செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் நீர் கட்டண அதிகரிப்பால் சர்ச்சை: கண்காணிப்பகத்துக்கு வரும் முறைப்பாடுகள் 84 சதவீதத்தால் அதிகரிப்பு

நீர் கட்டண அதிகரிப்பால் சர்ச்சை: கண்காணிப்பகத்துக்கு வரும் முறைப்பாடுகள் 84 சதவீதத்தால் அதிகரிப்பு

1 minutes read

இங்கிலாந்தில் நீர் விநியோக நிறுவனங்களின் கட்டண உயர்வு மற்றும் அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, நுகர்வோர் கண்காணிப்பகத்துக்கு வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஓராண்டில் 84 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

நீர் பாவனையாளர்களுக்கான கண்காணிப்பு அமைப்பான நீர் நுகர்வோர் பேரவை (CCW), தனது 20 ஆண்டுகால வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த வருடாந்த அதிகரிப்பு இதுவெனவும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் கடுமையான அதிருப்தியை இது வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் உள்ள நுகர்வோர் அண்மைய வருடங்களில் பாரிய கட்டண உயர்வை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நீர் விநியோக நிறுவனங்கள் கட்டணங்களை 36 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள ஒழுங்குமுறை அமைப்பான ஒப்வாட் (Ofwat) அனுமதி வழங்கியுள்ளது.

நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘வோட்டர் யூகே’ (Water UK) அமைப்பு, கட்டண உயர்வு ஒருபோதும் வரவேற்கத்தக்கதல்ல என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அத்தியாவசிய உட்கட்டமைப்பு நவீனமயமாக்கல் பணிகளுக்கு இந்த நிதி இன்றியமையாதது எனத் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பகமான CCWக்கு கிடைத்த மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் 8,235ஆக இருந்த நிலையில் 2025-26 காலப்பகுதியில் 15,115ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கிடையே, கண்காணிப்பகத்தை நாடுவதற்கு முன்னர் நீர் நிறுவனங்களிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் 56 சதவீதத்தால் அதிகரித்து 321,347ஆகப் பதிவாகியுள்ளது. அளவிடப்பட்ட கட்டண முறைமை, கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் கட்டண நிர்வாகப் பிரச்சினைகள் ஆகியனவே CCWக்கு கிடைத்த முறைப்பாடுகளில் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்கில், கடந்த மாதம் 13 நிறுவனங்களுக்கு கட்டணங்களை அதிகரிக்க ஒப்வாட் அனுமதியளித்தது.

இவற்றில் தேம்ஸ், செவர்ன் ட்ரென்ட், சதர்ன் வோட்டர், வெசெக்ஸ் வோட்டர் மற்றும் சவுத் ஈஸ்ட் வோட்டர் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு ஏற்கனவே 2024 இல் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை, நுகர்வோர் பேரவையின் தலையீடு இன்றியே 94 சதவீதமான முறைப்பாடுகள் ஆரம்பக் கட்டத்திலேயே தீர்க்கப்பட்டு வருவதாகவும், நுகர்வோர் பணத்தின் பயன்பாட்டை வெளிப்படைத்தன்மையுடன் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வோட்டர் யூகே அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.