், ஹீத்ரோ விமான நிலையத்தின் மூன்றாவது ஓடுதளம் அமைப்பதற்கான ஆரம்பகட்டச் செலவுகளை ஈடுகட்ட, விமான நிறுவனங்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க, அந்நாட்டு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
விமான நிலையத்தின் இந்த முடிவால், எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் ஒரு பயணச்சீட்டின் விலை சுமார் 15p வரை உயரக்கூடும் என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 30p வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஓடுதளத் திட்டத்தின் தொடக்கக்கால திட்டமிடல் மற்றும் வடிவமைப்புக்காகச் செலவிடப்பட்ட சுமார் 320 மில்லியன் பவுண்டுகள் வரையிலான தொகையை பயணிகளிடமிருந்து வசூலிக்க, சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (CAA) அனுமதி வழங்கியுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்துக்குப் போட்டியாக மாற்றுத் திட்டத்தை முன்வைத்த ‘அரோரா குழுமம்’ (Arora Group), தனது திட்டத்துக்காகச் செலவழித்த 4.1 மில்லியன் பவுண்டுகளைத் திரும்பப் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டம் பயணிகளுக்குப் பயணத் தேர்வுகளை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று ஹீத்ரோ விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஹீத்ரோ ஏற்கெனவே உலகின் விலையுயர்ந்த விமான நிலையங்களில் ஒன்றாக இருப்பதாக விமான நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், இந்த விரிவாக்கத்தால் சுற்றுச்சூழல் மாசு, இரைச்சல் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகள் ஏற்படும் என ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விரிவாக்கத் திட்டம் குறித்த இறுதி முடிவை 2029ஆம் ஆண்டுக்குள் எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடல் பணிகளுக்கானது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.