இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அதாவது ஐந்தாண்டுகளில் ஒரு கோடி மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், பருவ நிலை மாறுபாடுகளையும் மனதில் கொண்டு பொது மக்கள் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், ஆளும் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாத்திரம் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதியளித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்திய மக்களவையில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 1,09,75,844 மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் 2018 – 2019ஆம் ஆண்டில் மாத்திரம் 26.19 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் இந்த மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
காட்டுத் தீ மூலம் எரிந்த மரங்கள் குறித்த புள்ளிவிவரங்களும், வெட்டப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இல்லை. கடந்த 2014-2015ஆம் ஆண்டில் மாத்திரம் 23.30 லட்சம் மரங்களும், 2015-2016ஆம் ஆண்டில் 16.90 லட்சம் மரங்களும், 2016-2017ஆம் ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டன. 2017-2018ஆம் ஆண்டில் 25.50 லட்சம் மரங்களும் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் மத்திய அரசு, ஐந்தாண்டுகளில் கோடிக்கணக்கான மரங்களை வெட்ட அனுமதியளித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க நமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறதா? என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, கேள்வி எழுப்பியுள்ளார்.