நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களிலும் தலையிட்டதாக அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டோலி, பிரதமரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ராப் ராஜினாமா செய்துள்ளார்.
டொமினிக் ராப் ராஜினாமா குறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “நான் இன்னமும் டொமினிக் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் அறிக்கை குறித்து நான் கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது” என்றார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர் டொமினிக் ராப் மீது குடிமைப் பணியியல் அதிகாரிகள் சிலர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
டொமினிக் ராப் தங்கள் மீது அதிகார துஷ்பிரயோகப் பயன்படுத்துவதாகவும், இதனால் சில நேரங்களில் அவருடனான ஆலோசனைக் கூட்டங்களுக்கு முன்னர் தங்களுக்கு உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு சுதந்திரமான குழு அமைக்கப்பட்டது. ராப்பும் விசாரணைக் குழுவின் முடிவுகளை மதிப்பேன் என்றும் குற்றச்சாட்டு நிரூபணமானால் நான் ராஜினாமா செய்வேன் என்றும் கூயிருந்தார்.
இந்நிலையில், ராப் தன்மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துவந்தார். தான் நீதித்துறை செயலாளராக இருந்தபோதும், வெளியுறவுச் செயலாளர் மற்றும் ப்ரெக்ஸிட் செயலாளராக இருந்தபோதும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.
பிரிட்டனில் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அவரது அமைச்சரவையிலிருந்து வெளியேறும் மூன்றாவது முக்கியப் புள்ளி டொமினிக் ராப் என்பது குறிப்பிடத்தக்கது.