செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கில் விகாரைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெக்கக்கேடானது

கிழக்கில் விகாரைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெக்கக்கேடானது

3 minutes read

மட்டக்களப்பு எல்லை கிராமமான வடமுனை நெலுகல் மலையில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத இரா. சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தபோது கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு இன்று குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுவது வெட்கக்கேடான விஷயம் என  மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் ஈபி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று புதன்கிழமை (5) இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட கட்சி இணைப்பாளர் சிவானந்தராஜா, அம்பாறை மாவட்ட கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், மட்டக்களப்பு மாவட்ட கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த அந்தனிசில் ராஜ்குமார் மேலும் கூறுகையில்,

இன்று உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி ஆட்சி செய்துவரும் சில பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மக்களுடைய வரிப்பணத்தில் அரசியல் செய்கின்ற ஒரு கேவலமான நிலைக்கு வந்துள்ளது.

அண்மையில் களுவாஞ்சிக்குடியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தவிசாளர், இது என்னுடைய பணம், என்னுடைய வீதி, என்னுடைய சபை என தெரிவித்தது ஊடகங்களின் ஊடாக பார்த்தோம்.

இது அவருடைய முப்பாட்டனார் சொத்து அல்ல, மக்களின் வரிப்பணம். இந்த வீதி திறப்பு விழாவுக்கு சபையின் வாகனத்தில் செல்கிறபோது செலுத்தப்படும் வாகனத்துக்கான டீசல் மக்களுடைய வரிப்பணம் என்பதை பிரதேச சபை தவிசாளர்கள் மறந்துவிடக்கூடாது.

இன்று ஆட்சியை கைப்பற்றிய  பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

மட்டக்களப்பு எல்லை கிராமமான கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள நெலுகல் மலையில் 2021ஆம் ஆண்டு நெலுகல் ரஜமல் விகாரை என்ற பெயரில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

அதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரையில் கட்டடம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரருடன் சேர்ந்து  முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைத்து அடிக்கல் வைத்தார்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு இன்று வவுனியாவில் உள்ள குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுகின்றனர். இது  ஒரு வெட்கக்கேடான விஷயம்.

மாவட்டத்தில் உடைந்த மகிழவெட்டுவான் பாலம் இதுவரை புனரமைக்கப்படாதுள்ள நிலையில், மக்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாமல் அல்லற்படுகின்றனர். அவ்வாறே குருமண்வெளிக்கும் மண்டூருக்குமான பாலம், கிரானுக்கும் புலிபாய்ந்த கல்லுக்கும் இடையிலான பாலம் புனரமைக்கப்பட வேண்டும் என்பதுடன் மாவட்டத்தில் பல சிறிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டியுள்ள நிலை இது தொடர்பாக கோரிக்கை வைக்கவில்லை.

இவ்வாறு அவர் வடக்கில் இருந்து கிழக்கிற்கு அதிவேக பாதை அமைக்க வேண்டும் என கோருகின்றார். இதற்கு யார் பணம் வழங்குவது? எனவே, வாயால் வடை சுடும் வேலைகளை விட்டுவிட்டு மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களுக்கு என்ன தேவை இருக்கிறது என உணர்ந்து மக்களுக்கு சரியான சேவைகளை செய்யவேண்டும்.

இதைவிடுத்து கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியலை பார்க்காமல் வடக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளை பார்க்கின்றார். அவரை வட மாகாண மக்கள் தெரிவு செய்யவில்லை. அவரை மட்டக்களப்பு மக்கள் தான் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்  என்பதை அவர் மறந்து விட்டாரா?

அதேவேளை தொடர்ச்சியாக எங்கள் கட்சி  செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தொடர்பான அவதூறாக பேசி வருகிறார். இதற்கு காரணம் இரா.சாணக்கியன் அப்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் இடம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மிதக்கும் ஹோட்டல் அமைக்க அனுமதி கோரினார். அதற்கு அமைச்சர் இதனால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து அந்த அனுமதியை வழங்காது மறுத்திருந்தார். அதன் காரணமாகவே இவ்வாறு அவதூறாக பேசி வருகிறார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மோசடியில் ஈடுபட்டு சட்டவிரோத சொத்து குவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  இந்த சொத்துக்குவிப்பு பட்டியல்  இரா.சாணக்கியன் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அவருக்கு ரணிலால் ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி என நானும் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருக்கின்றேன்.

அந்த ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபா நிதியில் கோட்டை கல்லாற்றில்  பாழடைந்த கட்டடம் ஒன்றுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுத்து சிறிய திருத்த வேலைகள் செய்து அதற்கு யன்னல், கதவுகள் இல்லாத முடிவடையாத  கட்டடத்தை வாடகைக்கு விடப்படும் என விளம்பரப் பதாதை ஒன்று காட்சிபடுத்தபட்டு 50 இலட்சத்தை வீணடித்துள்ளார்.

இதேபோன்று கல்லாறு பாடசாலைக்கு உள்ளக விளையாட்டு கட்டடம் அமைக்க 36 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வெறும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு கட்டடம் பூர்த்தியானதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிட்டு இந்த நிதிகள் பூர்த்தி செய்யப்பட்டதாக நிதி வழங்கியது யார்?

இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் 100 மில்லியன் உண்மையான அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அதேவேளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இப்போது இரா.சாணக்கியன் புகழ்கின்றார் எதற்காக என தெரியவில்லை?

கடந்த காலத்தில் போட்ட டீல் போன்று இப்போது ஜனாதிபதியிடம் உங்கள் டீல்கள் செல்லுபடியாகாது. அவர்கள் கட்டாயமாக உங்களுக்கு எதிரான விசாரணை மேற்கொள்வார் என்று நம்பிக்கையாக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More