செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

3 minutes read

லங்கா பிறீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில்  மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமைத்துவத்தை ஸ்டொக்ஹோம் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளையாட்டு உரிமை நிறுவனமான அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி (Anchor Sports AB) நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸஹீர் கான் மற்றும் தொழில் அதிபர் நாகேந்திரா சித்தௌதம் ஆகியோரைச் இணை உரிமையாளர்களாகக் கொண்டு Anchor Sports AB நிறுவனம் இயங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

இதற்கமைய, இனிவரும் நாட்களில் ஜெவ்னா கிங்ஸ் அணி  அங்கர் ஜெவ்னா கிங்ஸ் என்ற பெயருடன் எல்.பி.எல் தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெவ்னா கிங்ஸ் அணியின் முந்தைய உரிமையாளரான ‘ஸ்போர்ட்ஸ் கொம்யூன்’ (Sports Comune) நிறுவனத்தின் இணை உரிமையாளரும், இந்தியாவின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட அணி வீரருமான மன்ஜோத் கல்ரா, ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜூலை 23ஆம் திகதி ஜெவ்னா கிங்ஸ் அணி உரிமையாளர்களின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டது. இந் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் எல்.பி.எல் தொடரின் உரிமைதாரரான ஐ.பி.ஜி நிறுவனம் ஆகியவற்றின் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் ஜெவ்னா கிங்ஸ் அணி கொண்டுவரப்பட்டது. தற்போதைய இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜெவ்னா அணி மீண்டும் ஒரு நிலையான உரிமையாளரின் கீழ் செயல்படவுள்ளது.

பெல்ஜியத்தின் இயூரோப்பியன் ரி20 பிரீமியர் லீக் தொடரில்  ஏன்ட்வேர்ப் அங்கர்ஸ் (Antwerp  Anchors அணியையும், கனடாவில் சுப்பர் 60 லீக் தொடரில் விளையாடும் வான்கூவர் அங்கர்ஸ் Vancouver Anchors ஆடவர் மற்றும் மகளிர் அணிகளையும் Anchor Sports AB நிறுவனம் ஏற்கனவே சொந்தமாகக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஜெவ்னா கிங்ஸ் அணியும் தற்போது இந்தச் சர்வதேச விளையாட்டுப் பட்டியலில் இணைந்துகொண்டுள்ளது.

எல்.பி.எல் தொடரின் அங்குரார்ப்பண அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியான திறமையையும், வெற்றிகளையும் வெளிப்படுத்தி வரும் ஜெவ்னா கிஙஸ் அணி, இதுவரை நிறைவடைந்துள்ள ஐந்து அத்தியாயங்களில் நான்கு தடவைகள்  சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி லீக்கின் முன்னணி அணியாகத் திகழ்கிறது.

நடப்பு அத்தியாயத்திலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும்  ஜெவ்னா கிஙஸ் அணி, இரண்டு கட்டங்களைக் கொண்ட லீக் சுற்றில் 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தது. பானுக்க ராஜபக்ஷவின் தலைமையில், இந்த ஆண்டும் எல்.பி.எல் சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய பலமான அணிகளில் ஒன்றாக ஜெவ்னா கிங்ஸ் அணி உருவெடுத்துள்ளது.

இந் நிலையில், எல்.பி.எல். தொடருடன் இணைவதில் பெருமை அடைவதாகத் அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், ஐ.பி.ஜி நிறுவனம், வீரர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து ஜெவ்னா கிங்ஸ் அணியின் வெற்றியை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி கூறியுள்ளது.

இதனிடையே,  நிறுவனத்தை வரவேற்றுப் பேசிய எல்.பி.எல் தொடரின் உரிமைதாரரான ஐ.பி.ஜி  நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன், ‘ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமையாளராகியுள்ள  அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி  நிறுவனத்தை எல்.பி.எல். குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த லீக்கின் ஆறு ஆண்டு கால வரலாற்றில் 4 முறை சம்பியன் பட்டங்களை வென்று, ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஜெவ்னா கிங்ஸ் அணி திகழ்கிறது.   அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி  நிறுவனம் இந்த அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தை மேலும் முன்னெடுத்துச் சென்று, புதிய தொலைநோக்குப் பார்வையையும் ஆற்றலையும் கொண்டு வந்து லங்கா பிறீமியர் லீக்கின் தரத்தை உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி  உரிமையாளர் நாகேந்திரா சித்தௌதம் கருத்து வெளியிடுகையில், ‘இது எங்களுக்கு ஒரு முக்கியமான படியாகும். வளமான கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும். மேலும்  மிகக் குறுகிய காலத்தில் எல்.பி.எல். ஒரு சிறந்த, போட்டித்தன்மைமிக்க லீக்காக உருவெடுத்துள்ளது. நாங்கள் உலகளவில் கட்டமைத்து வரும் சர்வதேச அங்கர் பிணையத்தின் ஓர் அங்கமாக அங்கர்ஸ் ஜெவ்னா கிங்ஸ் அணி இருக்கும். ஜெவ்னா கிங்ஸ் அணியில் முதலீடு செய்வதிலும், லீக்கின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்காற்றுவதிலும் நாங்கள் ஆவலாக உள்ளோம்’ என்றார்.

அங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி நிறுவனத்தின் இணை உரிமையாளர் ஸஹீர் கான் தெரிவித்ததாவது: ‘இலங்கையிலிருந்து உருவாகும் பந்துவீச்சாளர்கள், அவர்களின் புதுமை மற்றும் வித்தியாசமான நுட்பம் ஆகியவற்றைப் பல காலமாக நான் வியந்து பார்த்திருக்கிறேன். நான் வந்து விளையாடிய, அருமையான நினைவுகளைக் கொண்ட ஒரு நாடு இலங்கை. தற்போது அணி ஒன்றின் உரிமையாளராக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மாறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜெவ்னா கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்’ என்றார்.

இதேவேளை, லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமன்த தொடங்வெல தெரிவிக்கையில், ‘ஸஹீர் கான் போன்ற ஒரு சிறந்த வீரர் ஜெவ்னா அணியின் உரிமையாளராக இணைந்திருப்பது இந்த லீக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய பலமாகும். இளம் இலங்கை வீரர்களுக்கு அவர் அளிக்கும் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் களத்தின் உள்ளேயும் களத்துக்கு வெளியேயும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.