இலங்கையில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கைதிகள் மூவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் இருவர் பலி
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஆரம்பமான அமைதியின்மை, இன்று காலை ( 07) மீண்டும் தீவிரமடைந்தது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்ததோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு கருதி வைத்தியசாலையில் இருந்த நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மெகசின் சிறைச்சாலை கலவரம்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் போதைப்பொருள் பொதி ஒன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கைதி ஒருவர் கைது செய்யப்பட்டதே, இந்தக் கலவரத்துக்கு உடனடித் தூண்டுதலாக அமைந்துள்ளது.
சுமார் 40 கைதிகள் வன்முறையில் ஈடுபட்டிருந்த நிலையில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) வரவழைக்கப்பட்டு, நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்லன்சேன சீர்திருத்த மையத்தில் பதற்றம்
இதேவேளை, பல்லன்சேன சீர்திருத்த மையத்திலும் தற்போது ஓர் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிறைச்சாலை மோதல்கள், அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு எதிர்வினையாகப் பார்க்கப்படுவதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.